கல்லீரலின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்குவது; உணவு செரிமானத்திற்கு பிறகு உறிஞ்சிக் கொண்ட சத்துகளை உடல் முழுவதும் ரத்தத்தில் கலக்கும் பணி உள்ளிட்டவற்றை அயராது செய்து வருவதும் கல்லீரல் தான். உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வதும் கல்லீரல் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களால சிலவற்றை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அவை,
- பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதில் க்ளைக்கமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருப்பதால் கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வதற்கு வழிவகுக்கும்.
- அதிக சர்க்கரை உள்ள உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
- மது அருந்துவது, புகைப்பிடிப்பது ஆகியவற்றிற்கு பெரிய ‘நோ’ சொல்ல வேண்டும்.
- கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க ’ரெட் மீட்’ சாப்பிடுதை தவிர்க்க வேண்டும்.
- அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
கல்லீரலில் கொழுப்பு சேர்வது உடல் நலனுக்கு மிகவும் மோசமானது. கல்லீரல் செயல்பாடு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாறிவரும் நவீன வாழ்வியல் முறைகள் காரணமாக கல்லீரலில் கொழுப்பு சேரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தொடர் பாதிப்புகள் கல்லீரலின் இயக்கத்தையே நிறுத்தக்கூடியது. அதிகளவில் மது அருந்துவது, உடல் பருமன் கொண்டோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
கல்லீரல் நோய் என்பதன் வளர்ச்சி மிகவும் மெதுவாக நடைபெறும் ஒன்று என்பதால் வாழ்க்கை முறைகளை ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலமாக மாற்றுவது மட்டுமே கல்லீரல் பாதிப்புகள் பெருகாமல் தவிர்க்கும். ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது, உப்பு, கொழுப்பு உட்கொள்வதைக் குறைத்துக் கொள்வது, அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, மது தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் கல்லீரல் பாதிப்பு ஏற்படுதை தடுக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்லீரலில் உடலுக்கு தேவையான கொழுப்பு குறிபிட்ட அளவில் இருக்கும். ஆனால்,அதன் அளவு அதிகரிக்கும்போது அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கல்லீரலில் கொழுப்பு படிந்தால் அதன் அறிகுறிகள் ஆரம்பத்தில் தெரியாது. நாளாக நாளாக அதை கவனிக்காவிட்டால், கல்லீரல் செயல் இழந்துவிடும் ஆபத்து உள்ளது. இருப்பினும், உங்களுக்கு கல்லீரலில் கொழுப்பு சேர்ந்திருப்பது கண்டறிந்தவுடன் உடனே மருத்துவரின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அதோடு, உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை பின்பற்றி கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை கரைக்க முடியும் என்கின்றனர்.
கல்லீரல் கொழுப்பை சரிசெய்ய சாப்பிட வேண்டிய உணவுகளாக நிபுணர்கள் பரிந்துரைப்பவை..
ப்ளாக் காஃபி:
காலையில் எழுந்ததும் ஒரு கப் காஃபி குடிக்காமல் நாளே தொடங்காது என்று நினைப்பவராக இருந்தால், பால் சேர்த்து குடிப்பதற்கு பதிலாக ப்ளாக் காஃபி குடித்து பழகலாம். இதோடு, பட்டை தூள் சேர்த்தும் அருந்தலாம். ப்ளாக் காஃபியில் ஆன்டி- ஆக்ஸிடன் நிறைந்திருக்கிறது. இது கல்லீரலின் செயல்பாட்டிற்கு உதவும். பாதிக்கப்பட்ட கல்லீரலின் நிலையை சீராக உதவும்.
கீரை வகைகள்:
கீரை வகைகளில் ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது நாம் அறிந்ததே. வாரத்தில் மூன்று நாட்களுக்கு கீரை வகைகளை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. kale கீரை உள்ளிட்ட கீரை வகைகளை சாப்பிடுவது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும். வைட்டமின் ஏ, சி, கே, உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. தினமும் குறிப்பிட்ட அளவு கீரை வகைகளை சாப்பிடுவது கல்லீரல் பாதிப்பை சரிசெய்ய உதவும்.
அவகாடோ:
அவகாடோ மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது. வைட்டமின் இ, சி, உள்ளிட்ட சத்துள்ள கல்லீரலில் உள்ள செல்களை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
மஞ்சள்:
தென் இந்திய சமையலில் மஞ்சள் இல்லாமல் சமையல் இருக்கவே முடியாது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். உணவு, இஞ்சி டீயில் மஞ்சள் சேர்க்கலாம்.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.