Inverter vs Convertible AC: இன்வெர்டர் மற்றும் கன்வெர்டிபிள் ஏசிக்களில் எந்த மாடல், குறைந்த மின்சார செலவில் நல்ல பலனை தருகிறது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கொளுத்தும் வெயில்: இன்வெர்டர் VS கன்வெர்டிபிள் ஏசி

கோடை வெயில் உக்கிரமாக கொளுத்தி வருகிறது. அன்றாட பணிகளுக்கு கூட நண்பகல் நேரங்களில் வெளியே செல்ல பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாக அறைகளில் தூங்க முடியாமல் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைகின்றனர். அந்த வசதி இல்லாதவர்கள் ஏசியை மட்டுமே ஒரு பாதுகாவலனாக கருதுகின்றனர். அப்படி இருப்பவர்களுக்கு மின்சார கட்டணம் மற்றொரு பெரிய அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில், இன்வெர்டர் மற்றும் கன்வெர்டிபிள் ஏசிக்களில், கோடை கால வெயிலை சமாளிக்க நல்ல குளிர்ச்சியை தருவது எந்த மாடல் என்பதையும், இவற்றில் எது குறைந்த மின்சார செலவை வழங்கும்? என்ற விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

இன்வெர்டர் VS கன்வெர்டிபிள் ஏசி - எதை வாங்கலாம்?

ஏசி வாங்குபவர்களுக்கு ​​இன்வெர்டர் ஏசி அல்லது கன்வெர்டிபிள் ஏசி, எதை வாங்கலாம் என்பதில் குழப்பம் ஏற்படலாம். இரண்டுமே ஆற்றலைச் சேமிக்கவும், சிறந்த குளிர்ச்சியை வழங்கும் தன்மையை கொண்டுள்ளது. அதேநேரம், அவற்றின் செயல்பாட்டு முறைகள் வேறுபட்டவை. எனவே தேவையான தகவல்களை சேகரித்து, முறையான திட்டமிடலுன் உங்களது அறைக்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்ற சிறந்த ஏசியை தேர்வு செய்வது அவசியம்.

இன்வெர்டர் ஏசி எப்படி இயங்கும்?

இன்வெர்டர் ஏசி என்பது அறையின் தேவைக்கு ஏற்ப, அதன் குளிரூட்டும் திறனைத் தானாகவே சரிசெய்யும் ஒரு வகை ஏசி ஆகும். இது கம்ப்ரஸரை மீண்டும் மீண்டும் ஆன் மற்றும் ஆஃப் செய்வதற்குப் பதிலாக, அதன் வேகத்தை மாற்றியமைக்கிறது. அறை விரும்பிய வெப்பநிலைக்குக் குளிர்ந்தவுடன், ஏசி குறைந்த திறன் நிலைக்கு மாறுகிறது. ஒரு நிலையான வெப்பநிலையைப் பராமரிக்கிறது. மின்சாரத்தை சேமிக்கிறது மற்றும் சத்தத்தை குறைக்கிறது. அதனால்தான், படுக்கையறைகள் அல்லது சீரான, வசதியான குளிர்ச்சி தேவைப்படும் பிற அறைகளுக்கு இன்வெர்டர் ஏசிகள் மிகவும் சரியானதாக கூறப்படுகிறது.

கன்வெர்டிபிள் ஏசி எப்படி இயங்கும்?

இன்வெர்டர் ஏசியுடன் ஒப்பிட்டால் கன்வெர்டிபிள் ஏசிகள் சற்று வித்தியாசமாகச் செயல்படுகின்றன. குளிரூட்டும் திறன் அல்லது டன்னேஜை (tonnage) பயனர் மேனுவல் முறையில் சரிசெய்ய வேண்டும். உதாரணமாக, அறையில் அதிகமானோர் இருக்கும்போது அல்லது மிகவும் வெப்பமாக இருக்கும்போது, ​​நீங்கள் உயர் சக்தி பயன்முறையைப் (high power mode) பயன்படுத்தலாம். அதுவே, அறையில் குறைவான நபர்கள் இருக்கும்போது, ​​குறைந்த குளிரூட்டும் பயன்முறையைத் (low cooling mode) தேர்ந்தெடுப்பதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்கலாம். மொத்தமாக, இது பயனர்களுக்கு அதிகக் கட்டுப்பாட்டை வழங்குகிறது. விசாலமான இடங்களில் பயன்படுத்துவதற்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

இன்வெர்டர் VS கன்வெர்டிபிள் ஏசி - மின்சார சேமிப்பு

எது மின்சாரத்தை சேமிக்கிறது? என்ற கேள்வியை எடுத்துக்கொண்டால், இரண்டு ஏசிகளுமே சிறந்தவை. இன்வெர்டர் ஏசிகள் மின் நுகர்வைத் தானாகவே கட்டுப்படுத்துகின்றன. ஆனால், கன்வெர்ட்டிபிள் ஏசிகளில், அமைப்புகளை நீங்களே சரி செய்ய வேண்டும். எனவே, அதிக முயற்சியின்றி மின்சாரத்தைச் சேமிக்க விரும்பினால், இன்வெர்டர் ஏசி ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். அதேநேரம் வரவேற்பறை அல்லது கூடம் போன்ற, அடிக்கடி ஆட்கள் மாறும் அறையில் நீங்கள் இருந்தால், கன்வெர்ட்டிபிள் ஏசி அதிகப் பயனுள்ளதாக இருக்கும்.

ஒட்டுமொத்தத்தி நீங்கள் அமைதியான, சீரான மற்றும் ஆட்டோமேடிக் குளிரூட்டலை விரும்பினால், இன்வெர்டர் ஏசியைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப குளிரூட்டலைக் கட்டுப்படுத்த விரும்பினால், கன்வெர்டிபிள் ஏசி சிறந்தது. உங்கள் தேவைக்கேற்ப சரியான ஏசியை நீங்கள் தேர்வு செய்யலாம்.