தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கான 2513 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட உள்ள போட்டித் தேர்வுகளுக்கு, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார்.

Continues below advertisement


கூட்டுறவுத் தேர்வு 


தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் www.drbchn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 29 ஆகும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு, வரும் அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இலவசப் பயிற்சி வகுப்புகள்


போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கூட்டுறவுத்துறை தேர்வுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் பயனடையும் வகையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த வகுப்புகளில், பாடத்திட்டத்தின்படி முக்கியப் பாடப் பிரிவுகளான பொது அறிவு, கணிதம், தமிழ் மற்றும் கூட்டுறவுச் சட்டங்கள் குறித்த அடிப்படை தகவல்கள் ஆகியவற்றில் விரிவான பயிற்சி அளிக்கப்படும். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட உள்ளதால், விண்ணப்பதாரர்கள் தேர்வை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்துத் திறன்களையும் பெற முடியும்.


பயிற்சியில் சேர 


இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், கீழ்க்கண்ட ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.



  • வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை



  • கூட்டுறவுத் தேர்வுக்கான விண்ணப்ப நகல்



  •  பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.



  •  ஆதார் அட்டையின் நகல்.


இந்தப் பயிற்சி வகுப்புகள், மயிலாடுதுறை கால் டாக்ஸியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் உள்ள பாலாஜி நகரில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும். மாணவர்கள் நேரிலோ அல்லது வாட்ஸ்அப் எண் மூலமாகவோ கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


கடைசி நிமிடத் தேடலைத் தவிர்க்கவும்


போட்டித் தேர்வுக்குத் தயாராகும் பலர், சரியான வழிகாட்டுதலும், பாடத்திட்டத்திற்கான தெளிவான விளக்கமும் இல்லாமல் சிரமப்படுகின்றனர். தனியார் பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் செலுத்திப் பயிற்சி பெறுவதற்குப் பதிலாக, இந்த இலவச வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், மாணவர்கள் தங்களின் நேரத்தையும், பணத்தையும் சேமிக்க முடியும்.


மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், எந்த ஒரு போட்டித் தேர்விலும் வெற்றிபெற, தொடர்ச்சியான முயற்சி, விடாமுயற்சி மற்றும் சரியான வழிகாட்டுதல் ஆகியவை மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


தொடர்புக்கு


முன்பதிவு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு, 9499055904 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இந்த இலவசப் பயிற்சி வகுப்புகள், கிராமப்புற மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இளைஞர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, கூட்டுறவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.