கேரட் பொதுவாக அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் காய்கறிகளில் ஒன்று. கேரட்டை சமைக்காமலும் உண்ணலாம். மிகவும் சுவையானதும் கூட. கேரட்டில் அதிகளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி3, வைட்டமின் கே மற்றும் மினரல்களும் நிறைந்துள்ளது. இதனை தினந்தோறும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.


சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும், பளபளப்பாக வைத்துக் கொள்ளவும் கேரட் ஜூஸ் பயன்படுகிறது. கேரட்டை அரைத்து பேஸ் பேக்காக பயன்படுத்தினாலும் சருமத்திற்கு பொலிவு கிடைக்கும். தினசரி ஒரு கிளாஸ் கேரட் ஜூசை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் சருமம் பொலிவாக மாறும். சருமத்தில் உள்ள கருமை நிறம் மாறி சருமம் தேஜஸ் பெறும். புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கேரட் கொண்டிருப்பதால், இதிலுள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் ப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடும் தன்மையை பெற்றிருக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை சரும சேதத்தைத் தடுக்கிறது.


தினந்தோறும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடிப்பதால், செரிமான மண்டலம் மிகச் சிறப்பாக செயல்படும். கேரட்டில் கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் ஆகிய இரண்டும் உள்ளன.  இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.


தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. இதிலுள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தொற்று வியாதிகளை விரைவாக குணப்படுத்துகிறது.


கேரட்டில் உள்ள  நார்ச்சத்துக்கள், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால், பசியைக் கட்டுப்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையைக் குறைக்கிறது.


கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, பி6, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றது. இவை பல நோய்களுக்கு எதிராக மிகச் சிறந்த அளவில் போராடும் தன்மை கொண்டவை. குறிப்பாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க கேரட் உதவுகிறது.


வாய்க்குள் இருக்கும் பற்கள் உணவை நன்கு மென்று சாப்பிட உதவுகிறது. பற்கள் சொத்தையாவது, ஈறுகளில் வீக்கம், மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு ஏற்படுவதில்லை.


கேரட்டில் குறைந்த அளவு கலோரியும், குறைவான அளவில் சர்க்கரையும் இருப்பதால், நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தினசரி உணவில் கேரட்டை சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இவ்வாறு பல்வேறு நலன்களை உள்ளடக்கிய கேரட்டை தினந்தோறும் ஏதோ வகையில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அழகையும் ஆரோக்யத்தையும் பெற முடியும்.