”எப்பவாச்சும்னா ஓகே. எப்பவும் லிஃப்ல போகனுமா? ஸ்டெப்ஸ்ல நடந்து போலாமே? வாங்க..” அலுவலகம், வெளியே எங்கயாவது போனால் குறைந்த அளவில் ஃப்ளோர்கள் இருக்கும்போது இப்படி ஊக்குவிக்கும் அக்கறையுடன் அறிவுரைக்கும் ஒரு நபர் எல்லார் நட்பு வட்டத்திலும் இருக்கத்தான் செய்கிறார்.
லிஃப்ட்
அடுக்குமாடி கட்டிடங்களில் முதல் தளத்திற்கு செல்வதற்கு கூட லிஃப்ட் பயன்படுத்தினால் எப்படி என்பதே கேள்வியாக முன்வைக்கப்படுகிறது. உடல் உழைப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற சின்ன சின்ன வாழ்வியல் முறை மாற்றங்களால் நம் உடலை ஆரோக்கியத்துடன் பேணி பாதுகாக்க முயற்சி செய்யலாம் இல்லையா.?
சரி. இதை மருத்துவ உலகமும் ஆதரிக்கிறது. படிக்கட்டுகளை பயன்படுத்துவது இதயத்திற்கு ஆரோக்கியமான உடற்பயிற்சி என்கிறார்கள். ஏனெனில் இது கார்டியோஸ்பிரேட்டரி ஃபிட்னஸை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் இதயத்தில் ஏதேனும் கோளாறு உள்ளதா என்பதைக் கண்டறிய உதவலாம். படிக்கட்டுகளில் ஏறுவது வெற்று தரையில் நடப்பதை விட அதிக விளைவைக் கொடுக்கும். உடலின் கீழ்ப்பகுதிக்கு உடற்பயிற்சியாகவும் இது அமையும். நாம் பணிபுரியும் வாழ்க்கை முறை காரணமாக எந்த இயக்கமும் இல்லாமல் போவதற்கு மாற்றாக சிறு முயற்சியாக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க படிக்கட்டு ஏறுவதும் நல்லது.
படிக்கட்டுகளின் பயன்:
லிஃப்ட்களுக்குப் பதிலாக படிக்கட்டுகளில் செல்வது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய , பயனுள்ள வழியாகும். கொல்கத்தாவின் நியூடவுனில் உள்ள ஓஹியோ மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் மருத்துவ இயக்குநரான டாக்டர் ஜெயதி ரகித் இது தொடர்பான விளக்கம் அளிக்கிறார். லிஃப்டிற்கு மாற்றாக படிக்கட்டுகளை பயன்படுத்தும்போது, உங்கள் இருதய நலனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
இதய ஆரோக்கியம் மேம்படும்
தினமும் நடைப்பயிற்சி செய்ய போதிய நேரம் இல்லாவிட்டாலும் எதாவதொரு வகையில் உடல் இயக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். படிக்கட்டுகள் ஏறுவதால் கால்கள் மற்றும் கால் பகுதிகளில் உள்ள தசை ஆகியவற்றிற்கு வலு சேர்க்கிறது. வழக்கமான படிக்கட்டு ஏறுதல் உங்கள் இதயத் துடிப்பை உயர்த்தி, சிறந்த இருதய உடற்திறனை ஊக்குவிக்கிறது. காலப்போக்கில் இதய நோய ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
கலோரி குறையும்
வெயிட் மேனேஸ்மெண்ட் நோக்கமாக உள்ளோர் படிக்கட்டுகளை தேர்ந்தெடுப்பது கலோரிகளை எரிக்க உதவுகிறது. எடை மேலாண்மைக்கு உதவுகிறது மற்றும் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கிறது. உடல் பருமன் இதயப் பிரச்சனைகளுக்கு முக்கிய பங்களிப்பாகும். படிக்கட்டுகளில் ஏறுவது தசைகளுக்கு வேலை கொடுக்கிறது. ஆரோக்கியமான எடையை பராமரிப்பது இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
இரத்த ஓட்டம் மேம்படும்
படிக்கட்டு ஏறுதல் உங்கள் உடல் முழுவதும் சிறந்த இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. ஏறும்போது இதயம் அதிக இரத்தத்தை பம்ப் செய்கிறது. உங்கள் தசைகள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இந்த மேம்பட்ட சுழற்சி இரத்த உறைவு, மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கும்,
கொலஸ்ட்ரால் கன்ட்ரோல்
படிக்கட்டுகள் ஏறுவதால் உடலில் தேவையற்ற கொழுப்பு கரையும்.
மன அழுத்தம் குறையும்
படிக்கட்டுகளில் ஏறுவது மன அழுத்தத்தைக் குறைக்கும். உடல் செயல்பாடு எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும் இயற்கையான மனநிலையை மேம்படுத்துகிறது. நாள்பட்ட மன அழுத்தம் இதய நோயுடன் இணைக்கப்பட்டுள்ளது, எனவே வழக்கமான படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிப்பது உங்கள் இதயத்தில் ஒரு பாதுகாப்பு விளைவை ஏற்படுத்தும்.
உங்கள் அன்றாட வழக்கத்தில் இந்த எளிய மாற்றத்தை இணைத்துக்கொள்வது ஆரோக்கியமான இதயத்திற்கும் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும். எனவே, அடுத்த முறை படிக்கட்டுகள் மற்றும் லிஃப்ட் எதை தேர்வு செய்யலாம் என்று நினைத்தால், உங்கள் இதயத்தின் நலனுக்காக படிக்கட்டுகளில் ஏறுவதை வழக்கமாக்கவும் என்கிறது ஆய்வு இதழ். மறந்துடாதீங்க.