உலகம் முழுவதும் ஆண்டு தோறும் இதய நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதுவும் இளம் வயதினருக்கு ஹார்ட் அட்டாக் என்று பரவலாக அறியப்படும் மாரடைப்பு நோய் ஏற்படுவது அதிகரித்துள்ளது.


இதற்கு இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடற் பயிற்சிகள் இல்லாத சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, உடல் எடை ஆகியன முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பொதுவாகவே ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், டயபெட்டீஸ் எனும் சர்க்கரை ஆகியன லைஃப் ஸ்டைல் டிசீஸ் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களாக அறியப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் மரபியல் ரீதியாகவும் மாரடைப்பு கடத்தப்படுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மணிபால் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் பிபின் குமார் துபே, மாரடைப்பில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளைக் கூறுகிறார்.


மரபுவழி தாக்கம், புகைப் பிடித்தல், மது அருந்துதல், சர்க்கரை நோய், உயர் கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகியன மாரடைப்புக்குப் பிரதான காரணங்களாகப் பட்டியலிடப் பட்டிருந்தாலும் கூட சில ஆவணப்படுத்தப்படாத காரணங்களும் இருக்கின்றன.




இவற்றில் பிரதான இடம் பிடிக்கிறது உடற்பயிற்சிக் கூடத்தில் வழங்கப்படும் இணை உணவுகள், ஜிம்களில் சில நேரங்களில் பாடி பில்டர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளுக்கு இதயத்தில் பக்க விளைவு ஏற்படுத்தும் தன்மை உண்டு என்பதைப் பலரும் அறிவதில்லை. 
அதேபோல், தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு மரபணு ரீதியாகவே இதய நோய்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. வயதும் மாரடைப்புக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. இந்தியாவில் 40-ஐக் கடந்துவிட்டாலே மாரடைப்புக்கான சாத்தியக் கூறு அதிகமாக இருக்கிறது.


ஆனால்,  அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் 50 வயதுக்கு மேல் தான் மாரடைப்புக்கான வாய்ப்பு ஏற்படுகிறது. மோசமான வாழ்க்கை முறை இருந்தால் 20 ல் இருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் இதய நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.


சில தடுப்பு முறைகள்:


1. எப்போதும் ஆரோக்கியமான கொழுப்பு உணவை உட்கொள்ளுங்கள். பசு நெய், பாதாம், வால்நட், மீன், அவகேடோ போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
2. சமையல் எண்ணெய், இறைச்சி, சிவப்பு இறைச்சி, பயன்படுத்தப்பட்ட எண்ணெய் ஆகியனவற்றை உணவில் தவிர்க்கவும்.
3. நார்ச்சத்து உள்ள உணவை அதிகமாக உட்கொள்ளவும். சோளம், கோதுமை, ஓட்ஸ், தானியங்கள், காய்கறிகள், பீன்ஸ் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.




4. சர்க்கரையைத் தவிர்க்கலாம்.
5. அன்றாடம் 45 முதல் 1 மணி நேரம் வரையிலாவது நடப்பது நலம் பயக்கும். நீச்சல், ஜாக்கிங், கார்டியோ ஒர்க் அவுட்ஸ், ஏரோபிக்ஸ், யோகா, பிரணயாமா ஆகியனவற்றைச் செய்யலாம்.
6. ஒருவேளை உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை உடனே விட்டுவிடுங்கள். புகைப்பதை நிறுத்தினால் ஆர்ட்டரீஸ் எனப்படும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும்.


இது போன்ற பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் போது இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பில் இருந்து நிச்சயம் தற்காத்துக் கொள்ளலாம்.