குழந்தை வளர்ப்பு என்பது உண்மையில் ஒரு கலை. ஆனால் அதை நிறைய பெற்றோர் உணர்ந்து கொள்வதில்லை. ஒருசில பெற்றோர்கள் எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு என்று பிள்ளைகளை கூண்டுக் கிளிகள் ஆக்கிவிடுகின்றனர். இன்னும் சிலர் பிள்ளைகளுக்கு சுதந்திரம் அளிக்கிறோம் என்ற பெயரில் அவர்களுக்கு கட்டற்ற சுதந்திரங்களை வழங்கி அதில் சிறிது கண்காணிப்பு செய்யாமல் தறி கெட்டுப் போக காரணமாகிவிடுகின்றனர். பிள்ளை வளர்ப்பு  அத்தனை நேர்த்தியாக செய்ய வேண்டியது. அவ்வாறாக செய்கையில் உண்மையில் பிள்ளைகளுடன் சேர்ந்து நாமும் வளரத்தான் செய்வோம்.


வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் போது சிப்ளிங் ரைவல்ரி எனப்படும் சகோதர யுத்தம் வராமல் இருக்கவே இருக்காது. அதெல்லாம் இந்த உலகில் வாழக் கற்றுக் கொள்ளுதலின் ஒரு பகுதியே. ஆனால் அதன் எல்லை என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும்.


என் பிள்ளைக்கு பிடிவாதம் ஜாஸ்தி. என் குழந்தைகள் அடிதடியில் தான் நிற்கிறார்கள் என்று கூறும் பெற்றோர்களுக்கான டிப்ஸ் தான் இது.


1. சகோதர யுத்தம்


சகோதர யுத்தத்தை பெற்றோர்கள் சாதாரணமாகக் கடந்துவிடக் கூடாது. ஒருசில நேரங்களில் சிறுவயதில் ஏற்படும் சிறு மனக்கசப்பு வாழ்நாளுக்குமான வெறுப்பு கசப்பாக மாறிவிடும். அது குடும்ப நிம்மதியை குலைத்துவிடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.


தீர்மானம்


உங்கள் பிள்ளைகள் ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் போது இருவரையும் அமரவைத்து பேசுங்கள். அவர்கள் இருவரில் யாருடைய செயலையும் நியாயப்படுத்தாதீர்கள். ஒருவேளை சண்டை நீடிக்குமேயானால் பாரபட்சமின்றி தண்டனை இருவருக்குமே கிடைக்கும் என்று புரிய வையுங்கள். தண்டனைகள் கொடூரமானதாக நிர்ணயிக்காதீர்கள். அந்தத் தண்டனை அவர்கள் தவற்றை உணர வைப்பதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு இருவரும் வீட்டிற்குள் கிரிக்கெட் விளையாடி டிவியை உடைத்திருந்தால். அந்த டிவியை வாங்க பணம் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை அவர்கள் உணரச் செய்யும் வகையில் அவர்களை பணம் சேர்க்கச் செய்யுங்கள். அப்போது ஆகும் காலதாமதம் பொருட்களின் மதிப்பை, பணத்தின் மதிப்பை விளையாட்டுத் தனத்தில் இருக்கும் விபரீதங்களை உணர வைக்கும்.


கீழ்ப்படியாமை


நீங்கள் ஏதேனும் வேலை செய்யச் சொல்லி அதை உங்கள் குழந்தை செய்ய மறுத்தால் உடனே என்ன செய்வீர்கள் கத்தி, கூச்சலிட்டு சில நேரங்களில் வசைபாடி ஏன் அடிக்கவும் கூட செய்வீர்கள் தானே. இவையெல்லாம் உங்கள் குழந்தையின் பிடிவாதத்தை அதிகரிக்கும். அவர்கள் உங்களை ஒரு அதிகார மையமாகவே பார்ப்பார்கள். மாறாக நீங்கள் அவர்களிடம் ஏன் செய்ய முடியாது என மறுக்கிறீர்கள்? அப்புறம் செய்து தருகிறீர்களா? அதை செய்வதில் நான் ஏதும் உதவி செய்யவா என்றெல்லாம் கேட்டுப்பாருங்கள். நீங்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் போது அவர்கள் உங்களின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவார்கள்


கூச்ச சுபாவம் இருக்கிறதா?


சில பெற்றோரின் கவலை என் குழந்தைக்கு கூச்ச சுவாபம் அதிகம் என்பார்கள். சில குழந்தைகள் நன்றாக எல்லோரிடமும் பேசுவார்கள். ஆனால் சிலர் அவ்வாறு பேச மாட்டார்கள். 


என்ன செய்யலாம்? 


இந்த மாதிரியான கூச்ச சுவாபம் உள்ள குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களிடம் ஏன் தயக்கம் வருகிறது. என்ன மனத்தடை இருக்கிறது என்று கேளுங்கள். ஆனால் அவர்கள் உடனடியாக மற்ற குழந்தைகளுடன் பேச வேண்டும் என்று நிர்பந்திக்காதீர்கள். ஏனெனில் அது அவர்களுக்கு இன்னும் அழுத்தம் தரும். உங்கள் குழந்தைகளின் உயரம், உடல் வாகு, வயது, படிக்கும் வகுப்பு ஒத்துப்போகும் குழந்தைகளிடம் அவர்களை அறிமுகப்படுத்தி வையுங்கள். அவர்கள் இருவருக்கும் இடையே பாலமாக இருங்கள்.