பொறியியல் பட்டதாரிகள் மற்றும் கடைசி ஆண்டு மாணவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. இதில் பயிற்சி அளிக்கப்பட்டு, மாதாந்திர உதவித்தொகையாக 56 ஆயிரத்து 400 ரூபாய் அளிக்கப்பட உள்ளது.
இந்திய ராணுவம் தனது 143வது தொழில்நுட்ப பட்டதாரி படிப்பு (TGC)-க்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியுள்ளது. ஜூலை 2026 இல் தொடங்கும் இந்த பயிற்சிக்கு, ஆர்வமுள்ளவர்கள் joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நவம்பர் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் (IMA) பயிற்சி பெறுவார்கள். பயிற்சி காலத்தில் அவர்களுக்கு மாதம் ரூ. 56,400 உதவித் தொகையுடன் பிற படிகளும் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் லெப்டினன்ட் பதவியில் நியமிக்கப்படுவார்கள்.
12 மாத டிஜிசி பயிற்சியின் போது, லெப்டினன்ட், கேப்டன், பிரிகேடியர் மற்றும் மேஜர் ஜெனரல் போன்ற பதவிகளுக்கு பதவி உயர்வு பெறுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். உயர்மட்ட பதவிகளில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ. 2.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் இந்திய ராணுவத்தின் உடல் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
என்னென்ன?
10 நிமிடம் 30 வினாடிகளில் 2.4 கி.மீ ஓட்டம்,
40 புஷ்-அப்கள், 6 புல்-அப்கள், 30 சிட்-அப்கள்,
ஸ்குவாட்ஸ் மற்றும் லஞ்சஸ் தலா இரண்டு செட்கள் மற்றும்
அடிப்படை நீச்சல் திறன் ஆகியவை அடங்கும்.
ஆரம்பக்கட்ட தேர்வு, விண்ணப்பதாரரின் இன்ஜினியரிங் மதிப்பெண்களின் அடிப்படையில் அமையும்.
குறுகிய பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேவை தேர்வு வாரிய (SSB) நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இது உளவியலாளர், குழு தேர்வு அதிகாரி மற்றும் நேர்காணல் அதிகாரி ஆகியோரால் நடத்தப்படும். ஐந்து நாட்கள் நடைபெறும் SSB நேர்காணலில் இரண்டு நிலைகள் உள்ளன.
இரண்டையும் முடித்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் இந்திய ராணுவ அகாடமி, டேராடூனில் பயிற்சி பெறுவார்கள். பயிற்சியை முடித்த பிறகு, அவர்களின் பொறியியல் பிரிவு மற்றும் ஒட்டுமொத்த தகுதியின் அடிப்படையில் ராணுவப் பிரிவுகள் ஒதுக்கப்படும்.
தகுதி வரம்பு
வயது: 20 முதல் 27 ஆண்டுகள் வரை.கல்வி: பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.இறுதி தகுதிப் பட்டியல் SSB நேர்காணல் மற்றும் பொறியியல் பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது.
விண்ணப்பிக்கும் முறை
-
முதலில் https://joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
-
"Officers Entry" பிரிவில் "Apply/Login" என்பதைக் கிளிக் செய்யவும்.
-
புதிய பயனர்கள் "New Registration" என்பதைக் கிளிக் செய்து, ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்கள் விவரங்களுடன் உள்நுழையலாம்.
-
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://joinindianarmy.nic.in/default.aspx