செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்த மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவிடும் வகையில், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு முகாமையானது வரும் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி (மூன்றாவது வெள்ளிக்கிழமை) அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்களும், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் நேரடியாகப் பங்கேற்கின்றன. இந்த நிறுவனங்களின் மனிதவளத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி மற்றும் பங்கேற்பதற்கான வழிமுறைகள்

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பி.இ. படித்தவர்கள், ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக உதவியாளர்கள் போன்ற சிறப்புத் துறைசார்ந்த கல்வியைப் பெற்ற வேலைநாடுநர்களும், மாற்றுத்திறனாளி இளைஞர்களும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியுடைய நபர்கள், தங்களின் கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், சுயவிவரக் குறிப்பு (Bio Data) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் முகாமிற்கு நேரில் வர வேண்டும்.

Continues below advertisement

முகாம் நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு விவரங்கள்

21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், தரைத்தளம், "D"-பிளாக்கில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இம்முகாம் நடைபெறும். வேலையளிப்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் அனைவரும் இம்முகாமில் முற்றிலும் இலவசமாகப் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இத்தனியார்துறை முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எந்தச் சூழலிலும் ரத்து செய்யப்படமாட்டாது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-27426020, 9499055895, 9486870577, 8248185171 மற்றும் 8122140214 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் வீரப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.