மன்னிப்பு வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது
மகிழ்ச்சியோடு அமைதியான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்றால் இதற்கு சக மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து ஏற்பதே அடித்தளமாக அமையும். கடந்த கால காயங்களை விட்டுவிடவும், காயங்களை குணப்படுத்தவும் மன்னிப்பு என்பதே மா மருந்தாக இருக்கும்.
துக்கத்தை, வலியையும் உங்கள் இதயங்களில் சுமந்தால் அது உங்கள் மனதையும், இதயத்தையும் விலகச் செய்துவிடும் என்பது உளவியல் அறிஞர்களின் கூற்று.
வெறுப்புணர்வை கொண்டிருப்பவர்களை விட மன்னிப்பை நாடுவோர் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இந்த வகையில் மன்னிக்கும் மனது என்பது உடலையும், மனதையும் மேம்படுத்தும் ஒரு அறிய கலை என்று கூறவேண்டும்.
இது குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 7ஆம் தேதி இன்று உலக மன்னிப்பு தினம் அனுசரிக்க பட்டு வருகிறது.
இதை ஒட்டி சமூக நல்லிணக்க பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:-
மன்னிப்பு என்பது ஒரு மனிதன் சக மனிதனுக்கு கொடுக்கும் மாபெரும் பரிசு என்றே கூற வேண்டும் மன்னிக்கும் திறன் என்பது அனைத்து மனிதர்களுக்குள்ளும் இயல்பாக இருக்கிறது. ஆனால் ஆழ்மனதில் ஊடுருவி நிற்கும் தான் என்னும் அகங்காரம் என்பது அதனை தடுத்து விடுகிறது. சுய உழைப்பு கடும் வலிகளை தாண்டி வந்த மனிதர்கள் மன்னிப்பதையும், மன்னிப்பு கேட்பதையும் எளிதாக எடுத்துக் கொள்வார்கள்.
இதற்கு உதாரணமாக தலைவர்கள், அறிஞர்கள், மேதைகள் பலரை இந்த உலகம் தந்துள்ளது. இவர்களை தான் நாம் மாமனிதர்கள் என்கிறோம். ஒரு தவறு செய்தால் மன்னிப்பு கேட்பவன் மனிதன் அதனை ஏற்று அரவணைப்பவன் மாமனிதன்.
தமிழ் மொழியின் பிரதானமான சொல்லாடல்
மாமனிதன் என்ற சொல்லாடல் தமிழ் மொழியில் மிகவும் பிரபலமானது கடந்த கால வரலாறுகளை எடுத்துக் கொண்டால் மக்களை வேதனையில் ஆழ்த்திய கடும் போர்கள் எல்லாம் மன்னிக்கும் நிலைமையில் மனிதர்கள் இல்லாததால் நடந்துள்ளது.
பல யுத்தங்கள் நிறுத்தப்பட்டது
மன்னிப்பு கோரியதால் உலகளாவிய பல யுத்தங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. வீடு தொடங்கி நாடு, நகரம், கிராமம் என்று அனைத்து இடங்களிலும் தவறு செய்தால் உடனடியாக மன்னிப்பு கேட்கும் மனப்பாங்கு இருந்தது.
கிராமங்களில் மன்னிப்புக்கு முக்கியத்துவம்
இது மட்டுமின்றி கிராமங்களில் பஞ்சாயத்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு என்பதில் மன்னிப்பு என்ற வார்த்தையே உயிரோட்டமாக இருந்தது. ஆனால் இன்றைய மனித வாழ்க்கை சூழல் மனிதனை இயந்திரமாக மாற்றி வைத்துள்ளது. இதன் காரணமாக மன்னிப்பு என்பதற்கான அர்த்தம் புரியாமல் தான் பெரும்பாலானவர்கள் உள்ளனர். முக்கியமாக பழிக்கு பழி என்ற சொல் எங்கு பார்த்தாலும் பிரதானமாக உள்ளது.
மன்னிப்பு என்ற சொல்லை மனிதகுலம் மறந்ததே இதற்கு முக்கிய காரணம் இந்த சொல்லை மனித மனங்களில் இருந்து முற்றிலும் அழிப்பது ஈகோ என்னும் இரண்டெழுத்து மன்னிக்கலாம் என்ற உள்மனது சொன்னாலும் பழிவாங்க வேண்டும் என்று வெளிவந்து சொல்கின்றது.
மன்னிப்பு கொடுக்காதவன் சமூகத்தில் எப்படி இருப்பான்?
இதுதான் சமூகத்தில் தனக்கான தனித்தன்மையை நிலை நிறுத்தும் என்ற நினைப்பை தூண்டுகிறது. இதன் காரணமாகவே பழிக்கு பழி என்று நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய குறளின் வரிகள். அதாவது நமக்கு தீமை செய்தவர்கள் நாண வேண்டும் என்றால் நாம் அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது இந்த வரிகள் உணர்த்தும் பொருள்.
மன்னிப்பு நமக்கு தீங்கு விளைவிக்காது
இவ்வகையில் மன்னிப்பு என்பது ஒரு விதத்தில் நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு நாம் கொடுக்கும் சிறந்த தண்டனைதான். ஆனால் இந்த தண்டனை என்பது இருதரப்பு மனிதர்களையும் மாமனிதனாக மாற்றும்.
எனவே இந்நாளில் மன்னிக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள அனைவரும் உறுதி ஏற்பது மிகவும் அவசியம் இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்