தமிழ் சமூகத்தில் மாமியார், நாத்தனார் ஆகியோரை வில்லியாக சித்தரித்து சித்தரித்தே அந்த உறவை பெண்கள் சந்தேகத்துடன் பார்ப்பதும், அந்த நிலைக்கு வரும் பெண்கள் சினிமா, சீரியலில் காட்டுவதை உள்வாங்கிக் கொண்டு நடப்பதும் தொடர்கதை ஆகிவிட்டது.


வாழ்க்கை அழகானது என்பதை புரிந்து கொண்டால் உறவுகள் இனிக்கும். இந்த உலகில் கோடானு கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் தான் நமக்கு உறவுகளாக இருக்கின்றனர். நமக்கு நெருங்கிய உறவுகள் என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொருவருக்கும் 10 பேர் இருப்பார்கள். இது அதிகபட்ச தொகை. இந்த 10 பேருடன் வாழும் சராசரி 60 ஆண்டு காலத்தில் சுமுகமாக வாழ இயலவில்லை என்றால் மனிதராகப் பிறந்ததில் அர்த்தமே இல்லை. எந்த உறவுக்கும் இப்படித்தான் இருப்பார்கள் என்ற விளக்க புத்தகம் இல்லை. பொதுவாக ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களை வைத்து ஒன்றிரண்டு மோசமான நாத்தனாரின் குணம் என்ற விளக்கம் தான் இதுவே தவிர பொதுமைப்படுத்துதல் அல்ல.


எப்போதும் வதந்தியைப் பரப்புவார்:
உங்கள் நாத்தனார் உங்களைப் பற்றி மாமனார், மாமியாரிடம் குறை கூறி வந்தால் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். அவர் எப்போது நீங்கள் அவரிடம் நம்பி கூறியவற்றை வெளியில் சொல்கிறாரோ அல்லது எப்போது ஃபோன் ஒட்டுக்கேட்டு பேசுகிறாரோ அல்லது உங்களின் பழைய கதையை கிண்டுகிறாரோ அவர் உங்களை எதிரியாக பாவிக்க ஆரம்பித்துவிட்டார் என்றே அறிந்து கொள்ளுங்கள்.அவரிடம் கவனமாகவே இருங்கள்.


உங்களை ஆட்டிப்படைக்க நினைக்கிறாரா?
உங்கள் நாத்தி உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சித்து உங்களை ஆட்டிப் படைக்க நினைக்கலாம். துணி துவைத்தல் ஆரம்பித்து சமைப்பது வரை எல்லாவற்றிலும் எங்கள் வீட்டுப் பழக்கம் இதுவல்ல என்று நோண்ட ஆரம்பிக்கலாம். அவர் சொல்வது படி நீங்கள் செய்யாவிட்டால் குறைகளைக் கூறலாம். அவ்வாறு சொன்னார் என்றால் அவர் வில்லி நாத்தியாக மாறி வருகிறார் என்றே அர்த்தம்.


ஃப்ரீ அட்வைஸ் தருகிறாரா?
இந்த உலகத்திலேயே மிகவும் எளிதான, மிகவும் மொன்னையான விஷயம் என்றால் அது ஃப்ரீ அட்வைஸ் தருவது தான். அப்படியான ஆலோசனைகளை உங்களின் நாத்தி வழங்க ஆரம்பிக்கிறார் எச்சரிக்கையாக இருங்கள். வீடு தேடி வந்து அட்வைஸ் செய்துவிட்டுப் போவார்கள். கண்டு கொள்ளாதீர்கள். அதை வைத்து கணவரிடம் சண்டையும் செய்யாதீர்கள். உங்கள் கணவர் மீது சகோதரியான தனக்கே அதிக உரிமை உண்டு என்பதை நிரூபிக்க நூதன வழிகளை கையாள்வர். நீங்கள் இருவரும் இரவில் வெளியே செல்லவிருந்தால் அதை அவர் அறிந்து கொண்டிருந்தால் அழையா விருந்தாளியாக வந்து சகோதரனுக்கு நெருக்கடி தந்து தங்கையா, தாரமா என்று நிரூபிக்க பரீட்சை வைப்பார். அதில் நீங்கள் தோற்றுப் போய் விடாதீர்கள்.


மேற்கூறிய மூன்று நடத்தைகளை காட்டினால் நீங்கள் உங்கள் நாத்தனாரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் எப்பேற்பட்ட உறவுச் சிக்கலையும் அன்பால் வெல்லலாம்.