கப் கேக் உள்ளிட்ட கேக் வகைகள், குளிர்பானங்கள், சூயிங் கம் உள்ளிட்டவற்றில் சேர்க்கப்படும் நியோடேம் (Neotame) என்ற செயற்கை இனிப்பூட்டி குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் 'Artificial Sweetener’ என்றழைக்கப்படும் செயற்கையான இனிப்பூட்டிகள் பயன்படுத்துவது அதிகரித்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக இதை பயன்படுத்துவது குடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதோடு உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.


மோசமாகும் குடல் ஆரோக்கியம்


ஆங்கிலா ரஸ்கின் பல்கலைக்கழகத்தில் (Anglia Ruskin University (ARU)) உள்ள ஆராய்ச்சியாளர் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் நியோடேம் என்ற செயற்கை இனிப்பூட்டியால் குடல் ஆரோக்கியம் முழுவதுமாக பாதிக்கப்படும் என்று கண்டறிந்துள்ளனர்.


வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக சொல்லப்படும் செயற்கை இனிப்பூட்டி ஆரோக்கியமற்றது. சர்க்கரைக்கு மாற்றாக குறைந்த அளவு சுக்ரோஸ் கொண்டதாக சொல்லப்படும் செயற்கை இனிப்பூட்டி, உண்மையில் உடலுக்கு ஆபத்தானது. குறிப்பாக, சமீபத்தில் சந்தைகளில் கிடைக்கும் கப் கேக், செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்கள், சூயிங் கம் உள்ளிட்டவற்றில் நியோடேன் என்ற இனிப்பூட்டி பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொண்டால் irritable bowel syndrome, இன்சுலின் சமநிலையின்மை, sepsis உள்ளிட்ட உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் உடல் உள்ளுறுப்பு செயலிழக்கும் அபாயம் உள்ளது. 


இந்த ஆய்வில்  நியோடேன் என்ற ஸ்வீட்னரை உட்கொண்டதால் பிரிட்டனில் ஆண்டுதோறும் பல்வேறு அச்சுறுத்தும் உடல்நல கோளாறால் பாதிக்கப்படுவது, உயிரிழப்பது நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


செயற்கை இனிப்பூட்டி என்று சொல்லப்படுகின்றவை உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சூயிங் கம், கப் கேக் உள்ளிட்டவற்றில் இனிப்புக்காக இவை சேர்க்கப்படுகின்றன.


ஆரம்பத்தில் சர்க்கரை நோயாளிகள் வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்துவதை தவிர்க்க, செயற்கை இனிப்பூட்டி நல்லது என்று சொல்லப்பட்டது. ஆனால், அது வெள்ளை சர்க்கரையை இட அதிகளவு இனிப்பு சுவையுடன் இருக்கும். முக்கியமாக, செயற்கை இனிப்பூட்டிகள் காபி/தேநீர்/பால் போன்ற பானங்களில் மட்டுமல்ல. நமக்கு சந்தையில் கிடைக்கும் ஏராளமான உணவுப் பொருள்கள், கோலா பானங்கள், மிட்டாய். சாக்லேட், ஐஸ்க்ரீம் , குக்கீஸ், சூயிங்கம், மருந்துகள் போன்ற பலவற்றில் கலக்கப்படுகின்றன. இது குறித்து விழிப்புணர்வுடன் இருந்து மக்கள் அவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.


சந்தையில் கிடைக்கும் செயற்கை இனிப்பூட்டிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை உணர வேண்டும். இது குடல் சுவர்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். 'Sugar Free' என்று சொல்ல கூடிய இயற்கை இனிப்பூட்டிகள் குறைந்த கலோரி என்பதால் பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இது உடல் எடை குறைய உதவினாலும் இதிலுள்ள ஆபத்தை பலவரும் கவனிக்க மறந்துவிடுகின்றனர் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.