நாம் என்ன உணவு உட்கொள்கிறோம் என்பதுதான் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும், நம் உடலில் என்ன வகையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து உண்பது நம் ஆயுளில் பிரதிபலிக்கும். நமக்கு பிடித்த உணவுகளை தேர்ந்தெடுப்பது அவசியம்தான், ஆனால் அதிலும் ஆரோக்கியத்தை பேணுவது நல்லது. ஆனால் சில உணவு வகைகளில் எது ஆரோக்கியமானது என்று அறிவதில் குழப்பம் ஏற்படும். அப்படியொரு குழப்பம்தான் தயிர் மற்றும் மோர் ஆகியவற்றின் இடையே பொதுவாக எல்லோருக்கும் ஏற்படுவது. சிலர் தயிரை சூடு என்றும் மோர் குளிர்ச்சி என்றும் கூறக் கேட்டிருப்போம், ஆனால் யார் எதை சாப்பிட வேண்டும் என்ற குழப்பமும் இருக்கும். எல்லாவற்றையும் இன்றோடு தீர்க்க தொடர்ந்து படிக்கவும்.


தயாரா? மோரா?


தயிர் மற்றும் மோர் இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இவற்றில் ஒன்றை தேர்வு செய்யும்போது நம்முடைய உடல்வாகு எப்படி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மோர் உடல் சூட்டை தணிக்கும், ஆனால் தயிரில் உள்ள மூலக்கூறுகள் உடைவதற்கு நீண்ட நேரம் ஆகும். அதனால் டயட்டில் இருப்பவர்கள், எடை குறைக்க நினைப்பவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கல்லீரல் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் தயிரை விட மோர் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 



மோருக்கும் தயிருக்கும் என்ன வித்தியாசம்?


தயிர் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதும் மோர் உடலை குளிர்ச்சியாக வைக்கும் என்பதும் உண்மைதான். மோரும் தயிரிலிருந்துதானே வருகிறது, பிறகெப்படி இரண்டும் வேறு வேறு தன்மை கொண்டிருக்கிறது என்று கேட்கலாம். ஆனால் தயிரிலிருந்து மோராக மாற்றப்படும் செயல்முறையின் போது அது குளிர்ச்சியடைகிறது. ஏனெனில் தயிரின் மூலக்கூறுகள் அடித்து உடைக்கப்பட்டு அதிலுள்ள கொழுப்புத்தன்மை பெரிதளவில் பிரித்து எடுக்கப்பட்டு வெண்ணெய் தயாரிக்கப்படும். அதனால் மோர் குடிக்கும்போது நம்முடைய உடல் மிகவும் இலகுவாக மாறுகிறது.


தொடர்புடைய செய்திகள்: சிம்புவுக்கு சொகுசு கார்...! கௌதம்மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு..! விடிகே வெற்றி மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் அன்பளிப்பு


மோர் ஏன் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்?


தயிர் ஜீரணமாவதற்கு நீ்ண்ட நேரம் எடுக்கும் என்பதால் இரவு நேரங்களில தயிர் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் மோரில் அடர்த்தி குறைவு, நீர்த்தன்மை அதிகம் கொண்டது என்பதால் உடனடியாக ஜீரணமாகும். அதுமட்டுமின்றி சரியான நேரத்துக்கு பசியைத் தூண்டும். எனவே அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லை பிரச்சனைகள் உள்ளவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு மோரை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தயிருக்கு பதிலாக மோர் எடுத்துக் கொள்ளலாம். அப்போதும் மிக மிகக் குறைவான அளவு மட்டுமே தயிர் சேர்த்து அதில் நிறைய தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும். 



ஏன் தயிர் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம்?


தயிரை இரவு நேரத்தில் சாப்பிடுவது தவறு. அந்த நேரத்தில் நம்முடைய ஜீரண மண்டலம் மிக மெதுவாக செயல்படும். அதனால் ஜீரணமாவது மேலும் கடினமாகும். அப்படியே தயிர் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு சரியான நேரம் மதிய வேளைதான். மதிய நேரத்தில் நம்முடைய ஜீரண மண்டலம் அதிக வேகத்துடன் செயல்படும். ஆகையால் அந்த நேரத்தில் தயிர் எடுத்துக்கொள்வது நல்லது. அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை, வயிறு மந்தம் போன்ற பிரச்சினை இல்லாதவர்கள் உங்களுடைய உடல் தேறாமலே இருந்தால் எடையை கூட்டுவதற்கு தயிரை சாப்பிடலாம். ஆனால் மோர் எல்லா நேரத்திலும் எடுத்துக் கொள்ள முடியும். இது ஜீரணத்தை துரிதப்படுத்துவதால் குடலை சுத்தமாக வைக்கும். உடலில் கழிவுகளை தேங்காமல் தடுப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது.