காய்ந்த மிளகாய் கெடாமல் இருக்க
காய்ந்த மிளகாயை நாம் ரசம் தாளிக்க, துவையல் அரைக்க, பொரியல் செய்ய பயன்படுத்துவோம். இதனால் இதை வாங்கி நாம் வீட்டில் ஸ்டோர் செய்து வைப்போம். ஆனால் இந்த மிளகாயில் இரண்டு வாரங்களில் பூஞ்சை வந்து விடும். அப்படி காய்ந்த மிளகாயில் பூஞ்சை வராமல் இருக்க, அடுப்பில் ஒரு கடாய் வைத்து, லேசான தீயில் வைத்து அதில் மிளகாயை சேர்த்து சிறிது கல் உப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இதை லேசாக ஆற வைத்து டப்பாவிற்குள் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி வைத்தால் காய்ந்த மிளகாயில் பூஞ்சை வராமல் இருக்கும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் சப்பாத்தி மாவு பிசைய
நாம் சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அது பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ளும். இந்த மாவு கறை கடினமானதாக இருக்கும். எனவே இதை தேய்த்து கழுவுவது சற்று கடினமாக இருக்கும். எனவே சப்பத்தி மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க, ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் இதில் கால் டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். இதன் பிறகு இதில் கோதுமை மாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து வழக்கமாக பிசைவது போல் பிசைந்து கொள்ள வேண்டும். இப்படி மாவு பிசைந்தால் பாத்திரத்தில் மாவு ஒட்டாது.
உடையாமல் முட்டை வேக வைக்க
நாம் முட்டையை வேக வைக்கும் போது, அது உடைந்து அதில் இருந்து சதைப் பகுதி லேசாக வெளியே வந்து விடும். இப்படி முட்டை வேக வைக்கும் போது உடையாமல் இருக்க, அந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். இப்படி வேக வைத்தால் முட்டை உடையாமல் வேகும்.
தயிர் பச்சடி தண்ணீர் விடாமல் இருக்க
நாம் லஞ்ச் பாக்ஸிற்கு தயிர் பச்சடி செய்யும் போது அது தண்ணீர் விட்டு விடும். அப்படி தண்ணீர் விடாமல் இருக்க, தயிர் வெங்காயம் போன்றவற்றை சேர்த்து விட்டு, கையால் கலந்து விடாமல் கரண்டி கொண்டு கலந்து விட வேண்டும். இப்படி பச்சடி தயாரிப்பதால் 8 மணி நேரம் ஆனாலும் தயிர் பச்சடி தண்ணீர் விடாது.