அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது சில வகையான புற்றுநோய்கள்,இதயம், நுரையீரல் தொடர்பான நோய் பாதிப்புகள், மனநல பிரச்சனை உள்ளிட்ட 32 வகையான உடல்நல கேடுகளை விளைவிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக BMJ என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு பொருட்கள், புத்துணர்ச்சி பானங்கள், அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட டிரிங்க்ஸ், சீரில்ஸ், ரெடி- டு- ஈட் உணவுகள், மேகி, பரோட்டா அதாவது பாக்கெட்களில் கிடைப்பவை. அதை வாங்கி வீடுகளில் சூடு செய்தால் மட்டும் போதும். உணவு தயாராகிவிடும். - இப்படியான உணவுகள் பல தொழில்துறை செயல்முறைகளுக்கு உட்படுகின்றன. பெரும்பாலும் இதில் நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. சுவையை அதிகரிப்பதற்காக நிறைய ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, கொழுப்பு மற்றும்/அல்லது உப்பு அதிகமாக இருக்கும், ஆனால் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளது.
இத்தகைய அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வு கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.
ஆய்வின்படி, இத்தகைய உணவுகள் அதிக வருமானம் கொண்ட சில நாடுகளில் மொத்த தினசரி ஆற்றல் உட்கொள்தலில் 58% வரை இருப்பதாக தெரிவிக்கிறது.மேலும், குறைந்த வருமான கொண்ட நாடுகள், நடுத்தர வருமான கொண்ட நாடுகளிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், ஒரு கோடி பேர் பங்கேற்று அவர்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, அதிக பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்வதன் மூலம் இதய நோய் தொடர்பான இறப்புக்கான 50% அதிக ஆபத்து உள்ளது. கவலை மற்றும் பொதுவான மனநல கோளாறுகள் ஏற்பட 48-53% அதிக ஆபத்து இருக்கிறது. டைப் -2 நீரிழிவு நோய் ஏற்பட12% வாய்ப்புள்ளது. இப்படி பலவித உடல்நல கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வின் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதோடு 32 வகையான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதிக தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்வது 21% அதிக மரண அபாயத்துடன் தொடர்புடையது - அதாவது ஒரு நாளைக்கு 10% அல்லது அதற்கு குறைவான அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல்நலன் தீவிரமாக பாதிக்கப்படும் அதானல் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமன் அதிகரிக்க செய்யும். இது இதய நோய், டைப்- 2 வகை நீரிழிவு மற்றும் தூக்க பிரச்சனைகள் ஆகியவை 40-66% அதிகரித்த வழிவகுக்கும். இதனால் 22% மனச்சோர்வு அதிகரிக்கும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல்நலம் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் அதனால் எந்தளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான வாழ்வை வாழ, பதப்படுத்தப்பட்டதுரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம். முடிவந்தவரை கட்டுப்படுத்த முயற்சிக்கவும் என மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) கதிர்வீச்சு புற்றுநோயியல் முன்னாள் தலைவர் டாக்டர் பிகே ஜுல்கா கூறுகையில்,"நீங்கள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு, குறிப்பாக பதப்படுத்தப்பட்ட சீஸ் மற்றும் அதிக சர்க்கரை அளவைக் கொண்ட பொருட்கள் ஆகியவை புற்றுநோய் செல்கள் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். இந்த ஆய்வு அதை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவது முக்கியம். அதில் ஒருவர் என்ன சாப்பிடுகிறார் என்பதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.