காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மூலம் வறுமையை ஒழிக்கும் வகையிலும், கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்ட அலுவலகம் மற்றும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களான காஞ்சிபுரம்-2, குன்றத்தூர்-3, உத்திரமேரூர்-2, வாலாஜாபாத்-4, ஸ்ரீபெரும்புதூர்-3 ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் (BC) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
கல்வித் தகுதி மற்றும் பிற நிபந்தனைகள்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன், குறைந்தபட்சம் 3 மாத MS Office கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல் (Computer Science) / கணினி பயன்பாடுகள் (Computer Applications) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 35 அதற்குள்ளாக இருக்க வேண்டும். மேலும், SHG அல்லது PLF-ல் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட வட்டாரத்தைச் சேர்ந்த இருப்பிடத்தைக் கொண்டவராக இருக்க வேண்டும். அத்துடன், இருசக்கர வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது, நன்னடத்தை சான்று சமர்ப்பிப்பது மற்றும் முன்னாள் TNSRLM, புதுவாழ்வு திட்டம், IFAD திட்டம் அல்லது பிற மாநில அரசுத் திட்டங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணியாற்றும்போது பணிநீக்கம் செய்யப்படாதவராக இருக்க வேண்டும் என்பன முக்கிய நிபந்தனைகளாகும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்
தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.08.2026 அன்றைக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் - 631 502. மேலும் dpiu_kpm@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம். எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 07.08.2026-க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
