வாழ்க்கையின் ஆனந்தம் சின்ன சின்ன சந்தோஷங்களில் தான் இருக்கிறது. சில நேரங்களில் முட்டாள்தனங்கள் கூட வாழ்க்கையை சுவாரஸ்யமிக்கதாக மாற்றிவிடும்.
அப்படித்தான் நிகழ்ந்துள்ளது இந்தப் பெண்ணிற்கு. இது எந்த ஊரில் நடந்தது என்ற விவரம் இல்லை. ஆனால் சொமாட்டோ டெலிவரியில் நடந்த எதிர்பாராத சிறு சொதப்பல் என்று மட்டும் தெளிவாகியுள்ளது. தொடர்பு இடைவெளி அதாங்க கம்யூனிகேஷன் கேப் என்பார்களே அதனால் தான் இந்த சம்பவம் நடந்திருக்க வேண்டும்.
பெண் ஒருவர் ஒரு கேக் ஷாப்பில் இருந்து கேக் ஆர்டர் செய்துள்ளார். அதை சொமாட்டோ வழியாக ஆர்டர் செய்த அவர் அதில் ஒரு குறிப்பை கொடுத்துள்ளார். அதாவது ரூ.500 சில்லறை கொண்டுவரவும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதை ஆங்கிலத்தில் 'bring 500 change' என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதை பேக்கரி ஊழியர்களும் ஆர்டர் எடுத்த சோமாட்டோவும் தவறாகப் புரிந்து கொள்ள அந்தப் பெண் ஆர்டர் செய்த கேக்கின் மீது ரூ.500 சில்லறை கொண்டுவரவும் என எழுதப்பட்டிருந்தது. இதுதான் காமெடிக்குக் காரணம்.
டெலிவரி பாய் வந்தவுடன் பணத்தை எடுத்துக் கொண்டு போன பெண்ணுக்கு கேக்கைப் பார்த்ததும் சிரிப்பதா, திட்டுவதா எனத் தெரியவில்லையாம். கடைசியில் ஹாஸ்ய உணர்வே வெல்ல கெக்கபெக்க என சிரித்து வைத்துள்ளார். டெலிவரி கொண்டு வந்தவர் புரியாமல் நிற்க தம்பி நான் சில்லறை ரூ.500 கொண்டு வரச் சொன்னேன். நீங்கள் கேக்கில் அதை எழுதி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார். கேட்டவுடன் சாரியை அப்புறம் சொல்வோம் என்று மூளை சொல்ல முதலில் விழுந்து விழுந்து சிரித்துள்ளார் சொமாட்டோ ஊழியர்.
அவ்வளவு தாங்க வாழ்க்கை. எல்லாத்தையும் லைட்டாக எடுத்துக்கிட்டா ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா இருக்கலாம். கொஞ்சம்
யோசித்துப் பாருங்க.. இதே நிகழ்ச்சிக்கு அந்தப் பெண் வேறு மாதிரியாகவும் ரியாக்ட் செய்திருக்கலாம். நான் எவ்வளவு முக்கியமான நிகழ்வுக்கு கேக் ஆர்டர் செய்தேன் என்ன செய்து கொண்டு வந்திருக்கிறீர்கள் எனக் கத்தி கூச்சலிட்டிருக்கலாம். ஜொமேட்டோ மீது வழக்கு போடுவேன், பேக்கரியை சந்திக்கு இழுப்பேன் என்றெல்லாம் வெகுண்டெழுந்திருக்கலாம். ஏன் வழக்கு போட்டு ஏதோ மன உளைச்சல் அப்படி இப்படின்னு நஷ்ட ஈடு கூட வாங்கி இருக்கலாம். ஆனால் அதையே அந்தப் பெண் ஒரு ஃபன் மொமன்ட்டாக மாற்றியிருக்கிறார்.
அந்தப் பெண் அந்த கேக்கை பிறந்தநாள், திருமணநாள், புரோமோஷன் கொண்டாட்டம் என எதற்காக வேண்டுமானாலும் ஆர்டர் செய்திருக்கலாம்.
ஆனால் அந்த நொடியில் அவர் சிரிக்க அந்த சிரிப்பு டெலிவரி பாய்க்கு பரவ அது அங்கிருந்து பேக்கரிக்கும் பார்சலாக எல்லோருமே ஹேப்பி. குமுதா ஹேப்பி அண்ணாசி மொமன்ட் என்று கூட சொல்லலாம். வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் அதை சுவாரஸ்யமாக்கிக் கொள்ள இது போன்ற லேசான தருணங்களை நாம் மிஸ் பண்ணவே கூடாது.