Lotion Sunscreen Warning: அழகு சாதன பொருட்கள் குழந்தைகளிடையே ஏற்படுத்தும் பாதிப்பு தொடர்பான ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளை பாதிக்கும் அழகு சாதன பொருட்கள்:
ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக பொது சுகாதாரக் கல்லூரியின் புதிய ஆய்வின்படி, லோஷன்கள், முடி எண்ணெய்கள், ஹேர் கண்டிஷனர்கள், கிரீம்கள் மற்றும் சன்ஸ்கிரீன்கள் போன்ற அழகு சாதன பொருட்களின் பயன்பாடு குழந்தைகளிடையே ஒரு ஆபத்தான விளைவை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட பொருட்களால், குழந்தைகளின் உடலில் தாலேட்ஸ் எனப்படும் நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் ரசாயனங்களின் அதிக அளவில் கலப்பது தெரிய வந்துள்ளது.
”குழந்தைகளின் வளர்சியை பாதிக்கும் ரசாயனங்கள்”
ஆய்வின்படி, ”குழந்தைகளின் இனம் மற்றும் இனத்தின் பூர்வீகம் சார்ந்து, இந்த ரசாயனங்களின் வெவ்வேறு அளவுகள்-அவற்றின் நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் குணங்களுக்கு பெயர் பெற்றவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பிளாஸ்டிக்கின் நெகிழ்வுத்தன்மை மற்றும் நீடித்த தன்மையை மேம்படுத்த தாலேட்ஸ் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன; அவை பல அழகுசாதன பொருட்களிலும் காணப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் உடலின் இயற்கையான ஹார்மோன்களைப் பிரதிபலிப்பது, தடுப்பது அல்லது தொடர்புகொள்வதால், குழந்தைகளின் முக்கியமான வளர்ச்சிக் கட்டங்களில் உடலின் ஹார்மோன்கள் பாதிக்கப்படுவதாக” ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
எச்சரிக்கும் முதல் ஆய்வறிக்கை:
ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார கல்லூரியில் உலகளாவிய மற்றும் சமூக ஆரோக்கியம் பேராசிரியராக உள்ள, மைக்கேல் எஸ் ப்ளூம் என்பவர் தான் இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளராக இருந்துள்ளார். ஆய்வு பற்றி அவர் பேசுகையில், “ சிறு குழந்தைகளால் பயன்படுத்தப்படும் பல்வேறு தோல் பராமரிப்பு பொருட்கள், சிறு குழந்தைகளில் நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் பித்தலேட்ஸை உடலில் ஏற்படுத்துவதாக பரிந்துரைக்கும் முதல் ஆய்வு இதுவாகும்" என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வானது, மருத்துவ பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை உட்பட, அமெரிக்கா முழுவதும் உள்ள 10 வெவ்வேறு தளங்களில் இருந்து நான்கு முதல் எட்டு வயது வரையிலான 630 குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலானது ஆகும்.
ஆய்வு நடந்தது எப்படி?
பரிசோதனை மேற்கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே, குழந்தையின் அடிப்படை தகவல்கள் (இன அடையாளம், பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினம் போன்றவை) சேகரிக்கப்பட்டன. லோஷன்கள், சோப்புகள், ஷாம்புகள், எண்ணெய்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து தோல் பராமரிப்புப் பொருட்களையும், அவர்களின் பரிசோதனைக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு குழந்தையின் உடலில் தடவி, தயாரிப்பு வகையைப் பற்றி முடிந்தவரை துல்லியமாக பட்டியலிடப்பட்டன. அதைதொடர்ந்து, அந்த பொருட்களின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில் தெரிய வந்தது என்ன?
ஆய்வில், "வெவ்வேறு தோல் பராமரிப்பு தயாரிப்புகளின் சமீபத்திய பயன்பாடு மற்றும் தாலேட்ஸ் மற்றும் தாலேட்ஸ்க்கான மாற்று கலவைகளின் அதிக செறிவு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை நாங்கள் கண்டறிந்தோம். குழந்தைகளின் இன மற்றும் இன அடையாளங்கள் மற்றும் பிறக்கும்போதே ஒதுக்கப்பட்ட பாலினம் ஆகியவற்றைப் பொறுத்து, தோல் பராமரிப்புப் பொருட்களின் பயன்பாடு மற்றும் நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் ரசாயனங்கள் ஆகியவற்றுக்கு இடையே வெவ்வேறு இணைப்புகள் உள்ளன” என ப்ளூம் தெரிவித்துள்ளார்.
செய்ய வேண்டியது என்ன?
தொடர்ந்து பேசுகையில், "குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய தோல் பராமரிப்புப் பொருட்களில் நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதை நிவர்த்தி செய்வதற்கான கொள்கைகளை முடிவுகள் தெரிவிக்கின்றன. அதோடு, சாத்தியமான வளர்ச்சி நச்சுப் பொருட்களை தங்கள் குழந்தைகள் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும்” எனவும் ஆய்வு முடிவுகள் வலியுறுத்துவதாக ப்ளூம் எச்சரித்துள்ளார். குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆரம்ப கட்டத்தில் ஹார்மோன் சமநிலை மிக முக்கியமானது ஆகும்.