ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு பலகாரவகைகள் இருந்தாலும் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற மருத்துவம் குணம் வாய்ந்த உணவுகளில் ஒன்றுதான் செட்டிநாட்டு ஆடி கும்மாயம்


தமிழ்நாட்டில் இருந்து தான் பல நாகரீகம், உணவு கலாச்சாரம் உலகம் முழுக்க எடுத்துச்சென்றதற்கான சான்றுகள் உள்ளன. அதிலும் உணவினையே மருந்தாக பயன்படுத்துவதில் தமிழர்களை அடித்துக்கொள்வதற்கு ஆளில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதோடு மட்டுமில்லாமல் தமிழர்கள் கொண்டாடக்கூடிய அனைத்துப் பண்டிகைகளிலும் ஒவ்வொரு புதுப்புது பலகார வகைகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இடத்திற்கு ஏற்றவாறு இந்த உணவு முறைகள் மாறுபட்டிருந்தாலும் இனிப்பு என்ற ஒன்று அனைத்துப் பண்டிகைகளிலும் இல்லாமல் இருக்காது. அதுவும் இந்த ஆடி மாதத்தில் புதுப்புது இனிப்பு வகைகளை செய்து வீட்டிற்கு வரும் புதுமாப்பிள்ளை அசத்தும் பழக்கத்தினைத் தமிழர்கள் கொண்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆடி மாதம் முழுவதும் வரக்கூடிய செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடவுள்களுக்குப் பிரதாசமாக இனிப்பு வகைகளை செய்து வழிபாடு மேற்கொள்வார்கள்.  இந்நிலையில் மற்ற மாவட்ட உணவு வகைகளுக்கே டப் கொடுக்கும் செட்டிநாடு உணவுகளில் ஒன்றான ஆடி கும்மாயம் இந்த ஆடி மாதத்தில் ஸ்பெஷல் இனிப்பு வகையாக உள்ளது. எனவே மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஆடி கும்மாயம் எப்படி செய்து என்று இங்கே தெரிஞ்சுக்கலாம்.



ஆடி கும்மாயம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:



உளுந்தம்பருப்பு - 4 டம்ளர்,

பச்சரிசி - 4 டம்ளர்,

கருப்பட்டி ( பனை வெல்லம்) - அரை கிலோ,

தண்ணீர் - 6 டம்ளர்,

நெய் - சிறிதளவு.

செய்முறை:

கடாயில் உளுந்தம் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொண்டு மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த மாவினை  சலித்து எடுத்துக்கொண்டு கடாயில் இட்டு  வறுக்க வேண்டும். இன்னொரு அடுப்பில் கருப்பட்டியையும், தண்ணீரையும் சேர்த்து மிதமான சூட்டில் உருக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்தமாவுடன் நீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் கடாயில் கருப்பட்டி நீரை விட்டு, அதில் கும்மாயமாவை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு கெட்டியாகிப் பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய்யை சேர்த்து கிளறி கொண்டே இருக்க வேண்டும் . பின்னர் அதனை இறக்கி தட்டில் கொட்டி ஆற விடவும். இப்போது ஆடி கும்மாயம் ரெடியாகிவிட்டது.


இந்த ஆடி கும்மாயம் பெண்களுக்கு சிறந்த உணவாகவும் பார்க்கப்படுகிறது. நம் முன்னோர்கள் உளுந்தம்பருப்பில் செய்யும் உணவுகளைத்தான் பெண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு உடலில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என்பார்கள். இதனால் தான் பெண்கள் பூப்படையும் பொழுது உளுந்தினால் களி மற்றும் இந்த ஆடி கும்மாயம் போன்றவற்றை உட்கொள்ள கொடுக்கின்றனர்.


மேலும் இனிப்பிற்கு அடுத்தப்படியாக வீட்டில் சுலபமாக செய்யக்கூடிய பலகார வகைகளில் அரிசி முறுக்கு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இந்நேரத்தில் அரிசி முறுக்கு எப்படி செய்வது என்றும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.




அரிசி முறுக்கு செய்யத்தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:


புழுங்கல் அரிசி - 2 கிலோ


கடலை மாவு - 500 கிராம்


பொட்டுக்கடலை - 500 கிராம் (அரைத்து வைக்க)


எள்ளு - தேவையான அளவு


ஓமம் - தேவையான அளவு


எண்ணெய் - தேவையான அளவு


வெண்ணெய் - தேவையான அளவு


உப்பு - தேவையான அளவு


கருவேப்பிலை - தேவையான அளவு


சீரகம் - 1 தேக்கரண்டி


காய்ந்த மிளகாய் - தேவையான அளவு


செய்முறை:


முதலில் அரிசியை ஊற வைத்து அரைத்துக்கொள்ளவேண்டும், அதனுடன் கடலை மாவு, அரைத்து வைத்த பொட்டுக்கடலையை சேர்த்துக் கலக்க வேண்டும். மிளகாய், சீரகம், உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அரிசி மாவுடன் அவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டும். அதனுடன் தேவையான அளவு எள்ளு, ஓமம் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் கலக்கினால் போதுமானது. அதன் பின்னர் கடாயில் எண்ணெய் காயவைத்து முறுக்கு பிழியும் அச்சில் மாவை எடுத்து மெதுவாக பிழிந்து விட வேண்டும். பின்னர் நன்றாக வெந்தவுடன் முறுக்கை ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும். இப்போது மொறுமொறுப்பான, சுவையான அரிசி முறுக்கு தயாராகிவிட்டது.