கன்னாபின்னாவென ஆட்டம்போட்ட உலக அரசுகளைக்கூட சின்னாபின்னமாக்கி, ஆட்டம் காட்டிவருகிறது, உயிர்க்கொல்லி கொரோனா துயரம். மருத்துவ வல்லுநர்களுக்கே சவால் விடும்படியாக இருக்கின்றன, கொரோனா உண்டாக்கும் புதுப் புது நோய்களும் உடல், மனக் கோளாறுகளும். இதில், ரத்த சர்க்கரை அதிகரிப்பும் அதனால் ஏற்படும் ஆபத்தும் முக்கியமானது.




கொரோனா முதல் அலையின்போது, பொதுவாக இதனால் ஏற்படும் சுவை, வாசனை இழப்பு ஆகியவை ஓரிரு வாரங்களில் சரியானது. குறைந்த அளவினருக்கு இன்னும்கூட அரைவாசி கால்வாசி அளவுக்குதான் சுவை, வாசனை இழப்பு சரியாகி இருக்கிறது என்றும் மருத்துவர்கள் தரப்பில் கிளினிக்கல் பார்வைக் குறிப்புகள் எனும் அளவில் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர்வரை கணிசமானவர்களுக்கு தலை முடி உதிர்வது, குறிப்பிடத்தக்க பிரச்னையாக பரவலாகக் காணப்படுகிறது. மறதியும் கொரோனாவால் ஏற்பட்ட இன்னொரு முக்கிய பிரச்னையாகக் கூறுகின்றனர். சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம்; சோற்றுக்கு துவையலோ இட்லிக்குச் சட்னியோ கேட்கும்போது, துவையல், சட்னி எனும் சொற்கள்கூட மறக்கிறது என்பவர்களும் இருக்கின்றனர். அல்லது இப்படியான சொற்களை யோசித்துச் சொல்ல சற்று நேரம் எடுத்துக்கொள்கிறது.


ஆனால், இவை எதுவும் அன்றாட வாழ்க்கையோட்டத்தில் பெரிய சிக்கலாகவோ உயிரிழப்பு ஆபத்தாகவோ உருவாகவில்லை. இந்தியாவில் முதல் அலையைவிட இரண்டாவது அலையின்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகவும் குறுகிய காலத்திலும் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் படிப்படியாக அதிகரித்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மே மாதம் உச்சத்துக்குச் சென்றது. இந்த அலையில், அன்றாடத் தொற்று பாதிப்பின் அளவு குறைந்துவருவது ஒரு புறம் இருக்க, உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. இந்திய அளவிலும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களிலும் மாநில அளவிலும் பொதுவாகவே இந்த நிலையைப் பார்க்கமுடிகிறது. இதற்கு முக்கிய காரணம், தொற்று ஏற்பட்டவருக்கு கொரோனா கிருமியால் ஏற்படும் நிமோனியா காய்ச்சல் மட்டும் இல்லாமல், உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, இதய அறுவை செய்தது போன்ற கூடுதல் சிக்கல்களும் மரணம்வரை கொண்டுபோய் விட்டுவிடுகின்றன. இரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவை இதில் முக்கியமான காரணங்கள்.




கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக அவர்களுக்கு அளிக்கப்படும் ஸ்டீராய்டு சிகிச்சையாலும் உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரித்து, ஹைப்பர் கிளைசெமியா எனப்படும் ஆபத்தான கட்டத்துக்குக் கொண்டு சென்று விடுகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் இப்படி கொரோனாவால் உண்டாக்கப்பட்ட சர்க்கரை அதிகரிப்பும் கூடுதல் உடல்நலிவுகளுமே 48.1 சதவீத கொரோனா உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி அந்த மாநில சுகாதாரத் துறை புதிய வழிகாட்டல் அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது.


கோவிட் சிகிச்சை மையங்களில் தினமும் ஒரு முறையாவது நோயாளிக்கு உணவுக்கு முன்னரும் பின்னரும் இரண்டு முறை இரத்த சர்க்கரை அளவை எடுக்கவேண்டும்; சர்க்கரை நோய் உறுதிசெய்யப்படும் யாருக்கும் அதற்குரிய உணவு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதில், நோயாளிகள் விரைவில் நலமடைய வேண்டுமானால் உணவு நேரத்தையும் அளவையும் கறாராகக் கடைப்பிடிப்பது அவசியம்.” என்று கூறியிருக்கிறார், தேசிய சுகாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநர், மருத்துவர் நிபன் ஜிண்டால்.