மனித குலத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் என்னவென்றால் அது தேநீர்தான். இயல்பாக ஒருநாளை பலர் தேநீருடன் தான் தொடங்குவார்கள். அதிலும் குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள் குறிப்பாக ஊரடங்கு காலத்தில் அதிகம் மிஸ் செய்வது அலுவலகத்தின் தேநீர் இடைவேளையைத்தான். அது அந்த அளவுக்கு அவர்களின் அலுவலக வாழ்வியலில் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருந்த பொருளாக இருந்தது. அலுவலகம் செல்பவர்கள் மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் ஒரே மருந்து தேநீர்தான். இன்று உலகம் முழுவதும் உலக தேநீர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (Food and Agriculture Organisation) அங்கீகரித்துள்ளது. இந்த நாளை அங்கீகரித்து ஐநா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளது. அதில்,"தேநீர் என்பது பல நாடுகளின் கலாச்சரங்களில் ஒன்றிணைந்த ஒன்று. அத்துடன் இது பலருக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றை அளிக்கும் ஒரு ஆதாரம்" எனப் பதிவிட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதியில் தேநீர் தோட்டம் அதிகம் உள்ளது. இங்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழைபெய்யும் என்பதால் ஆண்டு முழுவதும் இங்கு தேயிலை உற்பத்தி செய்ய சிறப்பான இடமாக அமைந்துள்ளது. தமிழர்களின் வாழ்வில் தற்போது இன்றியமையாத விஷயங்களில் ஒன்று தேநீர். ஒரு பெரிய மழைபெய்தால் முதலில் நம் நினைவிற்கு வருவது சூடான தேநீர்தான். 




இதற்கு ஒரு படிமேலே ஆனந்தம் என்றால் அது மழை, தேநீர், இளையாராஜா பாடல்கள்தான். இது ஒரு ஆனந்தத்தின் உச்சக்கட்டமாக அமைந்திருக்கும். அதற்கேற்ப உன் சமையலறையில் என்ற படத்தில் 'இந்த பிறப்பு தான் ருசித்துசாப்பிட' என்ற பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார். அதில் வரும் காட்சிகள் மற்றும் பின்னணி இசை, உணவு பொருட்கள் எப்படி தமிழர்களின் வாழ்க்கையில் ஒன்றிணைந்த ஒன்றாக இருக்கிறது என்பது நன்றாகத் தெரியும். இது தவிர மழை நேரத்தில் தேநீருடன் காதுகளில் இளையராஜா மெலடி பாடல்கள் ஒரு உச்சக்கட்டம். பலருக்கு டீ குடிக்கும்போதுதான் ஒரு சில புதிய யோசனைகள் பிறக்கும். அத்துடன் டீ குடிக்கும்போதுதான் நமது கண்ணதாசன், வாலி போன்ற அளவிற்கு கவிதை எழுதவும் தோன்றும். அப்படி பலர் தற்போது சர்வதேச தேநீர் தினத்திற்கும் சில கவிதைகளை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அள்ளி தெளித்து உள்ளனர். அவற்றில் சில: