சென்னை: அரசு வங்கியில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 28 கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,715 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

இதில் தமிழ்நாடு கிராம வங்கியில் மட்டும் 464 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பல்வேறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 464 பணியிடங்கள்

Continues below advertisement

தமிழ்நாட்டில் அலுவலக உதவியாளர் முதல் மூத்த மேலாளர் வரையிலான பல்வேறு நிலைகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அலுவலக உதவியாளர் பணிக்கு 244 இடங்களும், அதிகாரி நிலை-I பணிக்கு 90 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகாரி நிலை-II பிரிவில் பொது வங்கி அதிகாரி பணிக்கு 49 இடங்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 11 இடங்கள், பட்டயக் கணக்காளர் பணிக்கு 2 இடங்கள், சட்டப் பிரிவில் 5 இடங்கள், கருவூல மேலாளர் பணிக்கு 2 இடங்கள், மார்க்கெட்டிங் அதிகாரி பணிக்கு 2 இடங்கள், வேளாண்மை அதிகாரி பணிக்கு 11 இடங்கள் என மொத்தம் 91 இடங்கள் உள்ளன.

மேலும், அதிகாரி நிலை-III என்ற மூத்த மேலாளர் பணிக்கு 48 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழகத்தில் மட்டும் மொத்தம் 464 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பட்டதாரிகளுக்கு செம வாய்ப்பு

அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக, அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியை நன்கு அறிந்திருப்பது அவசியமாகும். கணினியை இயக்கும் திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மற்ற அதிகாரி நிலை பணிகளுக்கு பணிக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். தகவல் தொழில்நுட்பம், சட்டம், கணக்கியல், வேளாண்மை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறைகளில் தொடர்புடைய பட்டம் அல்லது சிறப்புத் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேளாண்மை அதிகாரி போன்ற குறிப்பிட்ட பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி அனுபவமும் தேவைப்படும். எனவே, ஒவ்வொரு பணியிடத்திற்கான கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து விண்ணப்பிப்பது அவசியம்.

வயது வரம்பு

அலுவலக உதவியாளர் பணிக்கு 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகாரி நிலை-I பணிக்கு 18 முதல் 30 வயது வரையிலும், அதிகாரி நிலை-II பணிக்கு 21 முதல் 32 வயது வரையிலும், அதிகாரி நிலை-III மூத்த மேலாளர் பணிக்கு 21 முதல் 40 வயது வரையிலும் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது உச்சவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு எப்படி நடைபெறும்?

பணியிடங்களுக்கு ஏற்ப முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதிகாரி நிலை-I மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன.

முதல்நிலைத் தேர்வு 2026 நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட ஆன்லைன் தேர்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 21, 2026 ஆகும். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகவும், எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.175 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு வங்கி சேவைகளை எளிதில் கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் கிராம வங்கிகளில் பணியாற்றுவதற்கான இந்த ஆட்சேர்ப்பு, பட்டதாரிகளுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 464 இடங்கள் இருப்பதால், வங்கி வேலைக்காக தயாராகி வரும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முன், பணியிடத்துக்கு உரிய கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம், தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழுமையாக சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.ibps.in/wp-content/uploads/Window-Notification_CRP-RRBs-XV.pdf