மிகுந்த காதல் கொண்ட தம்பதிகளும் `பணம்’ என்ற விவகாரத்தில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தால், கடுமையான சண்டைகளுக்குள் மூழ்கும் அபாயம் இருக்கிறது. பொருளாதார விவகாரங்களைப் பொறுப்புடனும், முறையாகவும் கையாள்வது சிரமம் என்றாலும், உங்கள் பொறுப்பின்றி செலவு செய்யும் குணத்தாலும், சில சமயங்களில் கஞ்சத்தனத்தாலும் உங்கள் இணையரோடு அதிகளவில் சண்டைகள் போட நேரிடும். பணம் காரணமாக எழும் மோதல்கள் தெரிந்தோ, தெரியாமலோ உங்கள் காதல் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அதனால் உங்கள் இணையரோடு இணைந்து பொருளாதாரத்தை எப்படி தீர்மானிப்பது என்று இங்கு சில வழிகளைக் குறிப்பிட்டுள்ளோம்.
பொருளாதாரம் குறித்து சண்டையிடுவதற்கு முன்பு, உங்கள் இணையரோடு இணைந்து முக்கிய செலவுகளான நிலுவையில் உள்ள கடன்கள், காப்பீடு, ஓய்வுக்காலத் திட்டம் முதலானவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தச் செலவுகளை முதலில் சரிகட்டிய பிறகு, பிற செலவுகளில் ஆர்வம் காட்டுவது என்பது நீண்ட காலத் திருமண பந்தத்தைக் காப்பாற்ற உதவும்.
உங்கள் பொருளாதார சூழ்நிலை குறித்தும், உங்கள் எதிர்பார்ப்பு குறித்தும் திறந்த மனதுடன் உங்கள் இணையருடன் உரையாடுங்கள். உங்கள் இணையருக்குத் தெரியாமல் நீங்கள் பணத்தை அதிகமாக செலவு செய்தால், உங்களுக்கு அவர் மீது அக்கறை இல்லாமலோ, நம்பிக்கை இல்லாமலோ இருக்கலாம். அதனைத் திறந்த மனதுடன் பேசுவது, இந்தப் பிரச்னைகள் தோன்றாமல் காப்பாற்றும்.
பணத்தைச் செலவு செய்வதற்கும், சேமிப்புகளை அதிகரிப்பதற்குமான பட்ஜெட்டை இருவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும். பட்ஜெட் இல்லாமல் குடும்பத்தை நடத்துவம் குழப்பத்தை ஏற்படுத்தலாம். பட்ஜெட் மூலம் செலவு செய்தால், இருவரின் தனிப்பட்ட செலவுகளும் எந்தக் குழப்பமும் இல்லாமல் நடைபெறும். பிரச்னைகளில் இருந்து தூரம் விலகுவதற்கு வழிவகை செய்யும்.
பணம், பட்ஜெட், பொருளாதாரம் முதலான விவகாரங்களைப் பேசுவதற்கு கிடைக்கும் எந்த நேரத்தையும் பயன்படுத்தலாம் என்று எண்ணக் கூடாது. நீங்கள் இருவரும் முழுமையாக கவனத்தோடு இருக்கும் நேரத்தில், இந்த உரையாடலைத் திட்டமிட்டு, அதற்கேற்ப நடத்த வேண்டும். பொருளாதாரம் குறித்த உரையாடல்கள் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இடையில் மோதல்களில் முடியலாம். எனவே அதனைச் சரிசெய்வதற்கு இருவரிடம் அதற்கேற்ப நேரத்தை ஒதுக்கி, உரையாடலில் ஈடுபட வேண்டும்.
உங்கள் கருத்தியல்களில் நின்றுகொண்டே அனைத்தையும் அணுகாதீர். உங்கள் இணையரின் கருத்துகள் உங்களை அடையவில்லை என்று அவர் எண்ணினால், நீங்கள் உங்கள் கருத்துகளில் இருந்து கீழே இறங்கி, சமரசத்தில் ஈடுபட வேண்டும். சில இடங்களிலாவது சமரசங்களை மேற்கொள்வதால், உங்கள் இணையருக்கும் உங்கள் இல்லற வாழ்க்கையில் சம உரிமை வழங்கப்படும். எந்த உறவாக இருப்பினும், சமமாக நடத்தும் போது, அதில் வெற்றி நிலவும்.