சர்க்கரை நோய் வந்துவிட்டாலே சாப்பாட்டில் தான் பல்வேறு கெடுபிடிகளும் விதிக்கப்படும். அப்படியென்றால் இனி வாழ்வில் ஸ்நேக்ஸ் டைமே கிடையாதா என்ற சந்தேகம் நம்மில் எழலாம். அப்படி இல்லை. உணவே மருந்து என்று போதித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதனால் உணவை அறிந்து உண்டால் அது நன்மை பயக்கும். வழக்கமாக சாப்பிடும் இனிப்பு, கார, சேவரிகளை தவிர்த்து வேறு விதமான ஆரோக்கியமான ஸ்நேக்ஸுக்கு நாம் மாறலாம். அவற்றில் சிலவற்றை உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம்.


பாதாம்:


பாதாம் பருப்புக்கு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. அதுவும் டைப் 2 டயபெட்டீஸ் உள்ளவர்கள் அன்றாடம் 30 கிராம் பாதாம் சாப்பிடலாம். 30 கிராம் என்பது சராசரியாக 23 பாதாம் என வைத்துக் கொள்ளுங்களேன். இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடலின் க்ளைசிமிக் லெவலை சீராக வைக்கும். இதனால் டைப் 2 டயபெட்டீஸ் உள்ளோருக்கு ஏற்படக் கூடிய கார்டியோ வாஸ்குலார் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறார் முனைவர் சீமா குலாட்டி. பாதாமை அப்படியே சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதனை டோஸ்ட் செய்தோ, சாலட்களில் சேர்த்தோ சாப்பிடலாம்.


வேகவைத்த கொண்டைக்கடலை:


 கொண்டைக்கடலை இந்திய சமையலறைகளில் இருக்கும் பொருள் தான். ஆய்வில் இந்தக் கொண்டைக் கடலைக்கு சாப்பிட்ட பின்னர் உண்டாகும் க்ளூகோஸ் அளவைக் கட்டுப்படுத்தி தீராப் பசியை போக்கும் தன்மை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மற்ற உணவு வேலைகளில் உண்ணக் கூடிய உணவின் அளவு குறையும். 6 வாரங்களுக்கு தொடர்ந்து கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்த 19 பேருக்கு ரத்த சர்க்கரை அளவு குறைந்து இன்சுலின் அளவு சீரானது கண்டறியப்பட்டது. கொண்டைக்கடலையை வறுத்தும் சாப்பிடலாம். சில நாள் வேகவைத்தும், சில நாட்கள் வறுத்தும் சாப்பிடலாம். தென்னிந்தியாவில் சுண்டல் எனப்படும் ஈவினிங் ஸ்நேக் ரொம்பவே பிரபலம்.
 
தயிர்:


வீட்டில் தயார் செய்யப்பட்ட தயிர் நல்ல ஸ்நேக். அன்றாடம் 80 முதல் 125 கிராம் தயிர் உட்கொள்வதால் டைப் 2 டயபெட்டீஸ் வராமலேயே காப்பதில் 14 சதவீதம் பங்கு வகிக்கிறது. தயிர் அதிக புரதச் சத்து கொண்டது. மேலும் இதில் உள்ள ப்ரோபயாடிக்ஸ் குடல் நலத்தைப் பேணும். கடையில் கிடைக்கும் யோகர்ட் பல ஃப்ளேவர்ட் யோகர்ட்டாக இருக்கும் நிலையில் அவ்வாறாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. சாதாரண யோகர்டில் ஸ்ட்ராபெர்ரீஸ், வாழைப்பழம், வெட்டிய பாதாம் ஆகியனவற்றை சேர்த்து உண்ணலாம். 


இவ்வாறு இந்த ஸ்நேக்ஸ்களை சாப்பிடலாம்.சர்க்கரை என்பதே நம் வாழ்க்கை முறையால் ஏற்படும் பாதிப்புதான். நீங்கள் எடை அதிகம் கொண்டவராக இருந்தால் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தகுந்த பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் எடையில், 5% மாவது குறைத்துவிடுங்கள். கூடவே, அதிக நார்ச்சத்து, குறைந்த ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் சர்க்கரை கொண்ட உணவை உட்கொள்ளுங்கள். அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இப்படி லைஃப்ஸ்டைலை மாற்றிவிட்டால் சர்க்கரையை தள்ளிவைக்கலாம்.


இவை தவிர சர்க்கரை நோயாளிகள் கொய்யா, பப்பாளி, மாதுளை, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழ வகைகளை உண்ணலாம். உண்மையில் சரியான இடைவெளியில் பழங்களை உட்கொண்டால் சர்க்கரை நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ளலாம். ஒருநாளைக்கு 150 கிராம் பழங்களை மட்டுமே உண்ணலாம். 5 முதல் 12 ஆண்டு காலமாக உங்களுக்கு அன்றாடம் ஏதேனும் பழம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் உங்களை சர்க்கரை நோய் தாக்குவதற்கான வாய்ப்பு 40% குறைவு.