இந்திய ரயில்வே சார்பாக புதிதாக சுற்றுலா பேக்கேஜ் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலா தளங்களுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த சுற்றுலா பேக்கேஜ் பயன்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் மைசூர், ஊட்டி, குன்னூர் ஆகிய சுற்றுலா தளங்களில் 4 இரவுகள், 5 நாள்கள் என்ற அடிப்படையில் இந்த சுற்றுலா பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜில் தங்கும் வசதி, உணவு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அது குறித்து எந்தக் கவலையும் இன்றி இந்த சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளலாம்.
இதுகுறித்து இந்திய ரயில்வேயில் ஐ.ஆர்.சி.டி.சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் `உங்களுக்குப் பிடித்தவர்களுடன் தென்னிந்தியாவின் பிரபலமான சுற்றுலா தளங்களில் அழகான விடுமுறையைக் கழிக்க ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைந்து மகிழுங்கள். 5 நாள்கள், 4 இரவுகள் வழங்கப்படும் இந்த சுற்றுலா பேக்கேஜின் விலை, ரூ. 25,460 மட்டுமே!’ என்று பதிவிட்டிருந்தது.
`Southern Sojourn' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சுற்றுலா பேக்கேஜ் மூலம் மைசூர், ஊட்டி, குன்னூர் ஆகிய சுற்றுலா தலங்களுக்குப் பயணம் செய்து அழைத்துச் செல்லப்படுவர். இந்தப் பேக்கேஜின் கீழ், 5 பகல்களும், 4 இரவுகளும் தங்கும் வசதி, உணவு ஆகியவை வழங்கப்படும். இதில் டீலக்ஸ் கிளாஸ் சுற்றுலா பயணத்தின் கீழ் வழங்கப்படும் வசதிகள் அளிக்கப்படும். இந்தப் பயணம் வரும் டிசம்பர் 29 முதல் 2022ஆம் ஆண்டு, ஜனவரி 2 வரை வழங்கப்படுகிறது. புத்தாண்டைத் தங்கள் விருப்பமான நபருடன் தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் கொண்டாட விரும்புகிறவர்களுக்கு இந்திய ரயில்வே வழங்கும் இந்தச் சுற்றுலா திட்டம் பயனுள்ளதாக அமையும். மூன்று நகரங்களுக்கும் இடையிலான பயணம் விமானம் மூலம் வழங்கப்படும். எனினும் இந்த சுற்றுலா பயணத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படாது எனவும், அதைப் பயணிகளே பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவின் கட்டணம் எவ்வளவு?
இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பேக்கேஜின் அடிப்படையில், தனி நபராகச் செல்பவருக்கு 32,880 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருவராகச் செல்வோருக்கு, ஒருவருக்குத் தலா 26,070 ரூபாய் எனவும், மூவராகச் செல்வோருக்கு, ஒருவருக்குத் தலா 25,460 ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை அழைத்துச் செல்வோரில், குழந்தைக்குத் தனியாகப் படுக்கை தேவைப்படும் எனில் கட்டணம் 23,720 ரூபாய் எனவும், படுக்கை தேவைப்படாது எனில் கட்டணம் 21,470 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மேலதிக தகவல்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சியின் இணைய தளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம். இந்தப் பேக்கேஜ் குறித்து, https://www.irctctourism.com/pacakage_description?packageCode=EHA031 என்ற தளத்தில் கூறப்பட்டுள்ளது.