சியா விதைகள் இதய ஆரோக்கியம், எலும்புகள் வலுப்பெறுவது போன்ற பலவற்றிற்கு மிகுந்த பலனிக்கும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சியா விதைகள் சிறிய அளவில் இருந்தாலும் அதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் மக்கள் பலரும் உடல் ஆரோக்கியத்திற்காக இதனைப்பயன்படுத்தி வருகின்றனர். இதில் உள்ள ஆக்ஸினேற்றிகள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. எனவே இதனை நாம் உள்கொள்ளும் போது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, வலுவான எலும்புகளை ஆதரிக்க மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த என பலவற்றிற்கு உதவியாக உள்ளது. இதனை சமைக்கத் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம் அல்லது தண்ணீர் போன்றவற்றில் ஊறவைத்தும் சாப்பிடலாம் என்பதால் அதிக வேலைப்பளு இதற்கு கிடையாது. மேலும் இதில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளதாக அறிவியல் ரீதியாக நிரூபணமாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் சியா விதைகளை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
சியா விதைகளில் ஏற்படும் நன்மைகள்:
சியா விதைகளில் குறைவான கலோரிகள் மற்றும் குளூட்டன் (Gluten) இல்லாதவை. பொதுவாக சியா விதைகளை சாலட் மற்றும் ஸ்மூதியில் சேர்த்து ஊட்டச்சத்து அடர்த்தியான உணவின் பலன்களை நாம் பெறலாம். சியா விதைகளில் 6 சதவீதம் தண்ணீர், 46 சதவீதம் கார்போஹைட்ரேட், 34 சதவீதம் கொழுப்பு, 19 சதவீதம் புரதம் உள்ளது. 28 கிராம் விதைகளில் 138 கலோரிகள் உள்ளன. 100 கிராம் சியா விதைகளில் 486 கலோரிகள், 16.5 கிராம் புரதம், 42.1 கிராம் கார்ப்ஸ், 30.7 கிராம் கொழுப்பு அடங்கியுள்ளன.
இதய நோய் பிரச்சனைக்குத் தீர்வு: சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 அதிகம் இருப்பதன் காரணமாக அதனை நம்முடைய உணவில் உட்கொள்ளும் போது இதய நோய் அபாயத்தைக்குறைக்க உதவியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஓமோகா 3 அமிலங்கள் இரத்த ஓட்டத்தைச்சீராக்க வைப்பதோடு உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் கட்டுக்குள் வைத்துள்ளது.
எலும்புகள் வலுப்பெறும்: சியா விதைகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசிய சத்துக்கள் உள்ளதால் இவை அனைத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது. எனவே இந்த விதைகளை தொடர்ந்து சாப்பிடுவது எலும்புகளை வலுவாக்குகிறது. மூட்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு சியா விதைகள் நல்ல பலனை தரும்.
இரத்த சர்க்கரை அளவைக்குறைக்கும்: சியா விதைகளை உட்கொள்வது இரத்தச்சர்க்கரை அளவைக்கட்டுப்படுவதற்கு உதவியாக இருக்கும். குறிப்பாக இந்த விதைகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம் என்று விலங்குகள் மூலம் நடத்திய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இருந்தப்போதும் இதற்கு கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை எனவும் கூறப்படுகிறது.
நார்ச்சத்து நிறைந்தது: நார்ச்சத்துக்களை கொண்ட சியா விதைகளை உணவில் சேர்க்கும் போது, குடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றவும், குடல் இயக்கங்களை சரி செய்ய உதவியாக உள்ளது. மேலும் தற்போது பலரின் பெரிய பிரச்சனைகளில் ஒன்றான தொப்பையை குறைக்க விரும்புவோரும் சியா விதைகளை சாப்பிட்டால் நல்ல பலனளிக்கும்.
சியா விதையில் alpha-linoleic acid என்கிற அமிலங்கள் உள்ளதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் அதிகளவில் உள்ளது. மேலும் சியா விதைகளில் எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ஸ் இருப்பதால் உடலின் செல்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு உடலில் உருவாகும் தேவையற்ற கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது.
குறிப்பாக ஒருவர் ஒரு நாளைக்கு 20 கிராம் முதல் 40 கிராம் அளவு சியா விதையை எடுத்துக் கொண்டால் ஹார்மோன் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.