முடி வளர்ச்சியில் சாப்பிடும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி, தினமும் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்து, நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவுகள்:
தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் சி, கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம், இரும்பு மற்றும் இதர வைட்டமின்கள் தேவைப்படும். அடர்த்தியான மற்றும் நீளமாக முடி வளர உதவும். முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- கீரையில் வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள கீரை முடி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் தலைமுடி ஆரோக்கியம் பாதிக்கப்படும். வாரம் இரண்டு நாள் ஏதாவது ஒரு கீரை வகையை சாப்பிடலாம்.
- முட்டை, சியா, நட்ஸ் உள்ளிட்ட புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். முட்டையில் பயோட்டின் உள்ளது. இது முடி உதிர்வைத் தடுக்கிறது. நமது தலைமுடி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அப்போதுதான் முடி வளரும். பயோடின் அளவு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஒமேகா -3 அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
- சியா விதைகள் புரதம் நிறைந்தது. நீளமான முடி வளர்ச்சிக்கு உதவும். தலைமுடிக்கு கெரட்டின் கிடைக்க சியா விதைகள் நல்ல தேர்வு. இது முடி உடைவதைத் தடுக்கும்.
- முடி வளர்ச்சியை அதிகரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவு தூங்க வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது, உணவுமுறை உள்ளிட்ட ஆரோக்கியமான வாழவியல் முறையை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- வேர்க்கால் வலிமையிழப்பதால் முடி உதிர்வு ஏற்படும். பயோடின், மெக்னீசியம், காப்பர், ஜிங்க் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் டயட்டில் இருக்க வேண்டும்.
தோசை பிரியர்களாக இருப்பவர்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் தோசை, சட்னி எப்படி செய்யலாம் என்பதை காணலாம்.
கேழ்வரகு,உப்புக் கடலை, தயிர், தேங்காய் ஆகிய நான்கு பொருட்களை வைத்து தோசை, சட்னி செய்யலாம்.
தோசை தயாரிக்க:
கேழ்வரகு இரும்புச்சத்து, கால்சியம், அமினோ ஆசிட் உள்ளிட்டவை இருக்கிறது. இது ஸ்கால்பில் இரத்த சர்குலேசனை அதிகரிக்க உதவும். இது முடி உதிர்வை குறைக்கும்.
கேழ்வரகு தோசைக்கு மாவு இரண்டு முறைகளில் தயாரிக்கலாம். கேழ்வரகு மாவு இருந்தால் அதோடு அரிசி மாவு, பச்சை மிளகாய், துருவிய கேரட், வெங்காய்,கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கி 20 நிமிடங்கள் ஊற வைத்தால் மாவு தயார்.
இன்னொரு முறையில் தோசைக்கு மாவு அரைக்கும் போது அதோடு, ஊறவைத்த முழு கேழ்வரகை சேர்த்து அரைத்தால் மாவு தயார். தேவையான அளவு உப்பு சேர்த்தால் போதும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கேழ்வரகு மாவில் தோசை ஊற்றி, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தயாரிக்கலாம்.
சட்னி தயாரிக்க:
பொட்டுக்கடலை அல்லது உப்புக்கடலை சேர்த்து தேங்காய் சட்னி தயார் செய்யவும். மிக்ஸி ஜாரில், பச்சை மிளகாய், கடலை, தேங்காய், எல்லாம் சேர்த்து அரைத்து எடுத்தால் சட்னி தயார். இதோடு ஒரு கப் தயிர் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏபிபி நாடு ஏற்காது.