'மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை' என்று உங்கள் துணை சொன்னால் நீங்கள் சுதாரிக்க வேண்டிய நேரம் இது.
காதல், நம்பிக்கை, புரிதல் ஆகியவையே ஆரோக்கியமான உறவிற்கு அடித்தளம். காதல் அல்லது திருமண உறவில் ஒருவருக்கொருவர் சண்டையிடும் தருணங்கள் பல ஏற்படுவது இயல்புதான். வாதங்கள் பல நடந்தாலும், சண்டைகள் தீராமல் இருப்பது உறவுகளுக்கு இடையே ஒரு வித சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால் யாராக இருந்தாலும் உறவில் சண்டை வராமல் இருக்கவே எண்ணுவார்கள், அதற்கு முன்பாக, சண்டையை முடிப்பதற்குத்தான் எண்ணுவார்கள். சண்டையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதல் படி 'மன்னிப்பு கோருவது'.
இது கேட்பதற்கு எளிமையானதாகத் தோன்றலாம் ஆனால் உங்கள் துணையை குளிர்விப்பதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால், ஒரு சில உறவுகளில் ஒரு நபர் மட்டுமே முன்வந்து, உறவைக் காப்பாற்றுவதற்காக தனது துணையிடம் எப்போதும் மன்னிப்பு கேட்கிறார். அவர் தன் மீது தவறில்லை என்றாலும் மன்னிப்பு கேட்கிறார். தன் மீது தவறில்லாத போதும் மன்னிப்பு கோருவது ஒரு ஆரோக்கியமற்ற உறவுக்கான அறிகுறி. எப்போதும் ஒருவரே அவரது துணையிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தால் இதனை கண்டிப்பாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த ஒருவர் மட்டுமே இதனை செய்வது என்பது உறவு உடைந்துவிடாமல் இருப்பதற்காக மட்டுமே என்பது நிதர்சனம். இந்த நிலை உங்கள் வாழ்வோடு ஒத்துப்போகிறது என்றால், கண்டிப்பாக உங்கள் உறவுக்கு நீங்களே செய்யும் மிகப்பெரிய துரோகம் இது.
காதல் உறவோ, திருமண உறவோ இருவருக்கும் அதில் சம பங்கு உள்ளது. உங்களிடம் தவறு இருந்தால், அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பது சரிதான். ஆனால், நீங்கள் எதுவுமே செய்யாமல், எப்போதும் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்கள் துணை உங்களை உணர்ச்சிகளின் மூலம் கையாளுகிறார் என்று அர்த்தம். இது உங்கள் துணையை மனரீதியாக உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கும். உங்களை இது எப்போதும் கீழ் நிலையில் வைக்கிறது. திரும்ப திரும்ப நீங்கள் உங்கள் துணையிடம் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கிறீர்கள் எனில், நீங்கள் உங்களை தவறென்றும், உங்கள் துணையை சரி என்றும் நிலை நிறுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.
அப்படி செய்யும்போது உங்கள் துணைக்கு ஈகோ அதிகமாகிறது. இந்த செயல் உங்கள் இருவர் இடையே நெருக்கத்தை அன்றி தூரத்தைதான் அதிகப்படுத்தும். உங்கக் உறவை நெருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டுமெனில் உறவில் சமத்துவம் வேண்டும் என்பதே சூட்சுமம். அது ஆணோ பெண்ணோ, இருவரும் அடுத்தவரை சமமாக எண்ணினால் ஈகோ என்ற பேச்சுக்கே இடமில்லை, இதமான உறவை மகிழலாம்.