உலக கல்லீரல் தினம் (WLD) என்பது பொது மக்களுக்கு கல்லீரல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ஆம் தேதி கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய சுகாதார நிகழ்வாகும்.
இந்த ஆண்டு, 2023, உலக கல்லீரல் தின கருப்பொருள் " விழிப்புடன் இருங்கள், வழக்கமான கல்லீரல் பரிசோதனை செய்யுங்கள், கொழுப்பு கல்லீரல் யாரையும் பாதிக்கலாம் ." உடல் பருமன் (அதிக எடை), இன்சுலின் எதிர்ப்பு (நீரிழிவு) மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்ற ஆபத்துக் காரணிகளைப் பொருட்படுத்தாமல், கொழுப்பு கல்லீரல் யாரையும் பாதிக்கும் என்பதால், வழக்கமான கல்லீரல் பரிசோதனையின் நடைமுறையை வலியுறுத்துவதே இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஆகும்.
சூப்பர் உறுப்பு: கல்லீரல் நம் உடலின் சூப்பர் உறுப்பு என்றால் அது மிகையாகாது. ஏன் தெரியுமா? ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களையும், கழிவுகளையும் நீக்குவது மட்டுமின்றி, செரிமானத்தின்போது உறிஞ்சிக் கொண்ட சத்துகளை உடல் முழுவதும் ரத்தத்தில் கலக்கும் பணியில் ஈடுவதும் கல்லீரல் தான். உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வதாலேயே அது சூப்பர் உறுப்பாக உள்ளது.
அப்படிப்பட்ட கல்லீரலைப் பேண செய்ய வேண்டிய, செய்யக் கூடாத காரியங்கள் சில இருக்கின்றன.
ஆரோக்கியமான கல்லீரலுக்கு செய்யக் கூடியவை:
1. தாராளமாக பச்சைக் காய்கறிகள், கீரைகள், ப்ரோகோலி, பாகற்காய் ஆகியனவற்றை சாப்பிடுங்கள்
2. வால்நட், அவகாடோ, ஆலிவ் ஆயில் போன்ற நல்ல கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.
3. உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடலில் நீர்ச்சத்து சீராக இருந்தால் தான் அது இயற்கையான டீடாக்ஸிகேடிங் ஏஜென்டாக இருக்கும். நீர்ச்சத்து இருந்தால் தான் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும்.
4. உணவில் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் சி உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
5. மற்றபடி எல்லா நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ள சொல்லப்படும் ஒரே தீர்வு தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள்.
கல்லீரல் பாதுகாப்புக்கு செய்யக்கூடாதவை
1. பதப்படுத்தப்பட்ட உணவுகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்க்கவும். இவற்றில் க்ளைசிமிக் இண்டக்ஸ் அதிகமாக இருக்கும். அதனால் ஃபேட்டி லிவர் பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் சர்க்கரை அளவையும் அதிகரிக்கும்.
2. சேச்சுரேடட், ட்ரான்ஸ் ஃபேட் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். அவரி கெட்ட கொழுப்பு நிறைந்தவையாகும். வறுத்த உணவும் அதிகம் உட்கொள்ளக் கூடாது.
3. மது அருந்தக் கூடாது. மது அருந்துதல் உடலில் உள்ள நீர்ச்சத்தை நீக்கிவிடும். அதனால் உடலில் இருந்து நச்சுத்தன்மைகள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்
4. அதிகப்படியாக இறைச்சி உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
5. சாக்கலேட்டுகள், கேண்டி, குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை அதிகமுள்ள உணவைத் தவிர்க்கவும்.
கல்லீரலின் மொத்த பயன்களாக 500 பயன்கள் பட்டியலிடப்படுகின்றன. நாம் உண்பது உணவு, மது, விஷம் என எதுவாக இருந்தாலும் அதன் மீது செயலாற்றுவது கல்லீரலின் முதன்மைப் பணி. எனவே நாம் உண்ணும் நச்சுப் பொருள்கள் அனைத்துமே கல்லீரலால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன. மேலும் ரத்தத்தில் ஏற்படும் தொற்றுகளும் கல்லீரலைப் பாதிக்கின்றன. கல்லீரலில் கொழுப்பு சேர்வதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து கல்லீரலின் இயக்கத்தையே நிறுத்தக் கூடியது.