போர்ச் சூழலால், சிலிண்டர் தட்டுப்பாடு தற்காலிகமாக ஏற்பட்டுள்ள சூழலில், இண்டக்ஷன் ஸ்டவ் எனப்படும் மின்சார அடுப்புகளின் பயன்பாடு பரவலாகி உள்ளது.
இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் நரசிங்கப்பூர் அருகே, சீமான் ஜட் என்னும் பெண், மின்சார அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. கிச்சடி சமைத்து முடித்ததும் பாத்திரத்தை அவர் எடுத்தபோது கண்ணாடி மேல்புறம், அதீத சத்தத்துடன் வெடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் மின்சார அடுப்புகள் எப்படி இயங்குகின்றன? அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி? விரிவாகக் காணலாம்.
மின்சார அடுப்பு என்பது மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றிச் செயல்படும் ஒரு நவீன சாதனமாகும்.
இயங்குவது எப்படி?
இன்டக்ஷன் அடுப்புகளில் மின்காந்த தூண்டல் (Electromagnetic Induction) தொழில்நுட்பம் மூலம் பாத்திரத்தின் அடிப்பகுதி நேரடியாக வெப்பமடைகிறது. இதனால் எரிசக்தி அதிக அளவில் சேமிக்கப்படுகிறது.
பாதுகாப்பாகபயன்படுத்துவதுஎப்படி?
இவற்றைச் சுலபமாகப் பயன்படுத்த முடிந்தாலும், பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன் முக்கிய வழிமுறைகள்:
- ஈரப்பதம்கூடாது: ஈரமான கைகளால் மின் இணைப்பையோ அல்லது அடுப்பையோ தொடக்கூடாது. அடுப்பின் உட்புறம் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.
- கைகளால் தொட வேண்டாம்: அடுப்பு இயங்கும்போதோ அல்லது சுவிட்ச் அணைக்கப்பட்ட உடனேயோ அதன் வெப்பமான மேற்பரப்பைக் கைகளால் தொடக் கூடாது.
- பாத்திரங்களின் தேர்வு: அடுப்பின் வகைக்கு ஏற்ப தட்டையான அடிப்பாகம் கொண்ட சரியான பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்சார அடுப்புக்கென்றே தனி வகை பாத்திரங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. அதேபோல எளிதில் உருகும் பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக் கூடாது.
- பராமரிப்பு: மின் வயர்கள் சேதமடைந்துள்ளதா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.
- மின்இணைப்புதுண்டிப்பு: சமையல் முடிந்தவுடன் உடனடியாக ஸ்விட்ச்சை அணைத்துவிட்டு, பிளக்கைக் கழற்றி வைப்பது மின் கசிவு விபத்துகளைத் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
