ஓஎம்ஆர் சாலை என்றால் உயர் ரக சொகுசு வாகனங்கள் பறக்கும் சாலை என்றுதான் நாம் அறிந்திருப்போம். ஒய்யாரமான கட்டிடங்களும், பளபளக்கும் ஓட்டல்களும் வழி நெடுகிலும் அணிவகுத்து இருக்கும்.


ஆனால், அந்தச் சாலையில் ஒரு குட்டிக் கடை இருக்கிறது. அது குழிப்பணியாரக் கடை. அந்தக் கடை அலங்காரமாகவோ ஒய்யாரமாகவோ இல்லை. ஓனர்களான கருப்பையாவும் செல்லம்மாளும் மிடுக்காக செஃப் தொனியிலும் இல்லை. ஆனால், அந்தக் கடையைத் தாண்டிச் செல்வதற்கு முன் இருச்சக்கர வாகனங்களும், கார்களும் நின்று பனியாரம் வாங்காமல் செல்வதில்லை. திரும்பத் திரும்ப வாடிக்கையாளர்கள் ஒரு கடையை நாடுகின்றனர் என்றால் அங்கு சுவைக்கு குறைவில்லை என்றுதானே அர்த்தம்.


வாங்க, கருப்பையா, செல்லம்மாள் கடைக்கு ஒரு விசிட் அடிப்போம்.


கடையின் பெயரே 'குழிப்பணியாரம் கடை' தான். பாட்டி கடை, ஆயா கடை போல் பாந்தமான பெயர். கூகுளில் இந்தக் குட்டிக்கடைக்கு ரிவிவ்யூவ் குவிந்திருக்கிறது. 5க்கு 4.8 ரிவிவ்யூவ் கொடுத்துள்ளனர் வாடிக்கையாளர்கள். ப்ராண்டிங் வேல்யூவின் மதிப்பை உரைக்கும் பெயர் இது. கடையில் விதவிதமான உணவு எல்லாம் இல்லை. இனிப்புப் பணியாரம், காரப் பணியாரம் இரண்டே வகைதான். கடையில் உள்ள கருப்பையாவும் செல்லம்மாளும் தான் செஃப், வெயிட்டர், வரவேற்பாளர் எல்லாமே. 


"எங்கள் வீடு பெருங்குடியில் இருக்கு. நாங்கள் வீட்டிலேயே மாவை தயார் செய்துகொள்கிறோம். இனிப்புப் பணியாரத்துக்கான மாவு, காரப் பணியாரத்துக்கான மாவு, மூன்று வகை சட்னி என எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டுவந்துவிடுவோம். சுத்தமாக எல்லாவற்றையும் தயார் செய்கிறோம். தரமான பொருட்களைப் பயன்படுத்துகிறோம். அதனாலேயே மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறோம். அப்புறம் மிக முக்கியமாக நாங்கள் சோடா உப்பு பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் கூட எங்களின் பணியார வகைகள் உப்பிவரும். மிருதுவாக இருக்கும். 6 பணியாரம் ரூ.30க்கு விற்கிறோம். பார்செல் வாங்கிச் சென்றால் கூடுதலாக ரூ.2 வசூலிக்கிறோம்" என்று கூறுகிறார் கருப்பையா. வியாபாரத்துக்கான கடை கூட நல்ல மனிதர் ஒருவர் தானமாகக் கொடுத்தது என்று நன்றியுடன் நினைவு கூர்கிறார் கருப்பையா.


இந்தக் கடையை கருப்பையா, செல்லம்மாள் தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர். இதுவரை எப்போதுமே கடையை மூடிவிடலாமா என்று இருவரும் நினைத்ததில்லை. அந்த அளவுக்கு எப்போதும் அவர்களின் வியாபாரம் களைகட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இடையில் கொரோனா ஊரடங்கின்போது சிறு சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் ஊரடங்கு தளர்வு நீக்கப்பட்ட உடனேயே கடையைத் தேடி சில வாடிக்கையாளர்கள் வருகை தந்துள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. இருந்தாலும் வழக்கமாக ஐடி நிறுவன ஊழியர்களுக்காக இரவு 11 மணி வரை பணியாரக் கடை ஊரடங்கு காலத்தில் வெறும் மாலை 5 மணிவரை மட்டுமே இயக்கப்பட்டதில் சிறு நஷ்டம்தான் எனக் கூறுகின்றனர் அந்த இணையர்.


இப்போது கடையை கூடுதல் நேரம் திறக்க அனுமதி இருந்தாலும் கூட ஐடி நிறுவனங்கள் பலவும் ஒர்க் ஃப்ரம் ஹோம் முறைக்கு தள்ளப்பட்டுள்ளதால் வியாபாரம் சற்றே மந்தமாக நடக்கிறது என வருத்தப்படும் கருப்பையா, செல்லம்மாள் தம்பதி மீண்டும் வசந்தம் வீசும் நாட்களுக்காக காத்திருக்கின்றனர். ஓஎம்ஆர் சாலை வழியில் பயணித்தால் தவறவிடக்கூடாத இடம்  கருப்பையா, செல்லம்மாள் இணையின் 'குழிப்பணியாரம் கடை' .