ஐடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதிக ஊதியம் அதிக நாட்களுக்கு நீடிக்காது என்று ஸோஹோ நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’எங்களின் பணியாளர்களின் இதை நான் அடிக்கடி சொல்வேன். மெக்கானிக்கல் பொறியாளர்கள் அல்லது சிவில் பொறியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், வேதியியலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட, சாஃப்ட்வேட் பொறியாளர்கள் அதிகம் ஊதியம் பெறுகிறார்கள். ஆனால் அது அவர்களின் பிறப்புரிமை எதுவும் அல்ல. இதை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த அதிக ஊதியம் கடைசி வரை நீடிக்கும் என்றும் நாம் கற்பனை செய்துகொள்ள முடியாது.
Only the paranoid survive
நம்முடைய பொருட்களுக்காக நிறுவனங்கள் நமக்குப் பணம் செலுத்துவதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது நாம் "சீர்குலைக்கப்படலாம்" என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காகவே. நாம் அவ்வாறு இருக்க மாட்டோம் என்று நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகக் கருதுகிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவ்வாறுதான் இருப்போம். எப்போதும் ஒரு ஆபத்து நிலையை கவனத்தில் கொண்டு செயல்படுபவர்களே நிலைத்திருப்பார்கள் (Only the paranoid survive) என்று இண்டெல் நிறுவனத்தின் Andy Grove கூறுவார்.
மென்பொருள் மேம்பாட்டில் (LLMs + tooling) வரும் உற்பத்தித்திறன் புரட்சி, நிறைய ஐ.டி. வேலைகளை அழிக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இது கவலைக்குரியது என்றாலும் அதை உள்வாங்கிக் கொள்வது முக்கியம்’’.
இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
அசுர வேகத்தில் ஏஐ வளர்ச்சி
உலகம் முழுக்க ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும் தேவையும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சர்வதேச பண நிதியம் (IMF) கூறும்போது, உலக அளவில் 40 சதவீத வேலைவாய்ப்புகளை ஏஐ கைக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த கால ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் அனைத்தும் வழக்கமான ஒரே மாதிரியான வேலைகளைத்தான் பாதித்தன. ஆனால் செயற்கை நுண்ணறிவுக்கு, அதி உயர்திறன் தேவைப்படும் வேலைகளில் (high skilled jobs) தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் இருக்கிறது. இது பொருளாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேம்பட்ட பொருளாதாரத்தில் 60 சதவீத வேலைகளில் ஏஐ தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச பண நிதியம் கவலை தெரிவித்துள்ளது.