உட்கார்ந்தே வேலை செய்வது மற்றும் மன அழுத்தம் நிறைந்த வேலை நேரம் ஆகியவற்றால் வேலைக்கு செல்லும் மக்களிடையே உயர் இரத்த அழுத்த பாதிப்புகள் கவனிக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
உயர் இரத்த அழுத்த பாதிப்புகள்
2021-2022 மற்றும் 2022-2023 ஆண்டுகளில் ஜிண்டால் நேச்சர் க்யூர் இன்ஸ்டிடியூட் (JNI) தொகுத்த தரவுகள் அடிப்படையில், இந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. உயர் இரத்த அழுத்தம் தொடர்பான நிலைகளுடன் அந்த நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பெரிய அளவு உயர்வை இந்த தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. அதில் கூறப்பட்டுள்ள காலப்பகுதியில் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஒப்பிடும்போது, உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் 153.42% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றம் குறிப்பாக கொரோனா லாக்டவுன்களுக்கு பிறகு மக்கள் சாதாரண வாழ்விற்கு திரும்பிய பின்னர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. நியூ நார்மல் வாழ்க்கை எனப்படும் இந்த வாழ்வில் மக்கள் பலருக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகியவற்றை மேற்கொள்ள போதுமான நேரம் கிடைக்காதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
வயது வாரியாக தரவுகள்
வயது வாரியாக இந்த பிரச்னைகளை பார்த்தபோது இன்னும் ஆழமான பகுப்பாய்வுகள் கிடைத்தன. 19-35 வயதிற்குட்பட்டவர்களில், 2021-2022 முதல் 2022-2023 வரை ஆண் நோயாளிகளில் (24 இல் இருந்து 72 ஆக மாறியுள்ளது) 200% மற்றும் பெண் நோயாளிகளில் (4 இல் இருந்து 21 ஆக மாறியுள்ளது) 425% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், 36-50 வயதிற்குட்பட்ட பிரிவில், முந்தைய ஆண்டை விட ஆண் நோயாளிகளில் 171% (196 இல் இருந்து 532 ஆக உயர்ந்துள்ளது) மற்றும் பெண் நோயாளிகளில் 152% (116 இல் இருந்து 293 ஆக அதிகரித்துள்ளது) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 51-70 வயதுக்குட்பட்டவர்களில்தான் இந்த அதிகரிப்பு அச்சுறுத்தும் வகையில் உள்ளது. அதில் ஆண் நோயாளிகளில் 132% (429 இல் இருந்து 994 ஆக அதிகரிப்பு) மற்றும் பெண் நோயாளிகளில் 153% (338 இல் இருந்து 854-ஆக அதிகரிப்பு) பதிவு செய்யப்பட்டது. 70 வயதுக்கு மேற்பட்ட மக்களிலும் அதேபோல உயர் இரத்த அழுத்த வழக்குகள் கணிசமாக அதிகரித்தன, ஆண் நோயாளிகளில் 300% (30 இல் இருந்து 120 ஆக அதிகரித்துள்ளது) மற்றும் பெண் நோயாளிகளில் 154% (24 இல் இருந்து 61 ஆக) உயர்ந்துள்ளது.
மக்களுக்கு உடல்நலனில் குறையும் அக்கறை
இந்தியாவில், உயர் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்கும் நபர்களின் சதவீதம் தோராயமாக 12% ஆகும். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களுக்கு (CVDகள்) முக்கிய பங்காக செயல்படும் இந்த இரத்த அழுத்தத்தின் பாதிப்புகளை குறித்து மக்கள் விழிப்புடன் இல்லை என்பதை இது காட்டுகிறது. ஜிண்டால் நேச்சர்க்யூர் இன்ஸ்டிடியூட் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பபினா என்.எம், இந்த கண்டுபிடிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கையில் "கோவிட் காலத்தில் அல்லது லாக்டவுன் முடிந்த பின்னரும் கூட, மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி அக்கறை கொண்டிருந்தனர் மற்றும் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை தீவிரமாகப் பின்பற்றினர். ஆனால் இப்போது மக்கள் எந்த உடல் பயிற்சியும் இல்லாமல் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் தங்கள் வழக்கமான உடல் மீது அக்கறையற்ற வாழ்கைக்கு திரும்பியுள்ளனர்," என்றார் பபினா.
என்னதான் தீர்வு?
மேலும், "மக்கள் பலர் இடைவெளி இன்றி தாங்கள் அமர்ந்த இடத்தில் வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். அதுவே இந்த உயர்வில் பெரும் பங்கு வகிக்கிறது. இவர்களுக்கு இதய நோய்கள் வர வாய்ப்புகள் நிறைய உள்ளன. வேலைக்கு செல்லும் மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பாதிப்புகள் நிறைய இருப்பதால், யோகா, உடற்பயிற்சி, கவனம்கொண்ட உணவுப்பழக்கம், போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், அதிகரித்து வரும் உயர் இரத்த அழுத்தத்தை நாம் கூட்டாக எதிர்த்துப் போராடி, அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தை ஊக்குவிக்க முடியும்" என்று டாக்டர் பபினா கூறுகிறார்.
ALSO READ | Ragi Groundnut Halwa : சத்துக்களும் அள்ளணும்.. சுவையும் அள்ளணுமா? ராகி வேர்க்கடலை அல்வா ரெசிப்பி இதோ..