கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி. அது பிடிக்கவே பிடிக்காது என்பார்கள். ஆனால், ஒரு முறை இந்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்போடு(Ennai Kathirikai Kulambu) கத்தரிக்காயை சுவைத்துவிட்டால் மீண்டும் ‘கொண்டா, கொண்டா’ என கேட்பார்கள். அந்த அளவிற்கு கத்தரிக்காய் அவர்களை கட்டிப்போட்டுவிடும்.



எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு


தேவையான பொருட்கள் :-


கத்தரிக்காய் 10, நல்லெண்ணெய், சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, வெல்லம், கடுகு, வெந்தயம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், மிளகு, சின்ன ஜீரகம், புளி, தேங்காய் -  (அனைத்தும் தேவையான அளவு)


அடுக்களைக்கு செல்லும் முன் செய்முறை :-


முதலில் கத்தரிக்காயை பாதி காம்போடு நறுக்கி, அதனை பாதியாக நறுக்கி விடாமல் நான்கு துண்டுகளாக கீறல் மட்டும் போட்டு தண்ணீரில் போட்டு வையுங்கள், பத்தில் இருந்து 15 சின்ன வெங்காயம் உரித்து வைத்துக்கொள்ள வேண்டும். கட் செய்ய வேண்டாம். பின்னர், 2 தக்காளிகளை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும், மீண்டும் ஒரு 5 முதல் 7 வரையிலான சின்ன வெங்காயம் எடுத்து, அதனை உரித்து பொடிசாக கட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அதோடு, பூண்டு 15 பற்கள் வேண்டும். இஞ்சி கட்டை விரல் அளவு போதுமானது. நெல்லிக்காய் அளவு புளி எடுத்து ஊற வைத்துக்கொள்ளவும்


அதோடு சேர்த்து, மிளகு ஒரு ஸ்பூன், ஜீரகம் ஒரு ஸ்பூன் மிக்ஸியில் போட்டு அவை மிருதுவாக வரும் வரை அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.


அடுக்களைக்கு சென்ற பின் – செய்முறை :-


 அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து அது சூடானதும் இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், கீறல் போட்டு தண்ணீரில் போட்டு வைத்துள்ள கத்தரிக்காய்களை எடுத்து எண்ணெயில் பாதி அளவிற்கு வதக்குங்கள். முழுமையாக வதக்கி விடாமல் சற்று அவ்வப்போது எண்ணெயில் கிளறிவிட்டு பாதி அளவு கத்தரிக்காய் எண்ணெயில் வதங்கிய பிறகு அதனை தனியாக ஒரு தட்டிலோ அல்லது பாத்திரத்திலோ எடுத்து வையுங்கள்.


பின்னர், கத்தரிக்காய் வதக்கப்பட்ட அதே எண்ணெயில் உரித்து முழுமையாக வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி. தேங்காய் 2 சில்லுக்ள் அதோடு உப்பு சேர்த்து தக்காளி வதங்கி வரும் அளவிற்கு கிளறிவிட்டு, அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.


இப்போது, மீண்டும் 2 அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு (கருகிவிடாமல், வெடிக்க வேண்டும் – கேஸ் என்றால் சிம்மில் வைத்துக்கொள்ளவும்), வெந்தயம், கருவேப்பிலை போட வேண்டும். பின்னர், உரித்து கட் செய்து வைத்திருந்த சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லித் தூள், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மிளகு + சின்ன ஜீரகம் பொடி சேர்த்து கிளறியபிறகு, முன்னரே மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி சேர்த்த கலவையை இதில் கொட்டி லேசாக கிளறிய பின்னர் இரண்டு துண்டுகள் வெல்லம் சேர்த்ததும், கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரையும் அதோடு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.


சிறிது நேரம் கொதித்ததும் எண்ணெய் பிரிந்து வந்த நிலையில், வதக்கி வைத்திருந்த கத்திரிக்காய்களை ஒன்று ஒன்றாக போட்டு சிறிது நேரம் மூடி வைத்து இறக்கவும்.


இப்போது, கமகமென மணக்கும், நாக்கில் எச்சில் ஊற வைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி. இதனை சாதத்தோடும் சாப்பிடலாம், சப்பாத்திக்கு கிரேவி போல கொஞ்சம் கெட்டியாக செய்தும் சாப்பிடலாம். இதை ஒரு முறை சாப்பிட்ட பின்னர் கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கு கத்தரிக்காய் மட்டும்தான் இனி பிடிக்கும்.


பி.கு : இதனை மண் சட்டியில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்!