ஒரு மனிதரை வயது முதிர்ந்ததாகவோ அல்லது இளைஞராகவோ காண்பிப்பதில் அவருடைய முடிக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது இளம் வயதில் முடி இழப்பை சந்திக்கும் நபர்களை பார்க்கும்போது வயதானவரை போன்று தோற்றம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் வயதானவர்களுக்கு முடி நிறை இருந்து கருமையாக இருக்கும் போது அவரது வயதை குறைத்து சொல்ல தோன்றுகிறது.
இப்படியாக மனிதனை அழகுபடுத்தி காண்பிக்கும் முடியானது நமது அன்றாட வாழ்க்கை முறை, மரபணு கோளாறு, ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றினால் இழப்புக்கு உள்ளாகிறது. அதிக தூசி அதிகப்படியான வெப்பம் மற்றும் தலையில் எண்ணெய் பசை இல்லாமல் இருப்பது போன்றவற்றாலும் முடி இழப்பு முடி கொட்டுதல் ஆகிய பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.
இதே போல மரபணு குறைபாடினால் முடி வளர்ச்சியில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த வகையில் Uncombable hair syndrome எனப்படும் சீப்பை கொண்டு சீவமுடியா அமைப்பை கொண்ட முடியின் வளர்ச்சியின்மை நோய்(UHS), மரபணு குறைபாட்டினால் ஏற்படுகிறது. இந்த குறைபாடு உடையவர்களுக்கு முடியானது பொன்னிறமாகவோ, அல்லது வைக்கோல் நிறத்திலோ, வெள்ளிக் கம்பி இருப்பதை போன்று இருக்கும். மேலும் முடியாதது கீழ்நோக்கி வளராமல் அதன் போக்கில் எந்த திசையில் வேண்டுமானாலும் வளரும். யூ எச் எஸ் எனப்படும் இந்த மரபணு குறைபாட்டின் காரணமாக, முடியின் தண்டு வடிவம் மாறுகிறது. ஒரு உருளை வடிவத்திற்கு பதிலாக, இது ஒரு முக்கோண, இதயம் போன்ற அல்லது தட்டையான குறுக்குவெட்டைக் கொண்டுள்ளது.சில நேரங்களில் இந்த ஒழுங்கற்ற வடிவங்கள் அனைத்தும் முடியின் ஒரு இழையின் நீளத்தில் ஏற்படுகிறது.
இதில் 50 முதல் 100 சதவீத முடிகள் ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். அசாதாரண முடி,சாதாரண முடியை விட வித்தியாசமாக ஒளியை பிரதிபலிக்கிறது. மேலும் அதிகப்படியான பளபளப்பைக் கொடுக்கிறது. UHS நோயானது 2 வயது முதல் 11 வயது வரையிலும் ஏற்படுகிறது.மேலும் வயது ஆக ஆக நோயின் தன்மை மாறுபடுகிறது. இத்தகைய பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு சீப்பு கொண்டு சீவ முடியாத நிலை ஏற்படுகிறது.
குழந்தை வளரும் காலத்தில் ஆட்டோசோமால் ரீசீசிவ் இன்ஹெரிடன்ஸ் மூலம் மரபணுக்களைப் பெறுகிறது. பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு சில நேரங்களில் இந்த மரபணு குறைபாடு வரலாம்.இதனால் முடி வளர்ச்சி ஆனது மிக மெதுவாகவும் அடர்த்தியில்லாமலும் இருக்கும். மேலும் சிலருக்கு முடி உடையும் பிரச்சினை இருக்கும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு, பயோட்டின் புரதமானது மாற்றாக தரப்படுகிறது.மேலும் இத்தகைய முடியை கொண்டிருப்பவர்கள் முடியை முரட்டுத்தனமாகவும் வேகமாகவும் சீப்பை பயன்படுத்தி வரக்கூடாது இதைப் போலவே ஹீட்டரை கொண்டு முடியை சூடு படுத்தக் கூடாது. அதிகப்படியான ரசாயனங்கள் கலந்து இருக்கும் கிரீம்களை பயன்படுத்தக் கூடாது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ரசாயன கலப்பில்லாத ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும். மேலும் தலையில் எண்ணெய் பசை எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்வதும் ஓரளவுக்கு இந்த முடியை ஒழுங்குப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும். மேலும் யூ எச் எஸ் குறைபாடு உள்ளவர்கள் தங்கள் முடிக்கு பயன்படுத்த தேங்காய் எண்ணெயுடன், செம்பருத்தி,வெந்தயம்,மருதாணி மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றின் சாறு கலந்த எண்ணையை பயன்படுத்தலாம்