வரும் 18-ஆம் தேதி தந்தையர் தினம் வருகிறது.


நமது சமூகத்தை நன்றாக உற்று நோக்கினால், அது செயல்படும் விதமோ, கட்டமைப்போ, பழக்க வழக்கமோ, எதோ ஒன்று குழந்தைகளை பெரும்பாலும் தங்கள் தந்தையுடன் உணர்ச்சிப்பூர்வமாக இணைப்பதில்லை என்பது தெரியவரும். நம் ஊரில் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கு ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக ஆனாலும் சரி, தேர்ந்தெடுப்பது தாயைத்தான். இதற்கு அர்த்தம் அவர்கள் தங்கள் தந்தையை நேசிக்கவில்லை என்பதோ, மதிக்கவில்லை என்பதோ இல்லை. ஆணாதிக்கம் இப்படித்தான் குடும்பக் கட்டமைப்புகளைக் கட்டியெழுப்பியுள்ளது. ஆண்கள் விறைப்பாக இருந்தே காலம் கடந்துவிடுவது இயல்பாகவே இயைந்து நடக்கிறது. ஆனால் உண்மையில் அப்பாக்கள் இவ்வளவு விரைப்பானவர்களா என்றால், அவர்களும் மனிதர்தான் என்பது தான் பதில். குழந்தையோடு நன்றாக பேசி பழகும் அப்பாக்களுக்குள் இன்னொரு குழந்தை இருப்பதை நாம் கவனித்திருக்கலாம். அந்த வகையான அப்பாக்கள் குறைவுதான் என்றாலும், அப்படியான அப்பாக்களை உருவாக்குவது இந்த சமுதாயத்தின் கடமை தான். அதற்கு மகன்/மகளாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதும் உள்ளது. நாம் தான் அந்த கதவை திறக்கும் பிரதான சாவி. இந்த தந்தையர் தினத்தன்று அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள்.


ஒன்றாக நேரத்தை செலவிட முயற்சி செய்வது  தோட்டக்கலை, விளையாட்டு, நிகழ்ச்சிக்கு செல்வது, புத்தகம் படிப்பது அல்லது குறிப்பிட்ட உணவு வகைகளை சமைப்பது போன்ற நீங்கள் இருவரும் சமமாக அனுபவிக்கும் செயல்பாடுகளைக் கண்டறியவும். உங்கள் அப்பாவுக்கும் உங்களுக்குமான பொதுவான ஆர்வங்களைப் பகிர்ந்துகொள்வது, அவருடன் ஆழமாக இணைக்க உதவும்.



அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைக் கேளுங்கள்


நீங்கள் ஒரு சிறந்த உறவை உருவாக்க விரும்பினால், உங்கள் அப்பாவின் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். அவர்களின் வேலை, அவர்களைத் தொந்தரவு செய்யும் விஷயங்கள், அவர்களின் நண்பர்கள், குழந்தைப் பருவம், அவர்களின் லட்சியங்கள், அவர்களின் கனவுகள், அவர்களின் பயண இலக்குகள் குறித்து பகிர்ந்து கொள்வது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும். இங்கே இன்னும் முக்கியமானது அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பது. கடமைக்கென்று இல்லாமல் உண்மையாக கேளுங்கள், அது உங்களுக்கு பெரும் படிப்பினையை தருவதோடு, அவர்களுக்கும் திருப்தி அளிக்கும்.


தொடர்புடைய செய்திகள்: Special Olympics: 190 நாடுகள்.. 7 ஆயிரம் வீரர்கள்... ஜூன் 17ல் தொடங்கும் சிறப்பு ஒலிம்பிக்.. பெர்லின் கிளம்பிய இந்திய அணியினர்..!


முக்கியமான வாழ்க்கை முடிவுகளை விவாதிக்கவும்


பெரும்பாலும், முக்கியமான வாழ்க்கை முடிவுகளை எடுக்கும்போது, ​​நம் தந்தைகள் நம் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வைக் கொண்டிருப்பார்கள் என்பதை நாம் அறிவோம். இதுபோன்ற சமயங்களில், அவருடைய உதவியைக் கேட்க வெட்கப்பட வேண்டாம். பிரச்னைகளைப் பற்றி அவர்களிடம் பேசுவது ஒரு புதிய கண்ணோட்டத்தை அளிக்கும், மேலும் அது அவர்களை மரியாதைக்குரியவராக உணரவும் செய்யும்.


கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கவும்


எந்த உறவிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதற்கு, அவர்களிடமிருந்து நீங்கள் விலகி இருக்கிறீர்கள் என்று அர்த்தம் அல்ல. உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பது உங்கள் உறவில் கசப்பு வராமல் பார்த்துக் கொள்ளும்.



அவருக்கு உதவ முன்வரவும்


நீங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் அல்லது வெவ்வேறு மாநிலங்கள்/நாடுகளில் வாழ்ந்தாலும், உங்கள் அப்பா ஏதாவது பிரச்சனையில் சிரமப்படுவதைக் கண்டால், அவருக்கு உதவ முன்வரவும். மதிய உணவு வாங்குதல், தோட்டத்தைப் பராமரித்தல், மொபைல் அல்லது டி2எச் ரீசார்ஜ் செய்தல், முக்கியமான ஆவணங்களைச் சரிபார்த்தல் போன்ற செயல்களைச் செய்வதன் மூலம் நீங்கள் அவருக்கு உதவலாம். அது இன்னும் அவரை நெருக்கமாக உணர வைக்கும்.


நீங்கள் கழித்த நல்ல நேரங்களை நினைவு கூருங்கள்


உங்கள் தந்தையுடன் அமர்ந்து நீங்கள் ஒன்றாகக் கழித்த நல்ல நேரங்களை பேசி நினைவுகூருங்கள், உங்கள் குழந்தைப் பருவப் பயணங்கள், அவர் உங்களுக்காக உணவு சமைப்பது, அவருடன் கார்ட்டூன்களைப் பார்ப்பது போன்ற பல விஷயங்களை பேசலாம். நீங்கள் பகிர்ந்து கொண்ட இனிமையான தருணங்களைப் பற்றி உங்கள் அப்பாவிடம் பேசுவது, நீங்கள் ஒருவரையொருவர் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை இருவரும் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.