தினசரி உணவிற்கு பின் ஒரு துண்டு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஏற்படாது என ஊட்டச்சத்து நிபுணர் கூறியுள்ளார். 


கோடை என்றாலே நம் நினைவுக்கு வரும் ஒரு விஷயம் மாம்பழம். கோடை காலம் தொடங்கிய முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மாநிங்களில் 40 டிகிரியை கடந்து பதிவாகியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெயிலில் மக்கள் செல்வதால் வெப்ப அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  ஒருசிலருக்கு வெயிலின் தாக்கத்தால் ஒவ்வாமை, மலச்சிக்கல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும்.


கோடை காலத்தில் பரவலாக கிடைக்கும் ஒரு பழம்தான் மாம்பழம். இந்த மாம்பழம் பற்றி பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உள்ளது. மாம்பழத்தை சாப்பிட்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், உடல் சூட்டை கிளப்பி உடல் உபாதைகள் ஏற்படும் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. ஆனால் உண்மையில் மாம்பழத்தில் சிறந்த ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி உணவு அருந்திய பின் ஒரு துண்டு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.






மாம்பழத்தின் பலன்கள் மற்றும் தினசரி உணவிற்கு பின் ஒரு துண்டு மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மன்ப்ரீத் கல்ரா தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உணவை உட்கொண்ட பின் அது வயிற்றுக்கு சென்று, அங்கு கல்லீரலில் சுரக்கும் பைல் அமிலம் மூலம் செரிமானம் நடக்கிறது. ஒரு சில சமையங்களில் இந்த அமிலம் மற்றும் வயிற்றில் இருக்கும் பிற அமிலங்கள் சரியாக சுரக்காமல் போவதால் அஜீரணக் கோளாறு, வயிறு உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. மாம்பழத்தில் உணவை செரிமானம் செய்யும் அமிலங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக அமிலைஸ், ப்ரோடீஸ், லிபேஸ் உள்ளிட்ட அமிலங்கள் நிறைந்திருப்பதால் உணவிற்கு பின் ஒரு துண்டு மாம்பழம் சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படாது. ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்” என கூறியுள்ளார்.


மேலும் மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்து உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது என்றும் கூறியுள்ளார். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த மாம்பழம் நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. அவை இதயம் மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.