பொதுவாக கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் அதிகமாக பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்குவதுண்டு. குறிப்பாக பழங்களின் தேவதை எனப்படும் பப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடலாமா? கூடாதா? என்ற சந்தேகம் இன்னும் பலருக்கும் உள்ளது. பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, சி,பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது. இவ்வளவு ஊட்டச்சத்து மிக்க பப்பாளியை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதால் கருச்சிதைவினை ஏற்படுத்தும் என்று பலராலும் நம்பப்படுகிறது. நம் முன்னோர்களும் கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டாம் என்றே அறிவுறுத்தியுள்ளனர்.
கர்ப்ப காலத்தில் ஏன் சாப்பிடக்கூடாது?
பப்பாளி பழம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய ஓர் அற்புதமான பழம். இந்த பழத்தில் கலோரிகள் குறைந்த அளவே காணப்பட்டாலும் ஊட்டச்சத்துகள் அதிக அளவில் காணப்படுகிறது. ஆனால் கர்ப்ப காலத்தில் உண்மையிலேயே கருச்சிதைவினை ஏற்படுத்துமா? எப்போது கருசிதைவு ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் தான் இது நம்பப்படுகிறா? ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஆம், நம் முன்னோர்கள் காலத்தில் கருக்கலைப்புக்கு மருத்துவமனை செல்லாமல் பப்பாளி காயை அதில் வரும் பாலுடன் அரைத்து குடிக்க வைப்பார்கள் என்றும், அது உடலில் அதிகப்படியான வெப்பத்தை தரும் என்பதால் அதனாலேயே கரு கலைந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. அதனாலேயே பப்பாளி என்ற ஒரு வார்த்தையே கருக்கலைப்பு செய்யக்கூடும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உள்ளது.
* குறிப்பாக பழுக்காத பப்பாளி முன்கூட்டியே பிரசவத்திற்கு வழி வகுக்கும் ஒன்றாகும்.
* பழுக்காத பப்பாளி போலவே பச்சை பப்பாளி விதைகள், பப்பாளியில் இருந்து வரும் பால் ஆகியவற்றை உட்கொள்வதால் கருக்கலைப்புக்கு வழி வகுக்கும்.
*அதுமட்டுமின்றி செயற்கையாக ரசாயனம் மூலம் பழுக்க வைக்கும் பப்பாளி பழங்களையும் கர்ப்பிணிகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அப்படியென்றால் கர்ப்பகாலத்தில் பப்பாளி ஆரோக்கியமனதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
கர்ப்ப காலத்தில் பப்பாளி ஆரோக்கியமானதா?
கர்ப்பிணிகள் பயப்படும் அளவிற்கு இது அபாயகரமான ஒரு பழம் இல்லை என்றே தான் சொல்லப்படுகிறது. பப்பாளியில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் உள்ளது. அதோடு கண்ணுக்கும், செரிமானத்திற்கும் மட்டுமல்ல இதயத்திற்கும் மிக சிறந்த ஒரு பழமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதற்கு பயம் இருக்கும் பட்சத்தில் இதனை 6 வது மாதத்திற்கு மேல் மருத்துவர்கள் அறிவுரையுடன் நீங்கள் தைரியமாக சாப்பிடலாம். மேலும் நல்ல பழுத்த பழங்களையும், இயற்கையாக பழுத்த பழங்களையும் வாரத்திற்கு ஒரு முறை சிறிய சிறிய துண்டுகளாக 7 அல்லது 8 துண்டுகள் வரை சாப்பிடலாம். இதனால் குழந்தை பிறப்பு எளிதாகும் என்றும் சொல்லப்படுகிறது.
*இதை கர்ப்பிணிகள் சாப்பிடும் பொழுது குழந்தையின் நரம்பியல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
*நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதால் பல்வேறு நோய்த்தொற்றுகளை தடுக்கிறது.
*கர்ப்பகாலத்தில் ஏற்படும் வழக்கமான மலச்சிக்கல் பிரச்சினைக்கு இயற்கையான தீர்வாக உள்ளது.
*கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தி, குமட்டல் போன்றவற்றிற்கு நிவாரணமளிக்கிறது.
* நல்ல பழுத்த பப்பாளியை சரியான அளவில் சாப்பிடுவதால் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது.
பப்பாளி என்றாலே கருக்கலைப்பு வழிவகுக்கும் என்ற மூட நம்பிக்கையை அகற்றுவதோடு எதையும் அளவோடு, இயற்கையான முறையில் எடுத்துக்கொண்டால் அது நல்ல ஒரு மருந்தாகவும், சிறந்த ஊட்டச்சத்தாகவும் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் கர்ப்ப காலத்தில் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? என எழும் எந்த ஒரு கேள்விகளுக்கும், பிரச்சினைகளுக்கும் மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு அதனை பின்பற்றுவதே சிறந்தது. எங்கேயும் படித்துவிட்டு கேட்டுவிட்டு மட்டும் ஒரு விஷயத்தை பின்பற்றாதீர்கள். தீர விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டு பின்பற்றுவதே சரி.