இலவங்கப்பட்டை என்பது இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் மிகவும் பிரபலமானதாகும். இது சருமத்துக்கு அழகு ஊட்டுவதற்கு மிகவும் உகந்த பொருளாக பயன்படுத்தப்படுகிறது. நல்ல ஆக்சிஜனை உடலுக்கு கொடுக்கும் தன்மை இலவங்கப்பட்டையில் அதிகமாக உள்ளதென ஆய்வுகள் கூறுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் இந்த லவங்கப்பட்டை செயலாற்றுகிறது.
இன்சுலின் தடுப்பு மற்றும் வகை 2 சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் இலவங்கப்பட்டை முக்கிய பங்கு வைப்பதாக மருத்துவ ஆய்வுகள் இருக்கின்றன.
மரங்களிலிருந்து பெறப்படும் இந்த இலவங்கப்பட்டையானது இந்தியாவை தாண்டி பல உலக நாடுகளிலும் பிரபல மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலங்களில் இந்த லவங்கப்பட்டை இலங்கையிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.
மற்ற இயற்கை மூலிகைகளை விட லவங்கப்பட்டை ஒரு இயற்கை ஆக்ஸிஜனேற்றியாகப் செயல்படுகிறது. ஆரம்பகாலங்களில் இலவங்கப்பட்டை தூளாக சமையலுக்கும், மருத்துவத்திற்கும் பயன்பட்டு வந்தாலும், தற்போது இந்த பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வகைகள் பல நோய்களுக்கு, அதாவது சளி தொந்தரவு, மூட்டு வலி, உடலில் அடிபட்ட காயங்களுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
லவங்கப்பட்டை எண்ணெயை தற்போது வாசனை திரவியங்கள், லிப் பாம்கள் மற்றும் ஸ்க்ரப் போன்ற அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் இந்த லவங்கப்பட்டை தூள், எண்ணெய் போன்றன தற்போது சரும பராமரிப்பிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. முகப்பரு தழும்புகள், சுருக்கம் போன்றவற்றை சரி செய்து சருமத்தை அழகாக்கி என்றும் இளமையாக வைத்திருக்க உதவி செய்கிறது.
லவங்கப்பட்டைக்கு நீண்ட நெடிய வரலாறு இருந்த போதிலும் அது ஒரு ஆரம்ப காலங்களில் வாசனை திரவியமாக பயன்படுத்தப்பட்டு வந்து பின்னர் கறி மசாலாக்களில் பயன்படுத்தப்பட்டது .தற்போது இது ஒரு அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
தோல் பராமரிப்பு பொருட்களில் முக்கியமாக இலவங்கப்பட்டை பயன்படுத்தப்படுகிறது. இதில் சற்று எரிச்சலூட்டும் பண்பு இருந்தாலும் முகத்தை நோய்க்கிருமிகளில் இருந்து இது பாதுகாக்கிறது. மிகவும் குறைவாக பயன்படுத்தவேண்டும், ஒரு துளி போதுமானது
பருக்களை சரி செய்கிறது:
லவங்கப்பட்டையில் ஆண்டிமைக்ரோபியல் குணங்கள் இருப்பதால் முகப்பரு மற்றும் பருக்களை நீக்கும்தன்மை இதற்கு உண்டென ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. ஒரு டீஸ்பூன் தேனுடன் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மற்றும் சில துளிகள் இலவங்கப்பட்டை எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 20 நிமிடங்கள் வரை நன்கு காய விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக்கொண்டு முகத்தை கழுவி நன்கு சுத்தம் செய்யவும்.
அதிக அளவிலான முகப்பருக்கள் தோலில் தழும்புகளை உண்டாக்கிவிடும் .ஆகவே தழும்புகளை நீக்கி கிருமி தொற்றுகளை எதிர்க்கும் பண்புகளை கொண்ட லவங்கப்பட்டை முகத்தின் அழகுக்கு மெருகூட்டுகிறது.
இலவங்கபட்டையில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருப்பதால் , அவை முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது. அதேபோல் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி முகப்பருவை வேகமாக அகற்ற இலவங்கப்பட்டை உதவுகிறது.
சுருக்கங்களை சரி செய்யும் லவங்கப்பட்டை:
சிலருக்கு இளம் வயது முதலே சருமத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். இந்த முகத்தில் வரும் சுருக்கங்களை போக்க ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
நிறைந்த லவங்கப்பட்டையை பயன்படுத்தலாமென மருத்துவர்கள் கூறுகின்றனர். முதலில் இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் கலவையை உங்கள் முகத்தில் பூசி பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்தில் இரு முறை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போய்விடும்.
முகத்தை சுத்தம் செய்யும் ஸ்கிரப்:
முகத்துக்கு வாரம் ஒரு முறை ஸ்க்ரப் செய்து சுத்தப்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கும் அழுக்கையும் இறந்த செல்லையும் அகற்றி விடலாம். முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பளிச்சென வைத்திருக்கும் ஒரு மருத்துவ குணமிக்க இயற்கை பொருளாக இந்த லவங்கப்பட்டை இருக்கிறது.
ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியுடன் ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். முதலில் இதனை முகத்தில் நன்கு தேய்த்து லேசான மசாஜ் செய்து பின்னர் இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் காய்ந்து போகும் வரை விட்டு வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி முகத்தை நன்கு சுத்தம் செய்யவும்.
முகத் தழும்புகளை அகற்ற உதவுகிறது:
சிலருக்கு முகத்தில் அதிகளவான பருக்கள் ஏற்படும் போது அவற்றுடனே தழும்புகளும் கருப்பு நிறமாகி முகத்திலேயே இருக்கும்.
இந்த தழும்புகளை நீக்குவதற்கு சிறந்த மருந்தாக இந்த லவங்கப்பட்டை செயலாற்றுகிறது. இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை எண்ணெயை நன்கு கலந்து முகம் முழுவதும் தடவ வேண்டும் . பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
சரும வறட்சியை நீக்குகிறது:
சாதாரணமாக சிலருக்கு எப்போதுமே தோல் வறட்சியாக காணப்படும் .தற்போது குளிர்காலம் என்பதாலும் சரும வறட்சி அதிகளவில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சருமத்தில் ஏற்படும் வறட்சியை நீக்கி எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்தன்மை இந்த லவங்கப்பட்டைக்கு இருக்கிறது. சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் இது வைத்திருக்க உதவுகிறது.
ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கடல் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும். குறித்த கலவையை முகத்தில் நன்கு பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து முகத்தை நன்கு தண்ணீரால் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வாரத்துக்கு இரு முறை இவ்வாறு செய்து வந்தால் முகம் நன்கு ஈரத்தன்மையுடன் பளிச்சென இருக்கும்.