நம்மில் பலரும் சகஜமாக ஒரு குட்டித் தூக்கம் போட்டு வருகிறேன் என்று பேசுவதுண்டு. ஆனால் அந்தக் குட்டித் தூக்கத்தை தான் மருத்துவர்கள் பவர் நேப் என்று கூறுகிறார்கள். அதன் நன்மைகள் ஏராளம் என்றும் பட்டியலிடுகின்றனர்.


சாப்பாட்டுக்கு அப்புறம் வேலை நிமித்தமாக அமரும் போது தூக்கம் கண்களை சுழற்றும். ஆனால் பணியிடத்தில் எப்படி தூங்குவது என்பதால் அதைக் கட்டுப்படுத்தி, முகத்தை கழுவி, டீ குடித்து, நடந்து திரிந்து சமாளித்து வேலையை செய்து முடிக்கும் போது தலையில் வலி சூழ்ந்திருக்கும். இதைத் தவிர்க்கவே பவர் நேப்பை பரிந்துரைக்கின்றனர். நேப் என்ற ஆங்கில வார்த்தைக்கு சிறு தூக்கம் என்று அர்த்தம். அதாவது 10 நிமிடங்களுக்கும் மிகாத தூக்கம். சாப்பிட்ட பின்னர் ஏற்படும் மயக்கத்தை ஃபுட் கோமா எனக் கூறுகின்றனர். ஜீரணத்தைத் தூண்ட வயிற்றுப் பகுதிக்கு ரத்தம் பாய்ந்தோடும். அப்போது சில துளிகள் மூளைக்கும் பாயும். இந்த திடீர் பாய்ச்சல் தூக்கத்தை உண்டாக்கும். ஆனால் பவர் நேப் எடுத்துக் கொண்டால் இதில் இருந்து தப்பிக்கலாம். இது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


நாசா கூட இது குறித்து ஆய்வுகள் செய்துள்ளதாம். அதில் பவர் நேப் மனதின் நினைவாற்றலை அதிகரிக்கிறதாம். அதேபோல் கவனச்சிதறலைப் போக்கி கவனத்தை குவித்து, படைப்பாற்றலையும் மேம்படுத்துகிறதாம். நாசாவின் இந்த ஆய்வறிக்கைக்குப் பின்னரே பவர் நேப் பற்றிய தகவல்கள் பரவலாக கவனம் பெற ஆரம்பித்துள்ளன என்றால் அது மிகையாகாது.


ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்கறை:


பெங்களூருவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு மதியத்தில் அரை மணி நேரம் பவர் நேப் எடுக்க அனுமதி தருகிறது. இதனால் ஊழியர்களின் நலன் மேம்படும் என அவர்கள் நம்புகின்றனர். இது குறித்து வேக்ஃபிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சைத்தன்ய ராமலிங்கேகவுடா, எங்கள் நிறுவனத்தில் ரைட் டூ நேப் பாலிசியை அமல்படுத்தியுள்ளோம் என்றார். குட்டித் தூக்கம், பூனைத் தூக்கம் என்றழைக்கப்படும் 26 நிமிட தூக்கம் ஒருவரின் செயல்திறனை 33% அதிகரிக்கிறதாம். ஹர்வார்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியும் பவர் நேப்பை ஆதரிக்கிறது.
 
பவர் நேப் விளக்கம் என்ன?


பவர் நேப் என்பது தூக்கம் அல்ல. இது மீண்டெழுவதற்கான புத்துணர்வை பெறுவதற்கான பயிற்சி. 2015ல் பிரசுரமான ஓர் ஆய்வறிக்கையில் ஷார்ட் நேப்ஸ் என்பது குழந்தைகளின் நினைவாற்றலையும் பெரியவர்களின் செயல்திறனையும் மேம்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 மடங்கு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
 
பணியிட பவர் நேப்:


டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மேற்கொண்ட ஆய்வில் பவர் நேப் தனது ஊழியர்களின் செயல்திறனை அதிகரித்ததோடு, அவர்கள் தவறுகள் செய்வதையும் குறைத்துள்ளது. இது மூட் ஸ்விங்கை தவிர்த்து, வேலையில் கவனமாக, எச்சரிக்கையாக செயல்பட உதவுகிறது.
உடலில் வலிமையை அதிகரிக்கிறது. பணியாட்கள் தங்கள் சக்தி அனைத்தும் உறிஞ்சப்பட்டதுபோல் உணர்வதை தவிர்க்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.