எனர்ஜி டிரிங்க்ஸ் (Energy drinks ) அருந்துவது கல்லூரி மாணவர்களிடையே தீவிர தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது என BMJ Open என்ற இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நைஜீரியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியிதழான ’BMJ Open'-ல் வெளியிட்டுள்ள ஆய்வில் தொடர்ந்து எனர்ஜி டிரிங் குடிப்பது கல்லூரி மாணவர்களிடையே தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து எனர்ஜி ட்ரிங்க் அருந்துபவர்கள் இரவு நேரங்களில் குறைவான மணிநேரம் மட்டுமே உறங்குகின்றனர்.  ஒரு மாதத்திற்கு 1-3 முறை எனர்ஜி ட்ரிங்க் குடிப்பதாக இருந்தாலும் அது தூக்கத்தினை தொந்தரவு செய்யும் அபாயம் இருப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.


எனர்ஜி டிரிங்கில் சராசரியாக லிட்டருக்கு 150 மி.கி காஃபின், சர்க்கரை, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் பல்வேறு அளவுகளில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். மன மற்றும் உடல் ரீதியான பிக்-மீ-அப்களாக சந்தைப்படுத்தப்பட்டவை கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுவாக இளைஞர்களிடையே பிரபலமாக உள்ளன. உடலுக்கு ஆற்றல் கிடைக்கும் பானமாக பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. ஜிம் போகும் பழக்கம் உள்ளவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், ஃபிட்னஸ் ஃப்ரிக் எனர்ஜி ட்ரிங் அருந்தலாம்; பெரிதாக தீங்கு விளைவிக்காது என்று நம்பவைக்கப்படுகிறது.ஆனால், எனர்ஜி டிரிங்க் தூக்கத்தின் தரத்தை குறைப்பதாக சில சான்றுகள் இருந்தாலும் அது எந்தவிதத்தில் பாதிப்புகளையும் விளைவுகளையும் ஏற்படுத்துகிறது என்று தெளிவாக கண்டறியப்படவில்லை.


நார்வேயில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இந்த ஆய்விற்காக பயன்படுத்தினர். அதாவது 18 முதல் 35 வயது வரையிலான 53,266 மாணவர்களை ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். 


தூக்கமின்மை என்பது வாரத்தில் குறைந்தது 3 நாள்களாவது தூங்குவதற்கு சிரமப்படுவது. தூங்குவதில் சிக்கல், இரவில் வெகு நேரம் முழித்திருப்பது போன்றவைகள் இருந்ததாக ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


எனர்ஜி ட்ரிங்க்ஸ் ஒருபோதும் உட்கொள்வதில்லை அல்லது எப்போதாவது அருந்துவதுண்டு என்று ஆண்களை விட பெண்கள் அதிகம் குறிப்பிட்டிருந்தனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.


5.5% பெண்கள் வாரத்திற்கு 4-6 முறை குடிப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் 3% க்கும் அதிகமானோர் தினசரி உட்கொள்வதாக தெரிவித்தனர்.  8% ஆண்கள் 4-6 முறை குடிப்பதாகவும் 5% ஆண்கள் தினசரி எனர்ஜி ட்ரிங் குடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் எனர்ஜி ட்ரிங்க்ஸ் எப்போதாவது குடிப்பவர்களைவிட அடிக்கடி அருந்துபவர்கள் அரை மணி நேரம் குறைவாகவே தூங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


இதன்மூலம், அதிகமாக எனர்ஜி ட்ரிங்க் அருந்துபவர்களுக்கு தூக்கமின்மை சிக்கல் ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் இதை குடிக்கும் பழக்கம் இருந்தால் இரவில் தூக்கம் கெடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இவர்களுக்கு இன்சோமேனியா ஏற்படவும் வாய்ப்புள்ளது. மாதத்திற்கு 1-3 முறை எனர்ஜி டிரிங்க் குடிப்பவர்களுக்கும் தூக்கமின்மை பிரச்னை ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிபிடப்பட்டுள்ளது.


தினமும் எனர்ஜி டிரிங்க் குடிப்பவர்களுக்கு இன்சோம்னியா சிக்கல்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதில் 51 ஆண்கள்; 33% பெண்கள். மாதத்திற்கு 1-3 முறை மட்டுமே எனர்ஜி டிரிங்க் அருந்துபவர்களுக்கும் தூக்க பிரச்னைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த ஆய்வில் எனர்ஜி டிரிங்க் அருந்துபவர்கள் எந்த நேரத்தில் அருந்துகிறார்கள், அதன் அளவு  உள்ளிட்ட தகவல்கள் கணக்கெடுப்பில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.


எனர்ஜி டிரிங் அருந்துவதால் தூங்குவதில் என்னென்ன சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்து அவதானிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஆய்விதழ் நிறுவனம் தெரிவித்துள்ளது