வேட்டைத்துணைவன் 15
கன்னி / சிப்பிப்பாறை நாய்கள் பகுதி - 07
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குதிரை மீது ஏறி கம்பீரமாக வரி வசூலிக்க வந்த அதிகாரி ஒருவரை ஊர் எல்லையில் மறித்துக் கொண்டு குறைத்து வந்த வழியே அனுப்பி வைத்தனவாம் பருவட்டு உடல் அமைப்பு கொண்ட நாய்கள். அந்த சம்பவத்துக்கு பின்னர் தான் இது என்ன இவ்வளவு ரோசமான நாய்கள் என்று எல்லாரும் கவனிக்கத் தொடங்கினார்களாம். இந்த சம்பவத்துக்குப் பின்னர் தான் இந்த வகை நாய்கள் அதிகம் பிரபலம் ஆனதாம்.
சிப்பிப்பாறை ஊர் அருகாமையில் உள்ள நண்பர் ஒருவர் சொல்ல கேட்ட கதை இது. நாளைக்கே ”வெள்ளையனை எதிர்த்த வெறி பிடித்த நாய்கள்” என்ற தலைப்பில் உடன் ஒரு குறுநில மன்னர் thumbnail உடன் youtube வீடியோ வருமோ என்ற பயத்தால் இதற்கு எந்த வித எழுத்துப் பூர்வ ஆதாரமும் இல்லை என்பதையும் அதே எடுப்பில் சொல்லிக்கொள்கிறேன். இருந்தும் கதை சுவாரசியம் தான்.நிற்க,
பொதுவாக கிராமப் புறங்களில் கூர்முக வேட்டை நாய் வளர்க்கும் மக்கள் மத்தியில் இந்த இனத்து நாய் வளர்க்கிறேன் சொல்லும் வழக்கம் கிடையாது பொதுவாக “சாதி நாய்” என்றோ “வேட்டை நாய்” என்றோ கூறுவது நடப்பு. இது போக நிற பாடுகள் சொல்வதும் உண்டு.
“ நம்ம கிட்ட 3 கருமூஞ்சி புள்ள நாயும் 2 செவலையும் கிடக்கு” என்ற கணக்கில். ஆக நிறத்திலும் பல உண்டு என்பதை நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை என்றாலும் என்ன என்ன நிறங்கள் உண்டு என்பதை இங்கு சொல்லத்தான் வேண்டும். கருப்பு வந்தால் கன்னி பிற நிறங்களில் வந்தால் சிப்பிப்பாறை என்று சொல்வது எல்லாம் பொதுவான வெளியாட்கள் கொண்டு வந்த கதைகள் என்பதை நிறைபாடுகளைப் பார்த்துதான் நீங்கள் கண்டு கொள்ள முடியும்.
கருவுன புள்ள, சாம்பப் புள்ள, கீறிப் புள்ள, சந்தனப் புள்ள, செவலைப் புள்ள,மயிலப் புள்ளை, வெளிறின புள்ள, ரெத்தச் செவலை. கரம்பப்புள்ள, செவலக் கருமூஞ்சி, பிள்ளை கருமூஞ்சி, கரம்பை கருமூஞ்சி. அதுபோக கன்னி என்ற சொல்லப்படும் நிறங்களில் வரும் புள்ளக் கன்னி, பால் கன்னி, செங்கன்னி, கருங்கன்னி. அத்தோனோடு தொடர்புடைய பருக்கி நிறத்தில் வரும் சாம்பப் பருக்கி, சந்தனப் பருக்கி, செம்பருக்கி, பூச்சிப் பருக்கி, காக்கி / தேன் பருக்கி, இது தவிர ரெட்டை நிறம் அடித்து வரும் செம்மறையில் வரும் போர், கருமறை, வட்ட செம்மறை. காலில் வெள்ளை நிறம் அடிக்க வரும் வெங்கால். வாலில் வெள்ளை வரும் பூ வால் என்று தனியே நிறங்களை சுட்டி அழைக்கும் வழக்கம் இருந்ததுதானே தவிர ஒரு இனம் சொல்லி அழைக்கும் வழக்கம் கிடையாது.
வாஸ்தவத்தில் இத்துணை பெயர்களை பிரித்து சொல்வது என்பது புதியவர்களுக்கு நிச்சியம் குழப்பத்தை விளைவிக்கும். எனவே இது கன்னி / சிப்பிப்பாறை என்றே தொடரட்டும். நிறம் வேறே தவிர இனம் ஒன்றுதான் என்ற தெளிவு இருந்தால் போதும் தான், என்று அந்த மட்டில் விட்டுவிட்டு அடுத்து நகரலாம்.
ஆனால் சிப்பிப்பாறை நாய் என்ற பெயர் இந்த நாய்களுக்கு எப்படி வந்தது என்பதை சொல்லவேண்டும் அல்லவா ! முதல் முறையாக அச்சில் இந்தப் பெயர் பதிவானது மா. கிருஷ்ணன் எழுதி 1938 ஆம் ஆண்டு வெளியான கலைமகள் இதழில். அது ஒரு கட்டுரை. “உள்ளூர் நாய்கள்” என்ற தலைப்பில் என்ன நாய் வாங்கலாம் என்று தனது நண்பரான சோணாச்சல செட்டியார் என்பவர் இடத்தில் மா. கிருஷ்னன் ஆலோசனை நடத்திய பொருளில் ( நாய்களைப் பற்றி கேட்டு அரிந்து கொண்டதை சொல்வது போல) எழுதப்பட்ட கட்டுரை.
சோணாச்சல செட்டியார் வரியில் சிப்பிப்பாறை நாய்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் “சும்மா சீம நாய் எல்லாத்தையும் கிளிச்சி போட்டுடும்ல்ல” என்று தான் சொல்ல வேண்டும் அதைச் சொன்னதோடு இன்னொன்றும் சொல்லி இருப்பார். அதை வேறு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். ஆக இதில் புரிவது இவை பெரியவை. ஆக்ரோசமானவை. ஆனால் இதில் சொல்லப்படும் அளவுக்கு பெரியவையோ ஆக்ரோசமானவையோ ( சில விதி விளக்குகள் உண்டு ) இன்றைய சிப்பிப்பாறை இல்லையே ! என்றால் ஆம் உண்மைதான், காரணம் அவர்கள் சொல்லும் சிப்பிப்பாறை நாய்கள் இப்போது நாம் சொல்லும் சிப்பிப்பாறை நாய்கள் அல்ல!
அப்படி என்றால் பழைய சிப்பிப்பாறை நாய்கள் எவை. இந்த பெயரை பெற்று வந்த நாய்கள் எவை?
5, 6 வருடங்களுக்கு முன்பு நாய்கள் சார்ந்து இயங்கும் சில இணைய பக்கங்களில் இதுபோல சிப்பிப்பாறை நாய்கள் குறித்து பெரிய பேச்சு ஓடியது. பழைய சிப்பிப்பாறைகள் வேறு. இன்று நாம் சிப்பிப்பாறை என்று சொல்லும் நாய் இனம் வேறு. இதை அந்த மட்டில் விட்டால் ஏதோ பருவட்டாக ஒரு உண்மை உள்ளது என்று விட்டு தொலைக்கலாம். இன்னொரு படி மேலே போய் இன்று சொல்லபட்டும் ஊசி மூஞ்சி நாய்கள் எல்லாமே கன்னி என்ற இனம்தான். இவை பழைய சிப்பிப்பாறை நாய்களில் வேறு hound இன (முதோல் / கேரவன் ) நாய்களை போட்டு உடைத்து உருவாக்கியவை ஐய்யகோ நம் இனத்தை இழந்துவிட்டோமே என்று பதிவு செய்ய துடங்கியது தான் பெரும் கூத்தாக மாறத்துவங்கியது.
அவ்வளவு தான் மரபு வந்துட்டது அல்லவா. நானும் இந்த மரபோடு தொடர்பு கொண்டவன் என்று காட்டிக் கொள்ள சம்மந்தமே இல்லாத பலர் இதற்கு ஆதரவாக ஆம் ! அன்றே எங்கள் தாத்தா சொன்னார், “அடேய் பேராண்டி இதான்டா உண்மையான சிப்பிப்பாறை நாய் இதோட மௌசு உனக்கு இன்னைக்கு தெரியாது ” என்று எல்லாம் சொல்லித்தவித்து இன்று போலவே அந்த நாய்கள் இருக்காது எல்லாமே வேறு மாதிரி இருக்கும்.எங்களுக்கு தெரியதா என்ன இதை எல்லாம் இன்று நாம் வீதியில் விட்டுவிட்டோம். எங்கள் வீட்டில் இதுதானே இருந்தது என்று அங்கலாய்ந்து கொண்டார்கள். அடிப்படையில் இதற்கு ரெண்டு காரணம் ஒன்று நானும் இந்த கிராமம் பாரம்பரியம் என்ற தொடர்பில் இருந்தவன் தான் என்று காட்டிக்கொள்வது. இன்னொன்று என்ன எந்த நேரமும் தெற்கில் மட்டுமே இந்த நாய்கள் பற்றி பேச தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் நாம் சொல்ல ஒன்றும் இல்லையா என்று நின்றவர்களுக்கு பேச ஒரு வாய்ப்பு கிடைத்தது.
சரி என்னைக்கும் இல்லாமல் எப்புடி இந்த வாதம் இங்கு அன்றைக்கும் மட்டும் வலுப்பெற்றது என்றால், W. V. Soman எழுதிய புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு படத்தை ஸ்கேன் செய்து யாரோ ஒரு புண்ணியவான் பதிவு செய்ய வந்த வாதம் வலுத்துக் கொண்டது. படித்துப் பார்க்க மேல் வலிக்கும் நம் சமூகத்திற்கு துண்டு சீட்டு பெரும் வரம்தான் அல்லவா ! போதாத குறைக்கும் உற்றவன் உள்ளதை சொன்னாலும் நம்மவர்களுக்கு மற்றவன் மறை என்று சொன்னதுதான் இனிக்கும் !
W.v. Soman சிப்பிப்பாறை தலைப்பில் சொன்னது என்ன ?
இவை நல்ல வேட்டை நாய். தெற்கின் grey hound கள் இவை. நல்ல நீளமான கால்கள் உடையவை… என்று இன்றைய விளக்கங்களை குடுத்து விட்டு அதற்கு குடுத்த படத்தை சொன்னதற்கு சம்மந்தம் இல்லாமல் குடுத்து விட்டார். Soman அவர்களின் பணி நிச்சியம் பாராட்டத் தக்கது அதே நேரம் இங்கு வந்து நேரடியாக நாய்களை பார்காத்தவர் அப்படி இருக்க எப்படி நாம் கண்ணை மூடிகொண்டு பகுத்து அறியாமல் ஏற்றுகொள்ள முடியும். இங்கே பிறந்து வளந்தவர்களுக்கே தொடர்பு இல்லையென்றால் முழுதாக தெரியாது என்ற போது எப்படி இதை நாம் ஏற்க முடியும். அந்த படத்தில் உள்ள நாய் தஞ்சையில் இருந்து வந்த நாய். தெற்கில் இருந்து அல்ல ! போக அப்போது வேட்டைக்கு தான் மவுசு என்பதால் இருபிளட் நாய்கள் புழக்கம் தான் அதிகம்.
அது என்ன இருபிளட் நாய்கள் என்கிறீர்களா?
அரை அல்லது முக்கால் தரம். நல்ல ஊசி மூஞ்சி நாயில் சாதாரண நாட்டு நாய்கள் கலந்து உருவாவதுதான் இருபிளட். உண்மையில் களத்தில் பலம் கூடி ஓடுபவை அவைதாம். அதையும் வேட்டை நாய்கள் இன்று சொன்னவர்களும் உண்டு. அது ஈனும் குட்டிகளை ஏதோ கொஞ்சம் முகக் கலை ஒட்டுகிறது என்று வேட்டை நாய் குட்டி என்று சொல்லி கொடுப்பவர்களும் உண்டு. ஆக அந்த படத்தில் உள்ளது இருபிளட் ஆக இருக்குமே தவிர இன்றைய ஊசி மூஞ்சி நாய்கள் அல்ல. எனவே அதில் தேங்க வேண்டாம்.
எல்லாம் சரி அப்போது பழைய ஆட்கள் சிப்பிப்பாறை என்று சொன்ன நாய்கள் தான் எவை ? பார்க்கலாம் அடுத்த தொடரில்