Sleeping Side Effects: சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு மைக்ரோவாஸ்குலர் நோய் பாதிப்பு ஏற்படக் கூடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


ஆரோக்கியத்திற்கான தூக்கம்:


நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் மிகவும் அவசியமானதாகும். நமது உடலுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 8 மணிநேரம் தூக்கம் தேவை என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அதற்கு மேல் தூங்கினால் உடலுக்கு கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு பல நோய்கள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?


டேனிஷ் விஞ்ஞானிகள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் பல முக்கிய விஷயங்களை வெளிப்படுத்தியது. அதில்,  அதிக தூக்கத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிய, விஞ்ஞானிகள் சுமார் 400 பேரின் தூக்க முறைகளை பத்து நாட்களுக்கு ஆய்வு செய்தனர். பங்கேற்பாளர்கள் அனைவரும் வகை 2 நீரிழிவு நோயாளிகள். அவர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு அவர்களது தூங்கும் நேரம் கண்காணிக்கப்பட்டது. முதல் பிரிவு 7 மணி நேரத்திற்கும் குறைவாகவும், இரண்டாவது பிரிவு 8 முதல் 9 மணி நேரமும், மூன்றாவது வகை 9 மணி நேரத்திற்கும் அதிகமாகவும் தூங்கும் வகையில் அமைக்கப்பட்டது. பின்னர், அவர்களுக்குள் ஏற்படும் உடல் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 


மைக்ரோவாஸ்குலர் பாதிப்பு:


ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மைக்ரோவாஸ்குலர் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 2.6 மடங்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது. மைக்ரோவாஸ்குலர் சேதம் என்பது உடலில் உள்ள சிறிய ரத்த நாளங்கள் குறுகுவதைக் குறிக்கிறது. ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கும் இந்த மைக்ரோவாஸ்குலர் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 2.3 மடங்கு அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், பிரிவு 2 இல் உள்ளவர்களில் எந்தப் பிரச்சனையும் காணப்படவில்லை. எனவே தினமும் 8 முதல் 9 மணி நேரம் தூங்குவது சிறந்தது. அதை விட அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது என எச்சரிக்கின்றனர்.


மைக்ரோவாஸ்குலர் சேதத்தின் அபாயங்கள் என்ன?


இந்த மைக்ரோவாஸ்குலர் பாதிப்பு காரணமாக சிறுநீரகங்களும் செயலிழக்கக்கூடும். இதன் விளைவாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் போன்ற சிகிச்சை முறைகளை நாட வேண்டியுள்ளது. இது தவிர பாதிக்கப்படும் நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், அவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம். நரம்பு பாதிப்பால் பார்வை குறைபாடு ஏற்படலாம். அதிகம் தூங்குபவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நோயினால் ரத்த நாளங்கள் சுருங்குவதுடன், ஆபத்தான தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.. 


(குறிப்பு: பல்வேறு ஆய்வுகள், ஆராய்ச்சிகள் மற்றும் சுகாதார இதழ்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் உங்கள் புரிதலுக்காக இங்கே தரப்பட்டுள்ளன. இந்த தகவல் மருத்துவ பராமரிப்பு அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. உடல்நலம் குறித்து சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களுக்கு 'ஏபிபி நாடு' மற்றும் 'ஏபிபி நெட்வொர்க்' எந்தப் பொறுப்பையும் ஏற்காது என்பதை நினைவில் கொள்ளவும்.)