அசைவ உணவுகளை ஃப்ரிட்ஜில் சேமித்து, அடுத்த நாள் சாப்பிடுவது சரியா? மருத்துவர் விளக்கம்
நான்கு டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை உயர்ந்ததைக் கண்டால் கெட்டுப் போகக் கூடிய உணவுகளை வெளியேற்றி விட வேண்டும் என்று அமெரிக்காவின் எஃப்டிஏ அறிவுறுத்துகிறது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் போனலு திருவிழாவின் கொண்டாட்டத்தில் சமைக்கப்பட்ட கோழி, ஆட்டுக் குடல் உள்ளிட்ட மாமிச உணவினை மறுநாள் சாப்பிட்ட குடும்பத்தினர் ஒன்பது பேர் உணவினால் ஏற்படும் கடும் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
49 வயதான குடும்பத் தலைவர் உணவினால் ஏற்பட்ட தொற்றுக்கு இரையாகி மரணமடைந்திருப்பது வேதனை. இன்னும் மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர்ப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
நடந்ததில் தவறு என்ன ?
அதில் நமக்கான படிப்பினை என்ன?
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று போனலு அம்மன் திருவிழாவின் பகுதியாக கோழி , ஆட்டு மாமிசம் போன்றவற்றை சமைத்து குடும்பமாக சாப்பிட்டுள்ளனர். அதில் மிஞ்சிய மாமிசத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பராமரித்துள்ளனர். அடுத்த நாள், திங்கட்கிழமை மாமிசத்தை மீண்டும் வெளியே எடுத்து சூடு காட்டி குடும்பத்தினர் ஒன்பது பேரும் சாப்பிட்டுள்ளனர்.
சிக்கலை ஏற்படுத்திய சோகம்
அன்றைய நாளின் பிற்பகுதியில் இருந்து ஒவ்வொருக்காக வாந்தி வயிற்றுப் போக்கு ஆரம்பித்திருக்கிறது. நிலைமை தீவிரமடையவே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அட்மிட் ஆகியதில், சிகிச்சை பலனின்றி குடும்பத் தலைவர் மரணமடைந்திருக்கிறார். இன்னும் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
முதல் நாள் சாப்பிட்டபோது எந்த சிக்கலையும் ஏற்படுத்தாத மாமிசம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த அடுத்த நாள் பாதிப்பை உண்டாக்கி உள்ளதென்றும் இடைப்பட்ட நேரத்தில் மாமிசத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று அர்த்தம்.
நாம் அனைவரும் "ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் உணவு கெடாது" என நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவன்று. ஃப்ரிட்ஜில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் நாம் வைக்கும் உணவுகள் யாவும் கெடுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுமேயன்றி எப்போதும் கெட்டுப் போகாத நிலையை அடைந்து விடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மாமிசம் கெட்டுப்போவதை எவ்வாறு நிறுத்துவது?
உணவுக்காக இறந்த பிராணியின் மாமிசமானது சிதைவுறுவதை ஃப்ரிட்ஜில் ( 2 முதல் 8 டிகிரி செல்சியஸ்) வைத்து நம்மால் தாமதப்படுத்த முடியுமே அன்றி நிறுத்த முடியாது, சரி அப்படியென்றால் மாமிசம் கெட்டுப்போவதை எவ்வாறு நிறுத்துவது?
நாம் சாப்பிடப் போகும் உணவை மூன்று நாட்களுக்குள் சாப்பிட்டு விடுவோம் என்றால் இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் நான்கு டிகிரி செல்யஸுக்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இல்லை இன்னும் நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு நாம்
மாமிசத்தை "ஃப்ரீசரில்" ( உறை குளிர் நிலையில் ) பாதுகாக்க வேண்டும்.
ஒவ்வொரு குளிர்சாதனப்பெட்டியிலும் இந்த ஃப்ரீசர் ( உறை பனியில் பாதுகாக்கும் பகுதி) இருக்கும் .
அவற்றுள் மைனஸ் 18 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வைத்துப் பாதுகாக்கலாம். இந்த நிலையில் மாமிசமானது சில மாதங்கள் வரை கெடாமல் பாதுகாக்கப்படும். காரணம் அத்தகைய உறை குளிர் நிலையில் நுண்கிருமிகளால் வளர இயலாது.
காற்றுப்புகாத கண்டெய்னர்
மாமிச உணவுகளைப் பாதுகாக்க எண்ணினால் அவற்றை காற்றுப்புகாத கண்டெய்னர்களில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் உள்ளே வைக்கும் மாமிசத்தில் கிருமித் தொற்று இருந்தாலும் அது குளிர்சாதனப்பெட்டியில் இருக்கும் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு பரவாமல் இந்த யுக்தி தடுக்கும். இதை க்ராஸ் கண்டாமினேசன் என்போம்.
எப்போதும் உணவைச் சமைக்கும் முன்பும் அதை பேக் செய்யும் முன்பும் அதை பிறருக்கு விருத்தோம்பல் செய்யும் முன்பும் கண்டிப்பாக கைகளை சோப் போட்டுக் கழுவ வேண்டும். மேற்கூறிய எந்த நிலையிலும் தொற்று ஏற்படலாம்.

160 டிகிரி ஃபாரன்ஹீட்டில் சமையல்
மாமிசத்தை சமைக்கும்போது 160 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு (71 டிகிரி செல்சியஸ் ) அளவுக்கு மேல் வெப்பநிலையில்தான் சமைக்க வேண்டும்.
பறவையின மாமிசமோ கால்நடைகளின் மாமிசமோ நன்றாக வெந்திருப்பதை உறுதி செய்த பின்பே உண்ண வேண்டும்.
சமைக்கப்பட்ட உணவு - அறை வெப்ப நிலையில் ( 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் ) சில மணிநேரங்கள் மட்டுமே கிருமித் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருக்கும். அது மரக்கறி உணவோ மாமிச உணவோ பாரபட்சமில்லாமல் இரண்டையும் கிருமிகள் கெட்டுப் போகச் செய்யும்.
எனவே, சமைக்கப்பட்ட உணவை விருந்தோம்புவது என்றால் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் முதல் நான்கு மணிநேரங்களுக்குள் உணவை சாப்பிட்டு விடுவது மிக நல்லது.
ஃப்ரீசரில் வைத்து விடுவது சிறந்தது
எப்போது உணவைப் பரிமாறினாலும், அதற்கு முன்பு உணவை சூடுபடுத்தி பரிமாற வேண்டும். இதனால் கிருமிகள் இறந்து விடும். அடுத்த நாள் வைத்திருந்து சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த மாமிசத்தை சரியாக பேக் செய்து குளிர்சாதனப் பெட்டியில் 4 டிகிரி செல்சியஸுக்குள் வைத்துப் பராமரிக்க வேண்டும். அதற்கு மேல் பாதுகாக்க வேண்டும் என்றால் ஃப்ரீசரில் வைத்து விடுவது சிறந்தது.
கரண்ட் கட்டாவது, அதனால் குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலையில் மாறுபாடு ஏற்படுவது இவை அனைத்துக்குமே நாம்தான் பொறுப்பு. நான்கு டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை உயர்ந்ததைக் கண்டால் கெட்டுப் போகக் கூடிய உணவுகளை வெளியேற்றி விட வேண்டும் என்று அமெரிக்காவின் எஃப்டிஏ அறிவுறுத்துகிறது.
டீ ஃப்ராஸ்டிங்
ஃப்ரீசரில் வைத்த மாமிசத்தை ஐஸ் விடுவதற்கு எடுத்து நேரடியாக அறை வெப்பநிலையில் வைக்கக் கூடாது. ஃப்ரீசரில் இருந்து மாமிசத்தை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து அங்கிருந்து பதினைந்து நிமிடங்கள் முதல் முப்பது நிமிடங்கள் கழித்து எடுத்தாலே ஐஸ் விட்டிருக்கும். இப்படித்தான் "டீ ஃப்ராஸ்டிங்" செய்ய வேண்டும்.
மாமிச உணவோ மரக்கறி உணவோ மனதில் இருத்த வேண்டிய முக்கிய விஷயங்கள்
- உணவை சமைக்கும் போது, பரிமாறும்போது, பாதுகாக்கும்போது சுத்தத்தை உறுதி செய்ய வேண்டும்.
- உணவை குறிப்பாக மாமிச உணவை நல்ல சூட்டில் (>71 டிகிரி செல்சியஸ் அல்லது 160 டிகிரி ஃபாரன்ஹீட்) முறையான நேரம் அனுமதித்து சமைக்க வேண்டும்.
- சமைத்த உணவை அன்றே சாப்பிட்டு விடுவது எப்போதும் சிறந்தது.
- பாதுகாக்க வேண்டும் என்றால் ஓரிரு நாட்களுக்குள் சாப்பிட நான்கு டிகிரி செல்சியஸுக்குள் பராமரிக்க வேண்டும்
- அதற்கும் மேல் கெடாமல் மாமிசத்தை பாதுக்காக்க வேண்டுமெனில் மைனஸ் 18 டிகிரி செல்சியஸுக்கு குறைவான உறை குளிரில் பாதுகாக்க வேண்டும்
குளிர்சாதனப் பெட்டி கிருமியால் உணவு கெட்டுப்போவதை தள்ளிப் போடுமே அன்றி முழுவதுமாக நிறுத்தாது.
இவ்வாறு பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.






















