குளிர்காலம், மழைகாலம் போன்ற பருவநிலை மாறும்போது  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க உணவுமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். 


குளிரில் சூடான சூப் குடிக்க விரும்புபவர்களுக்கு ஆரோக்கியமான சூப் தயாரிப்பு முறைகளையும் செய்முறையை இங்கே காணலாம். உணவு முறையில் மாற்றம் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். நெல்லிக்காயில் சூப் செய்வது எப்படி என்பதை காணலாம். 


குளிர்காலத்தில் நெல்லிக்காய் சூப் ஏன் நல்லது?


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:


நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. இது தொற்று கிருமிகளை எதிர்த்து போராடா உதவும். 


செரிமான மண்டலம் சீரா செயல்பட:


நெல்லிக்காய் நார்ச்சத்து நிறைந்தது. இது நெஞ்சு எரிச்சல் பிரச்னையை தீர்க்க உதவும். குடல்புண் இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால் குணமாகும். 


நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள்..


நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இதில் Soluble நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம். 


தலைமுடி வளர்ச்சி மேம்பட:


இந்தியாவில் வெகுகாலமாக ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் ஆரோக்கியம் முதல் தலைமுடி வளர்ச்சி வரை நெல்லிக்காய் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. நெல்லிக்காய் சேர்த்த தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும் என்று சொல்லப்பட்டுள்ளது. வைட்டமின் சி இதற்கு காரணம். 


நெல்லிக்காய் அப்படியே சாப்பிடலாம், நெல்லிக்காய் ஜூஸ் என அதோடு புதினா என ஏதாவது சேர்த்து செய்து சாப்பிடலாம். ஆனால், நெல்லிக்காய் சூப் அதிகமாக புளிக்குமே. அதை சரிசெய்ய என்ன செய்யலாம் என்றால் கொஞ்சம் வெல்லம் அல்லது தேன் சேர்த்து செய்தால் புளிப்பு அதிகமாக இருக்காது. 


நெல்லிக்காய் சூப் செய்வது எப்படி?


என்னென்ன தேவை?


நெல்லிக்காய் - 2


மிளகு - ஒரு டீஸ்பூன்


சீரகம் - ஒரு டீஸ்பூன்


பச்சை மிளகாய் - 1


மஞ்சள் - 1 டீஸ்பூன்


உப்பு - சிறிதளவு


பாசி பருப்பு - அரை கப்


நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்


சிவப்பு மிளகாய் - 2 






செய்முறை:


நெல்லிக்காய் சூப் செய்வது எளிதானது. பாசி பருப்பை ஊறவைத்து வேக வைத்து தனியே வைக்கவும். நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி, மிளகு, சீரகம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் இந்த நெல்லிக்காய் கலவை, வேக வைத்த பாசி பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும். அரை கப் தண்ணீர் சேர்க்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து சிகப்பு மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வெடித்ததும் சூப் சேர்க்கவும். ஒரு கொதி வருவதற்குள் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி இலைகள் தூவி சூடாக அருந்தலாம்.