குளிர்காலம் வந்துவிட்டது. கூடவே வறண்ட சருமமும் வந்துவிடும் தானே. நாமும் சந்தையில் விற்கும் பல்வேறு வின்டர் க்ரீம்களை வாங்கி பூசிக் கொள்கிறோம். நெல்லிக்கனி குளிர்காலத்தில் உட்கொள்ள ஒரு சிறந்த கனி. இதில் வைட்டமின் சி உள்ளது. ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் உள்ளன. அதனால் குளிர்காலத்தில் நெல்லிக்கனி சாப்பிடுங்கள். சிலருக்கு அதை அப்படியே சாப்பிடப் பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் நெல்லிக்கனியை ஜாம், ஜூஸ், பொடி வடிவில் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
நெல்லிக்கனி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தருவதோடு சருமத்தை பொலிவு பெறச் செய்கிறது. நெல்லியைக் கொண்டு சருமப் பொலிவு எப்படிப் பெறுவது என்பது பற்றி நாங்கள் இங்கே பட்டியலிடுகிறோம்.
1. நெல்லி, மஞ்சள் ஃபேஸ் பேக்
குளிர்காலத்தில் நெல்லியும் மஞ்சளும் சிறந்த ஃபேஸ் பேக்காக இருக்கும். இதனால் முகப்பரு, மரு, கரும்புள்ளிகள் அகலும். 2 ஸ்பூன் ஆம்லா பவுடர் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை 2 ஸ்பூன் பூசுமஞ்சளுடன் சேர்க்கவும். அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த கலவையை 15 நிமிடங்கள் முகத்தில் பூசவும். பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவிப் பாருங்கள் முகம் பிரகாசிக்கும்.
2. நெல்லிக்காய் சாறு
சிலருக்கு முகத்தில் பருக்களும், வடுக்களும் படிந்து பாடாய்ப் படுத்தும். அவர்கள் நெல்லிக்கனியை சாறாக்கி பூசி வரலாம். ஒரு நெல்லிக்கனியை எடுத்து அதன் சாறை பிழிந்து அதனை அப்படியே 15 நிமிடங்கள் முகத்தில் பூசவும். 15 நிமிடங்களுக்குப் பின்னர் முகத்தை கழுவிவிடலாம். இதனை அன்றாட பழக்கமாக்கிக் கொள்ளலாம்.
3. நெல்லிக்கனி தேன் மாஸ்க்
நெல்லிக்கனி தேன் மாஸ்கும் நல்ல பலன் தரும். நெல்லிக்கனி சாறு, பப்பாளி கூழ் மற்றும் தேன் இவற்றை கலந்து எடுத்துக் கொள்ளுங்கள் அதனை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவுங்கள். இது குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும். மேலும் சருமம் மிகவும் மிருதுவாகவும் இருக்கும்.
4. நெல்லிக்கனி, கற்றாழை சாறு
நெல்லியைப் போல் முகத்தில் கற்றாழையும் பூசலாம். ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் 1 ஸ்பூன் ஆம்லா பவுடர் சேர்க்கவும். இதை முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் கழுவிவிடவும்.
5. தயிருடன் நெல்லிக்கனி
தயிரும் நெல்லிக்கனி சாறு சேர்த்து பூசுவதால் குளிர் கால சரும வறட்சிக்கு சிறந்த தீர்வு கிட்டலாம். ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் சேர்த்து அதனை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடவும். இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், வடுக்களை போக்கும்.