பழங்களைச் சாப்பிடுவதால் உள்ளுறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். மூளையின் செயல்திறன் கூடும். தேகத்தின் மினுமினுப்பைக் கூட்டும். ஆனால் அதன் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். அதேபோல் ஒவ்வொரு வகை நிறத்திலும் உள்ள  பழங்கள் குறிப்பிட்ட பண்பினையும் குறிப்பிட்ட நோய்களை தடுக்கும் அல்லது குறைக்கும் தன்மையும்  பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


உதாரணத்துக்கு மஞ்சள் நிறதிலுள்ள பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்குவதோடு, ரத்தம் சுத்தமடையும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும் தன்மை உடையது.


சிவப்பு நிற பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம். இவை ரத்தத்தை விருத்தி செய்யும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது, கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி சிவப்பு நிற பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

எனவே, பழங்களின் நன்மைகளை முழுவதுமாகப் பெற வேண்டுமானால் எந்த வகை பழத்தை எந்த சீசனில் சாப்பிட வேண்டும். எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்து கொள்வது அவசியம்.


அவ்வளவு அலசி ஆராயாவிட்டாலும் கூட எளிமையான இந்த மூன்று டிப்ஸ் மட்டுமாவது பின்பற்றவும்.


1. பழங்களை நறுக்காமல் கடித்து சாப்பிடுங்கள்


பழங்களின் நன்மைகளை முழுமையாகப் பெற அதை சிறு துண்டுகளாக நறுக்கவோ அல்லது சாறாக பிழியவோ செய்யாமல் அப்படியே கடித்துச் சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின், மினரல், என்சைம்ஸ் ஆகியன முழுமையாக நமக்குக் கிடைக்கும். மேலும், பழத்தை நாம் கடித்துச் சாப்பிடும்போது கிடைக்கும் சாறு ரத்த சர்க்கரை அளவைக் கூட்டாது. பழச்சாறாக அருந்தினால் ரத்த சர்க்கரை அளவு கூடும் மேலும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவையும் அதிகரிக்கும்.


2. உணவுக்கு அப்புறம் பழங்களை சாப்பிடலாமா?


உணவுக்கு அப்புறம் பழங்களை சாப்பிடக் கூடாது என்றே நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உணவுக்குப் பின்னர் பழங்களை உட்கொண்டால் அது வயிறு அதிகமாக அமிலத்தை சுரக்கச் செய்யும். இதனால் பழங்களின் சத்து முழையாக உடலுக்குக் கிடைக்காமல் போய்விடும்.


3. பழங்கள் சாப்பிடும் முன்னர் கொஞ்சம் நட்ஸ் சாப்பிடுங்கள்


பழங்களை சாப்பிடும் முன்னர் சிறிதளவு நட்ஸ் சாப்பிடவும். அதனால் பழங்களால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். 
 
பொதுவாகவே பழங்களை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் அது எளிதில் ஜீரணமாகும். பழங்களை சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் வேறு ஏதேனும் உணவை எடுத்துக் கொள்வதை எப்போதும் தவிர்க்கவும்.


உணவிற்கு முன் பழங்களை சாப்பிட்டு அரை மணிநேரத்திற்கு பிறகு மற்ற சமைத்த உணவுகளை சாப்பிடலாம். இரவும் உணவிற்கு முன் பழங்களை சாப்பிடலாம்.  ஒரு நாளைக்கு குறைந்தது 2 வகையான பழங்கள் சாப்பிட வேண்டும். இது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். பழங்கள் அனைத்தையும் சேர்த்து பழக்கலவையாக எடுத்துக்கொள்ளலாம். 


பழங்கள் ருசியானவை மட்டுமல்ல ஆரோக்கியமானவையும் கூட. நோய் எதிர்ப்பு சக்தியும், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் பண்புகளும் கொண்டவை. பழங்கள் சிலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும். மூன்று வேலையும் உணவிற்கு பதிலாக பழங்களை கொடுத்தால் கூட சாப்பிட்டு விடுவார்கள். சிலருக்கு பழங்கள் என்றாலே ஒவ்வாமை. எந்த பழத்தையும் சாப்பிட பிடிக்காது. 


உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தருபவை கனிகள்.  மிகக் குறைந்த அளவிலேயே பழங்களில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.