தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஆர்வமுள்ள பொறியியல் பட்டதாரிகள் அக்டோபர் 16 க்குள் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக தென்னிந்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் இயங்கிவருகிறது. இவ்வாரியத்தின் மூலம் பொறியியில் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பினை முடித்த மாணவர்கள், மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு மாத உதவித்தொகையுடன் ஓராண்டு கால தொழில் பழகுநர் பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டுவருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தைக்கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சிகளை அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சிக்குப்பிறகு தொழில் வாரியத்தின் மூலம் தரப்படும் சான்றிதழ் வைத்திருந்தால் அரசுப்பணிகளில் முன்னுரிமை வழங்கப்பட்டுவருகிறது.
அதன்படி, இந்தாண்டு தற்போது திருச்சி அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் நடத்தப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்குத் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கும்பக்கோணம் கிளையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால், கும்பகோணம் கிளை மற்றும் தென் மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்துடன் இணைந்து ஆன்லைன் மூலம் பயிற்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைன் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், இயந்திரவியல்(mechanic) தானியங்கிவியலில் (automation) துறையின் கீழ் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்ற திருச்சி மாவட்டத்தைச்சேர்ந்த தகுதியான நபர்கள் www.boat.srp.com என்ற இணையத்தின் மூலமாக தகவல்களைப்பெற்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து,அக்டோபர் 16க்குள் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதிக்கு பிறகு தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆன்லைன் வாயிலாக அவர்களுக்கு பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியின் மூலம் பெறப்படும் சான்றிதழை வைத்திருக்கும் நபர்கள், எந்தப்பணிக்கு சென்றாலும் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தென்னிந்திய தொழில் பழகுநர் பயிற்சி மையத்தின் மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு மற்ற மாநிலங்களை விட தமிழக இளைஞர்களிடம் தான் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் மின்வாரியம், போக்குவரத்துத்துறை என அரசின் பல்வேறு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் தொழில் பழகுநர் பயிற்சி தொடர்ச்சியாக அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் இந்த பயிற்சி வாரியத்தின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளம் போன்ற மாநிலங்களிலும் இந்த சேவைகளை பொறியியல் பட்டதாரிகள் பெற்றுவருகின்றனர்.