முட்டைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க


முட்டைகள் மூழ்கும் அளவு தண்ணீரை எடுத்து அதில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் முட்டைகளை சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த முட்டைகளை ஒரு காட்டன் துணியால் ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு 5 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். பின் முட்டைகளின் மீது எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பின் முட்டை வைக்கும் ட்ரேயில் இந்த முட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். முட்டைகளின் கூர்மையான பகுதி கீழ் பகுதியில் இருக்குமாறு அடுக்கி கொள்ளவும். இதை வெளியில் வைத்தால் 12 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தால் 2 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஆனால் முட்டைகளை வாரத்திற்கு ஒரு முறை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்துவது நல்லது. 


பாத்திரத்தின் தீக்கறைகள் எளிதில் நீங்க


5 முட்டைகளின் ஓடுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். குளியல் சோப்பை காய் சீவல் கொண்டு 3 ஸ்பூன் அளவுக்கு துருவிக் கொள்ளவும். இதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். இப்போது கம்பி நார் பயன்படுத்தி இந்த கலவையை தொட்டு அடிப்பிடித்த பாத்திரங்கள், தீக்கறைகள் ஆகியவற்றை தேய்த்து கழுவலாம். இதை கொண்டு தேய்க்கும் போது அதிகமாக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. லேசாக தேய்த்தால் போதுமானது. பாத்திரத்தில் உள்ள கறைகள் முற்றிலும் நீங்கி பாத்திரம் பளிச்சென மாறி விடும். 


செம்பு பாத்திரம் பளீச்சென இருக்க


செம்பு பாத்திரங்கள் மங்கி இருந்தால் அதை எலுமிச்சை தோல் கொண்டு தேய்க்க வேண்டும். இப்படி தேய்த்தால் பாத்திரம் பள பளவென இருக்கும்.