இந்தியா முழுவதும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே தினசரி பாதிப்பு 3 லட்சத்தினை கடந்து செல்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த திங்கள் கிழமை மட்டும் 2812 பேர் இத்தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்றின் தாக்கம் கடந்த சில வாரங்களில் குறையும் என நிபுணர்கள் தெரிவித்தாலும், தற்போது நிலைமை மிகவும் மோசமாக தான் உள்ளது.
தற்போதுள்ள சூழலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் இடம் இல்லாத நிலையும் ஏற்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நினைத்தாலும் இதற்கான மருத்துவக்கட்டணம் மக்களை கதிகலங்க வைக்கிறது. பல குடும்பங்கள் பணமின்றி அல்லல்படும் நிலையினை நாடு முழுவதும் பார்க்க முடிகிறது.இப்படிச் சிகிச்சைக்கு பணமின்றி அல்லப்படும் மக்களுக்கு உதவியாக மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் பல உள்ளன.
குறிப்பாக நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்பின் பொழுதே நிறுவனங்கள் இச்சிகிச்சைக்காக மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை வழங்கத்தொடங்கிவிட்டன. இந்த மருத்துவக் காப்பீட்டினை பெரும் பாலிசிதாரர்களுக்கு, கொரோனா தொற்று பாசிட்டிவ் என வந்த நாள் முதல் அவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தினை பயன்படுத்திக்கொள்வதற்கான வசதிகளும் இடம் பெற்றுள்ளது. இதற்காக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) கீழ் Corona Kavach Policy and Corona Rakshak Policy என்ற இரண்டு மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் ஆரம்பத்தில் மார்ச் 31, 2021 வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காப்பீட்டாளர்களின் வசதிக்காக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ((IRDAI) செப்டம்பர் 31, 2021 வரை இத்திட்டத்தினை புதுப்பித்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டம் எந்தளவிற்கு காப்பீட்டாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இதன் பயன்பாடுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தொகை ரூ .50,000 முதல் ரூ .5,00,000 வரை உள்ளது. இந்த திட்டத்திற்காக பிரிமீயம் ரூ.1039 முதல் தொடங்குகிறது.
கொரோனா கவச் பாலிசி (CORONA KAVACH POLICY )
கொரோனா கவச் பாலிசி என்பது கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கும் கட்டணங்கள், ஐ.சி.யூ கட்டணங்கள், வீட்டு பராமரிப்பு சிகிச்சை செலவு, ஆம்புலன்ஸ் கட்டணங்கள், பிபிஇ கருவிகள், மருந்துகள், கையுறைகள், மாஸ்க் மற்றும் மருத்துவர் கட்டணம் போன்ற கூடுதல் உபகரணங்களின் விலை ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தொகை ரூ .50,000 முதல் ரூ .5,00,000 வரை உள்ளது. இந்த திட்டத்திற்காக பிரிமீயம் ரூ.1039 முதல் தொடங்குகிறது.
இதுவரை எந்த மருத்துவக் காப்பீட்டு திட்டம் பெறாதவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இது எளிதில் கிடைக்கும் வகையிலும், காப்பீட்டு திட்டத்தினை தொடங்குவதற்காக காத்திருக்க தேவையில்லை என கூறப்படுகிறது. மேலும் ஒருவருக்கு கொரோனா பாசிடிவ் என தெரிந்தவுடன் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பாலிசிதாரர் குறைந்த பட்சம் 72 மணி நேரம் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சிகிச்சை செலவுகள் இந்த மருத்துவ காப்பீட்டின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
கொரோனா ரக்ஷக் பாலிசி (CORONA RAKSHAK POLICY)
கொரோனா ரக்ஷக் பாலிசிதாரர் குறைந்த பட்சம் 72 மணி நேரம் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சிகிச்சை செலவுகள் இந்த மருத்துவ காப்பீட்டின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படும். இதில் பிபிஇ கருவிகள், ஆக்ஸிஜன் நெபுலைசர்கள், மாஸ்க், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கையுறைகள், ஆக்சிமீட்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களும் அடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 18-65வயதுக்கு உட்பட தனிநபர்கள் பெறமுடியும் எனவும் இதன் காப்பீட்டு தொகை ரூ .50,000 முதல் ரூ .2.5 லட்சம் வரை உள்ளது.
இந்த பாலிசியினை தேர்ந்தெடுக்கும் பாலிசிதாரர்கள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டால் , அவர்கள் 100 சதவீத தொகையினை பெற முடியும் என்ற வசதி இதில் உள்ளது. மேலும் இதன் சிறப்பு என்னவென்றால், பாலிசியின் கீழ் காப்பீட்டு செய்யப்பட்ட தனிநபர்கள் சிகிச்சை செலவை விட முழு தொகையினையும் பெற முடியும் என கூறப்படுகிறது.
இந்த இரண்டு மருத்துவக்காப்பீட்டு திட்டம் மட்டும் இல்லாமல் ஏற்கனவே தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் பராமரிப்பு சுகாதார காப்பீடு ( Care health insurance ), Max Bupa health insurance, Star health insurance, Edelweiss health Insurance, New India Assurance health insurance, Bajaj Allianz health insurance, IFFCO Tokio health insurance போன்றவற்றினை பயன்படுத்தியும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவ காப்பீட்டு வசதியினை பெற முடியும் என கூறப்படுகிறது.குறிப்பாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீட்டிற்கு வந்தாலும் பலருக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதால், மக்கள் குறுகிய கால மருத்துவ காப்பீட்டு திட்டங்களை விட நீண்ட காலத்திற்கு உதவும் வகையிலான மருத்துவ காப்பீட்டு திட்டங்களை தேர்ந்தெடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.